மெல்ல மெல்ல ஏற்றம் பெறுகிறதா இந்திய பங்குச்சந்தை ? – மாய வர்த்தகம்
Is the Indian Stock Market trading upside ? Trading illusion
பொருளாதார மந்தநிலை மற்றும் கோவிட்-19 காலங்களில் உலக பங்குச்சந்தைகள் வீழ்ச்சி கண்டு வருவதும், பின்பு சில நாட்களின் வர்த்தகத்தில் பெரிய அளவில் ஏற்றம் பெறுவதும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. பங்குச்சந்தையில் இது போன்ற ஏற்றங்கள் எதனை பிரதிபலிக்கின்றன ?
பொதுவாக பங்குச்சந்தையில் ஊக வணிகங்கள்(Speculation) நடைபெற்று வந்தாலும், நீண்ட காலத்தில் அதன் தாக்கம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சியை சார்ந்து தான் வழிநடத்தும். இவற்றில் முரண்பாடு ஏற்பட்டால், பின்னொரு காலத்தில் பங்குச்சந்தை தன்னை தானே சரி செய்து கொள்ளும். இதனை தான் நாம் பங்குச்சந்தை வீழ்ச்சி என்கிறோம்.
கடந்த சில வருடங்களாக உலக பங்குச்சந்தையில் உள்ள முக்கிய குறியீடுகள் வாழ்நாள் உச்சத்தில் வர்த்தகமாகி வந்தன. அதே வேளையில், அவற்றை சார்ந்த நாட்டின் வளர்ச்சியும்(GDP Growth), நிறுவனங்களின் வருவாயும்(Earnings) சொல்லிக்கொள்ளும் படி இல்லை. கடந்த ஒன்றரை வருடங்களாக உலகளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலை, உள்நாட்டில் ஏற்பட்ட வாகனத்துறைக்கான சுணக்கம் ஆகியவை பங்குச்சந்தையை மந்தநிலைக்கு கொண்டு சென்றது.
பின்பு, கொரோனா வைரஸ் என்ற நிகழ்வு வந்தவுடன், அதனை காரணமாக கொண்டு பங்குச்சந்தை அதன் உண்மை தன்மையை வெளிப்படுத்தியது. இதன் வெளிப்பாடு தான் தற்போது உலகளவில் ஏற்பட்ட சந்தை வீழ்ச்சியாகும். கடந்த காலத்தில் இது போன்ற வீழ்ச்சி ஏற்பட்டு, பின்பு பங்குச்சந்தை பெருமளவில் மீண்டதும் வரலாற்று புள்ளிவிவரங்கள். தற்போதைய நிலை எப்போது முடிவடையலாம் என யாராலும் அவ்வளவு எளிதாக கணிக்க முடியாது.
இருப்பினும் சந்தை வீழ்ச்சியும், பொருளாதார மந்தநிலையும் நிரந்தரமாக இருக்க போவதில்லை. சந்தை வீழ்ச்சி(Stock Market Crash) என்பது நீண்ட கால முதலீட்டை பொறுத்தவரை ஒரு மிகப்பெரிய வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும். மதிப்புமிக்க முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை சரிவை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, முதலீடு செய்ய துவங்குவர். அவர்கள் பெரும்பாலும் காளை சந்தையை விரும்புவதில்லை. கரடி சந்தையில் மட்டுமே அவர்கள் பணம் பண்ணும் வாய்ப்பை பெறுகின்றனர்.
பணக்கார முதலீட்டு ஜாம்பவான், திரு. வாரன் பப்பெட்(Warren Buffet) அவர்களின் முதலீட்டு உத்தியில் இதுவும் ஒன்று. அவர் அதிக விலை கொடுத்து எந்தவொரு பங்குகளையும் வாங்க விரும்புவதில்லை. பங்குச்சந்தை வீழ்ச்சியும் நாட்டின் பொருளாதாரத்திற்கு தேவையான ஒன்று தான். நிறுவனங்களின் வருவாய் குறைந்திருந்தாலும், அதன் தன்மை பங்குகளின் விலையிலும் தென்பட வேண்டும். இது பொதுவாக சந்தை ஏற்ற(Bull Market) காலங்களில் தெரிவதில்லை. ஆனால் சந்தை தொடர்ச்சியாக வீழும் போது உண்மையான மற்றும் மதிப்புமிக்க பங்குகளின்(Value Stocks) விலை நிலைத்து நிற்கும் அல்லது மலிவாக கிடைக்கப்பெறும். மற்ற பங்குகள் முதலீட்டாளர்களால் ஒதுக்கப்படும்.
கடந்த 2008ம் ஆண்டின் பொருளாதார வீழ்ச்சியின் போது(Global Financial Crisis), இந்திய பங்குச்சந்தை ஒரே வருடத்தில் 60 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியை சந்தித்தது. அந்த வேளையில், பெரும்பாலானவர்கள் தங்கள் முதலீட்டை இழந்து சந்தையை விட்டு ஒதுங்கினர். சரியான உத்தியை பயன்படுத்தி முதலீடு செய்தவர்கள் இன்று கோடீஸ்வரர்களாக உள்ளனர் என்றால் மறுப்பதற்கில்லை. இது தான் வீழ்ச்சியின் ரகசியம்.
2008ம் ஆண்டின் போது, இந்திய பங்குச்சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் பெருமளவிலான பங்குகளை விற்று கொண்டும், உள்ளூர் முதலீட்டாளர்கள் வாங்கி கொண்டும் இருந்தனர். இப்படி இருக்கையில், எப்போது தான் அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க முன் வருவர் ? ஏன், உள்ளூர் முதலீட்டாளர்கள் மட்டும் சந்தை வீழ்ச்சியின் போது வாங்க முன் வர வேண்டும் ?
உண்மையில், அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேறுவதில்லை. தங்களது பழைய முதலீடுகளை (லாபத்தில் இருக்கும்) விற்று விட்டு, புதிய பங்குகளை மலிவான விலையில் வாங்குவர். இந்த முதலீட்டு அளவு வேண்டுமானால் மாறுபடலாம். உள்ளூர் முதலீட்டாளர்கள் சந்தை இறக்கத்தில் புதிய முதலீட்டை மேற்கொள்வர். அவ்வளவே.
உதாரணமாக, 2008ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் ரூ. 29,447 கோடியை நிகர விற்பனையாக கொண்டிருந்தனர். அதாவது சொல்லப்பட்ட மாதத்தில், ரூ. 97,579 கோடிக்கு பங்குகளை புதிதாக வாங்கியும், ஏற்கனவே இருந்த முதலீட்டில் ரூ. 1.27 லட்சம் கோடி அளவிலான பங்குகளை விற்றும் இருந்தனர். வெறுமனே நிகர விற்பனையை மட்டும் நாம் கருத்தில் கொள்ள கூடாது.
தற்போதைய ஏற்றம் ஒரு தற்காலிகமானதே. ஒரு மாத ஊரடங்கு உத்தரவு, ஒரு வருட வருவாய் பாதிப்பை ஒரு நிறுவனத்திற்கு ஏற்படுத்தும். வேலைவாய்ப்பின்மை விகிதம், வாங்கும் திறன் குறைவு, விற்பனை வளர்ச்சி ஆகியவை வெகுவாக பாதிக்கப்படும். இதன் தாக்கம் வரும் நாட்களில் பொருளாதார வளர்ச்சி குறியீடு மற்றும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளில் தெரிய வரும். ஊரடங்கு உத்தரவில் தனிமனித வாழ்வு பாதிக்கப்படும் போது, நிறுவனங்கள் தப்பி பிழைத்து விடுமா என்ன ?
சில துறைகளுக்கு வேண்டுமானால் அரசின் சலுகைகள் இது போன்ற காலங்களில் கிடைக்கப்பெறலாம். அனைத்து நாடுகளின் அரசுகளும் பங்குச்சந்தை வீழ்ச்சியை தடுக்க புதிய சலுகைகளை அறிவிக்கும். இதன் காரணமாக சில நாட்கள் சந்தை ஏற்றம் பெறும். ஆனால் நீண்ட காலத்தில் ஒரு சந்தை ஏற்றம் பெறுவதற்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், நிறுவனங்கள் மற்றும் தனிமனித வருவாய் மிகவும் அவசியமாகும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை
Super sir, i am waiting sir
LikeLike