Tag Archives: history of mutual funds

மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யப் போகிறீர்களா ? இந்திய பரஸ்பர நிதியின் சுருக்கமான வரலாறு

மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யப் போகிறீர்களா ? இந்திய பரஸ்பர நிதியின் சுருக்கமான வரலாறு 

A Brief history of Mutual Funds in India – MF Industry Insights

கடந்த அக்டோபர் மாத முடிவில், இந்திய பரஸ்பர நிதி நிர்வகிக்கும் சொத்து மதிப்பு(AUM) மட்டும் 79.87 லட்சம் கோடி ரூபாய். அதாவது கடந்த ஐந்து வருடங்களில் மூன்று மடங்கு வளர்ச்சியையும், இதுவே பத்து வருட காலத்தில் ஆறு மடங்கு வளர்ச்சியையும் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014ம் ஆண்டின் மே மாத முடிவில் இந்திய மியூச்சுவல் பண்ட் துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாயாக இருந்துள்ளது.இது அடுத்த மூன்று வருடங்களில் 20 லட்சம் கோடி ரூபாயாக(ஆகஸ்ட் 2017) விரைவான வளர்ச்சியை அடைந்திருந்தது. 

பொதுவாக பங்குச்சந்தையில் முதலீடு செய்வது இன்று எளிமையாக்கப்பட்டிருந்தாலும், அதற்கான திறன்களும், நிறுவனங்களை பகுப்பாய்வு செய்வதும் அவ்வளவு எளிதல்ல. அதற்கான முறையான கல்வியையும், அடிப்படையாக தொழில் முறையை புரிந்து கொள்ளுதல் மற்றும் முதலீட்டின் மீதான கவனம் அவசியம். இதற்கான நேரத்தை செலவிட இயலாதவர்கள் தகுந்த நிதி ஆலோசகரின் வழிகாட்டுதல் படி, தங்களது முதலீட்டு முடிவுகளை எடுக்கலாம். 

அதே வேளையில், இது அனைவருக்கும் சாத்தியமா மற்றும் அதற்கான கட்டணத்தை கவனத்தில் கொள்வதும் அவசியம். இதற்கு மாற்றாக காணப்படுவது தான், பரஸ்பர நிதி முதலீடு எனப்படும், ‘மியூச்சுவல் பண்டு(Mutual Funds)’. மியூச்சுவல் பண்டு என்றவுடன் நம்மில் பெரும்பாலானோர் ஏதோ சீட்டு பண்டு என்றோ அல்லது பங்குச்சந்தையில் முழுவதுமாக முதலீடு செய்வது, இதன் காரணமாக ரிஸ்க் அதிகமிருக்கும் என எண்ணிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் மியூச்சுவல் பண்டு துறை பல்வேறு, கலப்பின முதலீட்டு வாய்ப்புகளை நமக்கு அளிக்கிறது. 

நாம் பங்குகள், தங்கம், வெள்ளி, ரியல் எஸ்டேட், அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்கள் என பல்வேறு வகையான முதலீட்டு திட்டங்களை மியூச்சுவல் பண்டில் தேர்ந்தெடுக்கலாம். இல்லையெனில் இவற்றினை கலந்த திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். பிரபலமான வெளிநாட்டு சந்தைகளிலும், அதன் பங்கு நிறுவனங்களிலும் நாம் மியூச்சுவல் பண்டு மூலம் முதலீட்டை மேற்கொள்ளலாம். ஒவ்வொரு திட்டங்களுக்கு தகுந்தாற் போல ரிஸ்க் தன்மை மாறுபடும். குறைந்த மற்றும் நடுத்தர காலத்திற்கு ரிஸ்க் குறைந்த முதலீட்டு திட்டங்கள், நீண்டகாலத்தில் அதிக வருவாய் ஈட்ட ரிஸ்க் அதிகம் கொண்ட திட்டங்கள் என நமது இலக்குகளுக்கு ஏற்றவாறு முதலீடு செய்யலாம்.

மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்வதால் சிறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் வங்கிகளில் கிடைக்கப்பெறும் வட்டி விகிதத்தை விட, அதிகமாக வருவாய் பெறுவதும் மேலும் சில கூடுதல் நன்மைகளும் உள்ளன. குறிப்பாக நமது முதலீட்டை கவனித்து கொள்ள திறன் கொண்ட பண்டு மேலாண்மை குழு(Professionally Fund Management), ரிஸ்க்கை பரவலாக்குதல்(Diversification), அவசர தேவைக்கு எளிமையாக பணத்தை திரும்பப் பெறுதல்(Liquidity), குறைந்த கட்டணம்(Low Cost) மற்றும் குறைந்த முதலீட்டு தொகை(Investing in Small amounts), மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதி(Upgraded Technology), முறையான ஒழுங்குமுறை ஆணையம்(Regulator – SEBI AMFI) மற்றும் வரிச்சலுகை(Tax Benefits) ஆகியவை. இன்னொரு சிறப்பு – மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு(Demat Account) தேவையில்லை.

காலங்காலமாக, நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்த மற்றும் நாம் அறிந்த சேமிப்பு மற்றும் முதலீடு திட்டங்கள் எனில் தங்கம், நிலம், வீடு, வங்கி டெபாசிட், அஞ்சலக சிறு சேமிப்பு மற்றும் பி.எப். ஆகியவை தான். இவை அத்தனையும் கொண்ட ஒரு பெரும் சந்தையை கொண்டது தான் மியூச்சுவல் பண்டு துறை. நாம் நினைப்பதும் போல இந்தியாவில் மியூச்சுவல் பண்டு முதலீடு கடந்த பத்து, இருபது வருடங்களுக்கு முன்பு துவக்கப்பட்டது அல்ல. 

கடந்த 1963ம் ஆண்டு வாக்கில் இந்திய அரசால் யூ.டி.ஐ.(Unit Trust of India – UTI) எனப்படும் மியூச்சுவல் பண்டு நிறுவனம் முதன்முதலில் துவக்கப்பட்டது. இதுவே இந்தியாவின் மியூச்சுவல் பண்டு துறைக்கான அடித்தளம். அப்போது ரிசர்வ் வங்கி(Reserve Bank of India) இதற்கான ஒழுங்குமுறை ஆணையமாக செயல்பட்டிருந்தது. தற்போது இதனை செபி(SEBI-AMFI) கவனித்து கொள்கிறது. இந்தியாவில் 1987ம் ஆண்டு வரை யூ.டி.ஐ. மியூச்சுவல் பண்டு மட்டுமே கோலோச்சியது குறிப்படத்தக்கது. இதற்கு பிறகான காலத்தில் அரசு பொதுத்துறை வங்கிகள் மியூச்சுவல் பண்டு துறையில் தங்களது கால்களை பதித்தன எனலாம்.

1992ம் ஆண்டுக்கு பிறகு பெரும்பாலான தேசியமயமாக்கப்பட்ட தனியார் வங்கிகளும் இத்துறையில் நுழைந்தன. இன்று இந்தியாவில் செபியில் பதிவு செய்யப்பட்ட மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 52. மியூச்சுவல் பண்டு நிர்வகிக்கும் சொத்து மதிப்பு(AUM) அடிப்படையில் முன்னிலையில் உள்ள சில நிறுவனங்கள்,

  1. SBI Mutual Fund
  2. ICICI Prudential Mutual Fund
  3. HDFC Asset Management
  4. Kotak Mahindra Mutual Fund
  5. Nippon Life India Fund
  6. Aditya Birla Sunlife(ABSL) Mutual Fund
  7. UTI Mutual Fund
  8. Axis Asset Management
  9. Mirae Asset Investment Managers(India)
  10. DSP Mutual Fund

எஸ்.பி.ஐ. மியூச்சுவல் பண்டு நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு மட்டும் 11.13 லட்சம் கோடி ரூபாய்(டிசம்பர் 2024 தரவு). ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் எச்.டி.எப்.சி. முறையே ரூ.8.73 லட்சம் கோடி மற்றும் 7.87 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இந்தியாவின் மியூச்சுவல் பண்டு நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில்(MF AUM to GDP Ratio) 19.9 சதவீதமாக உள்ளது(மார்ச் 2025). AMFI(Association of Mutual Funds in India) அமைப்பின் சமீபத்திய மதிப்பீட்டின் படி, இந்திய மியூச்சுவல் பண்டு துறை 2047ம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பை தாண்டி இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.    

இந்திய மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்கள் 13 சதவீத பங்களிப்பை குறைந்த மற்றும் நடுத்தர ரிஸ்க் கொண்ட திட்டங்களிலும், 87 சதவீத தொகையை அதிக ரிஸ்க் கொண்ட பங்குகளிலும் முதலீடு செய்கின்றனர். இதுவே நிறுவனங்கள்(வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்கள், அன்னிய நாட்டு நிறுவனங்கள்) 53 சதவீத தொகையை குறைந்த மற்றும் நடுத்தர ரிஸ்க் தன்மை கொண்ட திட்டங்களிலும், 47 சதவீதத்தை பங்குகளிலும் மேற்கொள்கின்றனர். செப்டம்பர் 2025 தரவின் படி, சிறு முதலீட்டாளர்களின் மொத்த முதலீட்டு சொத்து மதிப்பு 47.21 லட்சம் கோடி ரூபாயாகவும், நிறுவன முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 30.57 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யும் முன் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய காரணிகள்:

  1. எதற்காக முதலீடு செய்ய உள்ளோம் ? (இலக்குகளை நிர்ணயித்தல்)
  2. எவ்வளவு காலத்திற்கு மேற்கொள்ள உள்ளோம் ? (இலக்குகள் வரை காத்திருத்தல், இடையில் பணத்தை எடுக்காமல் இருத்தல்)
  3. எதிர்பார்க்கும் வருவாய் ? (வங்கி வட்டி விகிதங்களை காட்டிலும் சற்று அதிகம், பணவீக்கத்தை தாண்டிய வருவாய் பெறுதல், போன்சி மோசடிகள், கந்து வட்டி போன்ற பேராசை கூடாது)
  4. திட்டங்களை சரியாக புரிந்து கொள்ளுதல் அல்லது நமது பணம் எங்கே  முதலீடு செய்யப்படுகிறது என அறிந்திருத்தல்.
  5. நாம் மேற்கொள்ளும் முதலீட்டில் அவசர தேவைக்கு பணத்தை திரும்ப பெற முடியமா மற்றும் வரிச்சலுகை எப்படி ? (தொடர் முதலீடு அவசியம், ஆனால் அவசரமும் கவனம் கொள்ள வேண்டியவை)

மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய, பங்குச்சந்தையை போல திறமையை கொண்டிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. மாறாக மேலே சொன்ன ஐந்து காரணிகளை புரிந்து கொண்டு முதலீடு செய்தால் போதுமானது. 

“பொதுவாக நமது இலக்குகள் சார்ந்த முதலீடுகளுக்கு மியூச்சுவல் பண்டு எனும் வளமான மரத்தையும், செல்வம் ஈட்டுவதற்கு(ரிஸ்க் அதிகம்) நேரடியாக பங்குகள் எனும் மாமரத்தையும் தாங்கி பிடித்துக் கொள்ளலாம் !”

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com