Tag Archives: Covid-19

மெல்ல மெல்ல ஏற்றம் பெறுகிறதா இந்திய பங்குச்சந்தை ? – மாய வர்த்தகம்

மெல்ல மெல்ல ஏற்றம் பெறுகிறதா இந்திய பங்குச்சந்தை ? – மாய வர்த்தகம் 

Is the Indian Stock Market trading upside ? Trading illusion

பொருளாதார மந்தநிலை மற்றும் கோவிட்-19 காலங்களில் உலக பங்குச்சந்தைகள் வீழ்ச்சி கண்டு வருவதும், பின்பு சில நாட்களின் வர்த்தகத்தில் பெரிய அளவில் ஏற்றம் பெறுவதும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. பங்குச்சந்தையில் இது போன்ற ஏற்றங்கள் எதனை பிரதிபலிக்கின்றன ?

பொதுவாக பங்குச்சந்தையில் ஊக வணிகங்கள்(Speculation) நடைபெற்று வந்தாலும், நீண்ட காலத்தில் அதன் தாக்கம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சியை சார்ந்து தான் வழிநடத்தும். இவற்றில் முரண்பாடு ஏற்பட்டால், பின்னொரு காலத்தில் பங்குச்சந்தை தன்னை தானே சரி செய்து கொள்ளும். இதனை தான் நாம் பங்குச்சந்தை வீழ்ச்சி என்கிறோம்.

கடந்த சில வருடங்களாக உலக பங்குச்சந்தையில் உள்ள முக்கிய குறியீடுகள் வாழ்நாள் உச்சத்தில் வர்த்தகமாகி வந்தன. அதே வேளையில், அவற்றை சார்ந்த நாட்டின் வளர்ச்சியும்(GDP Growth), நிறுவனங்களின் வருவாயும்(Earnings) சொல்லிக்கொள்ளும் படி இல்லை. கடந்த ஒன்றரை வருடங்களாக உலகளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலை, உள்நாட்டில் ஏற்பட்ட வாகனத்துறைக்கான சுணக்கம் ஆகியவை பங்குச்சந்தையை மந்தநிலைக்கு கொண்டு சென்றது.

பின்பு, கொரோனா வைரஸ் என்ற நிகழ்வு வந்தவுடன், அதனை காரணமாக கொண்டு பங்குச்சந்தை அதன் உண்மை தன்மையை வெளிப்படுத்தியது. இதன் வெளிப்பாடு தான் தற்போது உலகளவில் ஏற்பட்ட சந்தை வீழ்ச்சியாகும். கடந்த காலத்தில் இது போன்ற வீழ்ச்சி ஏற்பட்டு, பின்பு பங்குச்சந்தை பெருமளவில் மீண்டதும் வரலாற்று புள்ளிவிவரங்கள். தற்போதைய நிலை எப்போது முடிவடையலாம் என யாராலும் அவ்வளவு எளிதாக கணிக்க முடியாது.

இருப்பினும் சந்தை வீழ்ச்சியும், பொருளாதார மந்தநிலையும் நிரந்தரமாக இருக்க போவதில்லை. சந்தை வீழ்ச்சி(Stock Market Crash) என்பது நீண்ட கால முதலீட்டை பொறுத்தவரை ஒரு மிகப்பெரிய வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும். மதிப்புமிக்க முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை சரிவை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, முதலீடு செய்ய துவங்குவர். அவர்கள் பெரும்பாலும் காளை சந்தையை விரும்புவதில்லை. கரடி சந்தையில் மட்டுமே அவர்கள் பணம் பண்ணும் வாய்ப்பை பெறுகின்றனர்.

பணக்கார முதலீட்டு ஜாம்பவான், திரு. வாரன் பப்பெட்(Warren Buffet) அவர்களின் முதலீட்டு உத்தியில் இதுவும் ஒன்று. அவர் அதிக விலை கொடுத்து எந்தவொரு பங்குகளையும் வாங்க விரும்புவதில்லை. பங்குச்சந்தை வீழ்ச்சியும் நாட்டின் பொருளாதாரத்திற்கு தேவையான ஒன்று தான். நிறுவனங்களின் வருவாய் குறைந்திருந்தாலும், அதன் தன்மை பங்குகளின் விலையிலும் தென்பட வேண்டும். இது பொதுவாக சந்தை ஏற்ற(Bull Market) காலங்களில் தெரிவதில்லை. ஆனால் சந்தை தொடர்ச்சியாக வீழும் போது உண்மையான மற்றும் மதிப்புமிக்க பங்குகளின்(Value Stocks) விலை நிலைத்து நிற்கும் அல்லது மலிவாக கிடைக்கப்பெறும். மற்ற பங்குகள் முதலீட்டாளர்களால் ஒதுக்கப்படும்.

கடந்த 2008ம் ஆண்டின் பொருளாதார வீழ்ச்சியின் போது(Global Financial Crisis), இந்திய பங்குச்சந்தை ஒரே வருடத்தில் 60 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியை சந்தித்தது. அந்த வேளையில், பெரும்பாலானவர்கள் தங்கள் முதலீட்டை இழந்து சந்தையை விட்டு ஒதுங்கினர். சரியான உத்தியை பயன்படுத்தி முதலீடு செய்தவர்கள் இன்று கோடீஸ்வரர்களாக உள்ளனர் என்றால் மறுப்பதற்கில்லை. இது தான் வீழ்ச்சியின் ரகசியம்.

2008 Financial Crisis trading

2008ம் ஆண்டின் போது, இந்திய பங்குச்சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் பெருமளவிலான பங்குகளை விற்று கொண்டும், உள்ளூர் முதலீட்டாளர்கள் வாங்கி கொண்டும் இருந்தனர். இப்படி இருக்கையில், எப்போது தான் அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க முன் வருவர் ? ஏன், உள்ளூர் முதலீட்டாளர்கள் மட்டும் சந்தை வீழ்ச்சியின் போது வாங்க முன் வர வேண்டும் ?

உண்மையில், அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேறுவதில்லை. தங்களது பழைய முதலீடுகளை (லாபத்தில் இருக்கும்) விற்று விட்டு, புதிய பங்குகளை மலிவான விலையில் வாங்குவர். இந்த முதலீட்டு அளவு வேண்டுமானால் மாறுபடலாம். உள்ளூர் முதலீட்டாளர்கள் சந்தை இறக்கத்தில் புதிய முதலீட்டை மேற்கொள்வர். அவ்வளவே.

உதாரணமாக, 2008ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் ரூ. 29,447 கோடியை நிகர விற்பனையாக கொண்டிருந்தனர். அதாவது சொல்லப்பட்ட மாதத்தில், ரூ. 97,579 கோடிக்கு பங்குகளை புதிதாக வாங்கியும், ஏற்கனவே இருந்த முதலீட்டில் ரூ. 1.27 லட்சம் கோடி அளவிலான பங்குகளை விற்றும் இருந்தனர். வெறுமனே நிகர விற்பனையை மட்டும் நாம் கருத்தில் கொள்ள கூடாது.

தற்போதைய ஏற்றம் ஒரு தற்காலிகமானதே. ஒரு மாத ஊரடங்கு உத்தரவு, ஒரு வருட வருவாய் பாதிப்பை ஒரு நிறுவனத்திற்கு ஏற்படுத்தும். வேலைவாய்ப்பின்மை விகிதம், வாங்கும் திறன் குறைவு, விற்பனை வளர்ச்சி ஆகியவை வெகுவாக பாதிக்கப்படும். இதன் தாக்கம் வரும் நாட்களில் பொருளாதார வளர்ச்சி குறியீடு மற்றும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளில் தெரிய வரும். ஊரடங்கு உத்தரவில் தனிமனித வாழ்வு பாதிக்கப்படும் போது, நிறுவனங்கள் தப்பி பிழைத்து விடுமா என்ன ?

சில துறைகளுக்கு வேண்டுமானால் அரசின் சலுகைகள் இது போன்ற காலங்களில் கிடைக்கப்பெறலாம். அனைத்து நாடுகளின் அரசுகளும் பங்குச்சந்தை வீழ்ச்சியை தடுக்க புதிய சலுகைகளை அறிவிக்கும். இதன் காரணமாக சில நாட்கள் சந்தை ஏற்றம் பெறும். ஆனால் நீண்ட காலத்தில் ஒரு சந்தை ஏற்றம் பெறுவதற்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், நிறுவனங்கள் மற்றும் தனிமனித வருவாய் மிகவும் அவசியமாகும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நேர்மறை சிந்தனையை கைவிடுங்கள் – கொரோனா வைரஸ் பாதுகாப்பு

நேர்மறை சிந்தனையை கைவிடுங்கள் – கொரோனா வைரஸ் பாதுகாப்பு

Don’t think Positive – Precautions to protect yourself and family from Covid-19

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வீட்டில் யாராவது சொன்னாலே கேட்க மாட்டோம், அதுவும் நமக்கே அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாத காலத்தில், அரசு சொல்லும் எச்சரிக்கையை நாம் கேட்டு விடுவோமா – என்ன ?

https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

நடந்து கொண்டிருப்பது ஒரு போர்க்கால அடிப்படை நிகழ்வு, ஒரு உலக போர் நடைபெறுவது போன்ற நிகழ்வு, அதுவும் உங்களை சுற்றி ஜாம்பிகளும், வெள்ளமும் சூழ்ந்திருக்கும் நிலை. ஆம், வேலைக்கு செல்ல முடியாதது தான், தொழில் புரிய முடியாது. சொந்த பந்தங்களை காண முடியாது. அரசாங்கம் உங்களை பாதுகாக்க முடியாது என சொன்னால் நீங்கள் என்ன செய்து விட முடியும்.

நீங்களாக தானே, பாதுகாத்து கொள்ள முடியும் – அது தான் Survival of the Fittest.

நாம் தேசப்பற்றை கொண்டாடுகிறோம், நமது ஜாதி, மத கொள்கைகளை பெருமையாக நினைக்கிறோம். பல சாகசங்களை புரிய எண்ணுகிறோம். இந்த உலகம் அழிவதில்லை, மாறாக தீய மனிதம் அழிய போகிறது. உங்களை நீங்களே காத்து கொள்ள நேர்மறை எண்ணங்களை கொண்டிருக்காதீர்கள், எதிர்மறை நிகழ்வை கவனியுங்கள்.

உங்களுக்கு இப்போது நேர்மறை எண்ணம் தேவையில்லை, பாதகமான நிகழ்வை உணருங்கள், உண்மையில் இப்போதைய தேவை விழிப்புணர்வும், அதனை சார்ந்த தன்னம்பிக்கையும் தான். இந்த உலகில் பல்வேறு காலகட்டங்களில் வெற்றி பெற்ற சமுதாயமும், சாதித்தவர்களும் கொண்டிருந்தது விழிப்புணர்வுடன் கூடிய தன்னம்பிக்கையே தவிர, நேர்மறை எண்ணங்கள் அல்ல.

  • வீட்டை விட்டு வெளியே  வராதீர்கள் என சொன்னால், வாக்கிங் – ஜாக்கிங் என செல்ல கூடாது. கூட்டம் சேர கூடாது, கொரோனா வைரஸ் காற்றில் பரவ கூடும். நீங்கள் நடைப்பயிற்சி செல்லும் பாதையில் தொற்று இல்லை என்பதை உங்களால் கண்டறிய முடியாது.
  • இது ஒரு போர்க்கால நிகழ்வு, விடுமுறை அல்ல. இன்றைய காலத்தில் உங்களுக்கான வசதி வீட்டில் தான் உள்ளது. தொலைக்காட்சி, கைபேசி, இணையம், தூக்கம் இவை தான் எப்போதும் வீட்டில் உள்ளதே. வேறென்ன வேண்டும். வேலைக்கு சென்றாலும் அங்கே நாம் என்ன செய்து விட போகிறோம் (சில உண்மையான உழைப்பாளிகள் தவிர). மனித நேயம் செலுத்த வேண்டிய நேரத்தில், நாம் கைபேசியை பயன்படுத்தி கொண்டிருந்தோம். இப்போது உறவு வேணும் என்கிறோம் ?
  • சுகமான வாழ்க்கையை இப்போது எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் ஏற்கனவே மகிழ்ச்சி உள்ளது. தொலைக்காட்சி பார்ப்பவர்கள் அதனை காணுங்கள், கைபேசி மற்றும் இணையம் உள்ளது. முக்கியமாக இது போன்ற சமயங்களில் மின்சாரம் தடைபடாமல் வந்து சேர்கிறது.
  • மற்ற காலங்களில் நாம் தேவையில்லாத பொருட்களை வாங்கி குவிப்போம். இப்போதும் அதனை செய்து விடாதீர்கள். நமக்கு தேவை அத்தியாவசிய உணவு மட்டுமே, அதுவும் ஆடம்பர உணவு அல்ல. கஞ்சியோ, கூழோ – தக்கன பிழைத்து வாழ்வதற்கான(Survival) சூழ்நிலையை தேர்ந்தெடுங்கள். வருங்காலங்களில் இதனை விட நாம் மோசமாக வாழும் நிலை வரும். எனவே, அவசரகால நிலையை புரிந்து கொண்டு இப்போது வாழ்வது நலம்.
  • இதுவரை வீட்டில் சமைத்து பழகாதவர்கள் இப்போது முயற்சிக்கலாம். ஆனால், நன்றாக சமையல் செய்பவரின் ஆலோசனையுடன் மட்டுமே. விபரீதமாக சமையலை செய்து சாப்பிட்டு விட்டு, அப்புறம் இது போன்ற காலங்களில் மருத்துவமனைக்கு சென்று விட வேண்டாம்.
  • ‘ நான் எப்போதும் வேலை செய்து கொண்டே இருப்பது எனது இயல்பு, நான் எப்படி இப்போது வீட்டிற்குள் முடங்கி கிடைக்க முடியும் ‘ – இப்போது நீங்கள் ஒரு ஆணியையும் புடுங்க தேவையில்லை. சும்மா இருப்பது தான் மனிதத்தின் இயல்பு. நாம் தான் நிறைய சிந்தனைகளை தலையில் ஏற்றி கொண்டு மூடர்களாக வலம் வருகிறோம். அதெல்லாம், உலக நிகழ்வு நன்றாக இருக்கும் போது பார்த்து கொள்வோம். இப்போதைய தேவை, சும்மா இருப்பது மட்டுமே.
  • சிந்தனைகளை மெருகேற்றுவதற்கான காலமிது – உலக வைரஸ் தாக்கங்களை பற்றி படியுங்கள், உங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை இப்போது திருப்பி பாருங்கள், அவசர காலங்களில் எவ்வாறு வாழ வேண்டும் என்ற சிந்தனையை உங்கள் மனதில் ஏற்படுத்துங்கள். பிற்காலங்களில் அது உங்கள் குழந்தைகளுக்கு உதவலாம்.
  • எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை நம்பியிருக்க வேண்டாம், அதே வேளையில் அரசு சொல்லும் எச்சரிக்கையை உதாசீனப்படுத்த வேண்டாம். கொரோனா நிகழ்வுக்கு எந்த நாட்டையும், ஜாதி – மதத்தையும் நிலை நிறுத்த வேண்டாம். இல்லுமினாட்டி(illuminati) என சொல்லிக்கொண்டு நாம் குதர்க்கமாக சிந்திக்க வேண்டாம். இப்போது நாம் நம்மை தற்காத்து கொள்வதே.
  • நம் நாட்டில் வீடு இல்லாமல், ஒரு வேளை உணவு கூட கிடைக்க முடியாமல் சாலையில் பலர் போராடி கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தான் உதவி தேவை. மற்றவர்கள் அவர்கள் வீட்டில் அமைதியாக இருக்கலாம்.
  • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு வாரங்களுக்கு முன்பு வரை, தங்கள் நாட்டில் எந்த பிரச்னையும் இல்லை. வேலைவாய்ப்பு நன்றாக இருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கம் எங்கள் நாட்டில் பெரிய அளவில் இல்லை. எங்கள் பொருளாதாரத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றார். ஆனால், இன்று அமெரிக்க பொருளாதாரமும், அதன் மக்களும் ஆட்டம் கண்டுள்ளனர். அதிபர் டிரம்ப், ‘ இது உண்மையிலே ஒரு தொற்று நோய் தான். நான் ஏற்கனவே இதனை பற்றி எண்ணி கொண்டிருந்தேன். அமெரிக்காவில் ஊரடங்கு உத்தரவு வருகிறது. இது அவசரகால நிலை தான்’ என கடந்த வாரம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.
  • சில நாடுகளில் அவசரம் அவசரமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், நம் நாட்டில் அது போன்ற நிகழ்வும் நடைபெறவில்லை. நாம் அடுத்த சில நாட்களுக்கோ அல்லது வாரங்களுக்கோ தேவையான உணவுப்பொருட்களை வாங்கி கொள்ள வேண்டிய நேரமும் இருந்தது. இப்போதும் சில இடங்களில் அந்த வாய்ப்பு உள்ளது. சந்தைக்கு சென்று தான் வாங்க வேண்டுமென்ற அவசியமில்லை.
  • 50, 100 ரூபாயை மிச்சப்படுத்துகிறேன் என கூட்ட நெரிசலில் சென்று விட்டு, உங்கள் குடும்பத்திற்கு கொரோனா வாய்ப்பை கொடுத்து விட வேண்டாம். நான் ஏற்கனவே சொல்லியிருப்பது போல, இது போர்க்கால நிகழ்வு தான். சென்னையில் வெள்ளம் வந்த போது இருந்த நிலை நமக்கு தெரிந்திருக்கலாம். சிக்கனமாக இருந்து, நமக்கு கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டு அடுத்த சில நாட்களுக்கு நமது வாழ்வை நகர்த்துவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. முடிந்தால், உங்கள் அருகில் உள்ள வசதி இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவி செய்யுங்கள்.
  • தற்போது 144 தடை மட்டுமே உள்ளது. அதாவது அவசர தேவைக்கு பொருட்களை வாங்கி கொள்ளலாம். பொது இடங்களில் கூட்டம் மட்டுமே கூட கூடாது என்பது சட்டம். மீண்டும் அரசாங்கத்தின் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், நாம் வீட்டை விட்டு வெளியேற முடியாது.
  • நாம் தொழில்நுட்பத்தில் முன்னேறி இருந்தாலும், உண்மையில் மனிதர்கள் இன்றளவிலும் சுகாதாரத்தில் முன்னேற்றம் பெறவில்லை எனலாம். தனிமனிதர்களிடம் ஏற்படும் சுகாதாரமின்மை தான் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு காரணம். இது முந்தைய காலரா, மலேரியா போன்றவற்றிற்கும் பொருந்தும்.
  • எனக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது, எங்கள் ஊருக்கு கொரோனா எல்லாம் வருவதில்லை என சொல்பவரா நீங்கள் ?  நீங்கள் தான் மற்றவர்களுக்கு இந்த நோயை பரப்புவதற்கான தூதராக இயற்கையால் நியமிக்கப்பட்டுள்ளீர்கள் 🙂
  • இது சாதாரண காய்ச்சல் தான் எனினும், நமது சமூக கூட்டம் மற்றும் முறையில்லாத பழக்க வழக்கங்களால் இது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்துகிறது. உலகமயமாக்கலில் வளரும் நாடுகள், கொரோனா வைரஸ் தாக்குதலால் தங்கள் பெயருக்கு(சுற்றுலா துறை, முதலீடு, தொழில்) களங்கம் ஏற்படும் என சில புள்ளிவிவரங்களை மறைக்கலாம். ஆனால் நமக்கு மட்டுமே தெரியும், நமது உயிரும், குடும்பமும் எவ்வளவு முக்கியமென்று.
  • வெளியே செல்லாதீர்கள், மற்ற சில நாடுகளை போன்று அவர்கள் காவல் துறை மற்றும் ராணுவத்தை கொண்டு நம்மை அடக்கும் நிலைக்கு நாம் வர  வேண்டாம். உண்மையில் இதன் காரணமாக அரசு சார்பில் செல்லும் அவசர ஊழியர்கள் தான் பாதிக்கப்படுவர். காவல் துறைக்கும் யார் மருத்துவர், அரசு சார்பில் செல்லும் அவசரமானவர் என தெரிய வாய்ப்பில்லை. அதற்கான நேரமும் இப்போது இல்லை.

அரசியல்வாதிகளை நம்ப வேண்டாம், அரசின் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டாம். இது நம் வாழ்க்கை, நம் சந்ததிகளின் எதிர்கால வாழ்க்கை. எச்சரிக்கையாக இருங்கள். பஞ்சம் பட்டினியால் இறப்பு விகிதங்கள், பல நோய்களால் பாதிப்புகள், சாலை விபத்துகள் என பல கூறுகளால் தினந்தோறும் இறந்தவர்களின் எண்ணிக்கையை கொரோனா வைரஸ் பாதிப்புடன் ஒப்பிட வேண்டாம்.

இந்த கொரோனா (Covid-19) குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் தான் முடிந்துள்ளது. இதுவரை உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 4.71 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 21,283. கடந்த மூன்று நாட்களில் 10 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம் இன்று 16 சதவீதமாக அதிகரித்துள்ளது. 15,000 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இந்த கொரோனா பாதிப்பு அடுத்த ஆறு மாதங்கள் இருந்தால் என்னவாகும் ? இது ஒரு பேரழிவு என்றே சொல்லலாம். இந்த இயற்கை நிகழ்வை சரி செய்ய நாம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

வரும் முன் காப்போம் என்பதும் ஒரு விழிப்புணர்வுடன் கூடிய எதிர்மறை சிந்தனையே(Negative Thought). அடுத்த சில வாரங்கள் நாம் வீட்டில் பாதுகாப்பாக, நம்மை தனிமைப்படுத்தி இருக்கும் பட்சத்தில், நாமும் இந்நாட்டின் தேச தலைவர்களாக வலம் வரலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கொரோனா வைரஸ் – 144 தடை – இணைய வேகம் எப்படி இருக்கும் ?

கொரோனா வைரஸ் – 144 தடை – இணைய வேகம் எப்படி இருக்கும் ?

Internet Speed during the Curfew – Coronavirus – Covid-19

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை உலகளவில் (இந்திய நேரப்படி காலை 8 மணி) 3.78 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 16,514 மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.02 லட்சம் பேர். நம் நாட்டில் இதுவரை 499 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் முக்கியமானது நமது மதுரை மாநகரிலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய பங்குச்சந்தையில் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தை இரண்டு குறியீடுகளும் சுமார் 13 சதவீத வீழ்ச்சியை சந்தித்தன. நாட்டின் இரு சந்தைகளும் நடப்பு வருடத்தில் 37 சதவீத இறக்கத்தை கண்டுள்ளன. கொரோனா வைரஸ்(Coronavirus) எதிரொலியால் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் தினசரி வணிகத்தை மேற்கொள்ள முடியாமல் நோயின் பரவலை தடுக்க, தொழில் புரிவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ரயில்களும், பேருந்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சில  நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்த படியே, தொழில் சேவைகளை அளிக்கும் படி கேட்டு கொண்டுள்ளது.

வீட்டிலிருந்து தொழில் சேவைகளை அளிக்கும் ஊழியர்களுக்கு பெரும்பாலும் தேவைப்படுவது இணைய பயன்பாடு மட்டுமே. நாட்டில் சுமார் 6 கோடிக்கும் அதிகமான இணைய பயன்பாட்டாளர்கள் உள்ளனர். சில ஊழியர்கள் தங்கள் நிறுவன சேவைக்காக பிராண்ட் பேண்ட் சேவைகளுக்கும் விண்ணப்பித்துள்ளனர்.

நமது நாட்டை பொறுத்தவரை கைபேசி வழியிலான இணைய பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை தான் அதிகமாக காணப்படுகிறது. தற்போதைய நிலையில் 3 ஜி மற்றும் 4 ஜி பயன்பாட்டு சேவை திருப்திகரமாக இருந்தாலும், வீட்டிலிருந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இணைய சேவை வழங்கும் நிறுவனங்களும் தங்கள் இணைய வேகத்தை(Data Speed) அதிகரிக்க வேண்டிய சூழல் உள்ளது.

பொது ஐ.டி. சேவை, இணைய வழியிலான வங்கி மற்றும் நிதி சேவை, மருத்துவ சேவை, இதர கட்டாய தேவைகளுக்கு துரிதமான இணையம் அவசியமாகிறது. வரவிருக்கும் நாட்களில் இணைய பயன்பாட்டுக்கான சலுகைகளும் அறிவிக்கப்படலாம். தேவை அதிகரிக்கும் நிலையில், இணைய பயன்பாட்டுக்கான கட்டணத்தை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உயர்த்துவதற்கான வாய்ப்பும் உள்ளது. இது போன்ற அவசர காலங்களில் கட்டணம் அதிகரிக்கப்படுமா என்பதனை காட்டிலும், ஏற்கனவே தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாங்கள் செலுத்த வேண்டிய தொகைக்கு வழக்கு ஒன்றில் உள்ளது.

அனைவரும் வீட்டில் அமர்ந்திருக்கும் இது போன்ற காலங்களில் இணைய பயன்பாடு மற்றும் தொலைக்காட்சியை தான் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். எனவே, அவசியமில்லாத இணைய பயன்பாட்டை சிலர் தவிர்க்கும் பட்சத்தில், அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்துபவர்களால் சரியான நேரத்தில் சேவைகளை அளிக்க இயலும். இதனை நாம் மீறும் பட்சத்தில், டெலிகாம் நிறுவனங்களின் புதிய கட்டணத்திற்கு தள்ளப்பட வேண்டியிருக்கும்.

உங்கள் வீட்டில் உள்ள யாருக்கெல்லாம் இணைய சேவை அவசியமாகிறதோ அவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். பொழுது போகவில்லை என்றால், உங்களுக்கு பிடித்த விஷயங்களை வீட்டிலிருந்தே செய்ய பழகுங்கள். உங்கள் வீட்டு தோட்டத்தை பராமரிப்பது, புதிய புத்தகங்களை படிப்பது, சில திட்டங்களை வடிவமைப்பது(Home based Online Business), ஏற்கனவே செய்ய வேண்டிய வீட்டு வேலைகள் சில இருப்பின் அவற்றை இப்போது செய்யுங்கள். அதே வேளையில் இணையம் வழியாக சம்பாதிக்கிறேன் என மோசடி பேர்வழிகளிடம் மாட்டி கொள்ளாதீர்கள்.

நேரத்திற்கு சாப்பிடுங்கள். போதுமான உறக்கம் அவசியம். நோயினை எதிர்கொள்ள பாரம்பரிய உணவுகளை எடுத்து கொள்ளுங்கள். சமைக்க பழகுவதற்கான நேரமும் இப்போது உள்ளது.

வீட்டில் இருங்கள், அதனை விட தனிமையில் இருப்பது அவசியமாகும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com