பாலு போர்ஜ் – பங்குச்சந்தை அலசல்

பாலு போர்ஜ் – பங்குச்சந்தை அலசல் 

Balu Forge Industries Limited – Fundamental Analysis – Stocks

 

கடந்த 1989ம் ஆண்டு, திரு. பிரகலாத் சிங் சந்தாக் அவர்களால் துவங்கப்பட்ட நிறுவனம் தான் பாலு போர்ஜ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட். கர்நாடக மாநிலத்தின் பெலகாவியை(பெல்காம்) தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம் பல்வேறு தொழிற்துறைகளுக்கு தேவையான உலோகக் கூறுகளை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.

 

உலோகத்தை அதிக வெப்பம் அல்லது கட்டுப்படுத்தப்பட்ட இயந்திர அழுத்தத்தின் மூலம் தேவையான வடிவத்திற்கு மாற்றும் உற்பத்தி முறைதான் போர்ஜிங் (Forging). உதாரணமாக, ஒரு பெரிய இரும்புத் துண்டை இயந்திரத்தின் மூலம் அழுத்தி கிராங்சாப்ட்(Crankshaft) வடிவத்திற்கு மாற்றி, பின்னர் CNC எனும் இயந்திரங்களின் மூலம் துல்லியமாக செய்து தயாரிப்பார்கள். பாலு போர்ஜ் நிறுவனம் கார்கள், டிராக்டர்கள், கப்பல்கள் மற்றும் டிரக்குகள் போன்றவற்றிற்கு தேவையான கிராங்சாப்டுகள், ரயில்வே, ராணுவம், காற்றாலை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்சார வாகனங்கள்(Crankshaft, Chasis Components, Transmission & Clutch Systems) போன்ற துறைகளுக்கு தேவையான துல்லியமான போர்ஜிங் உதிரி பாகங்களையும் தயாரித்து வருகிறது.

 

இதன் உற்பத்திப் பொருட்கள் விமானப் போக்குவரத்து, எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் சுரங்கப் பணிகள் ஆகியவற்றுக்கும் தேவையான இயந்திரங்களில்(Lifting Hooks, Empty Shells) பயன்படுகிறது. Original Equipment Manufacturer(OEM) எனப்படும் நிறுவனங்களின் தேவையை உணர்ந்து, அவர்களுக்கான உலோகக் கூறுகள் மற்றும் உதிரி பாகங்களை உற்பத்தி செய்து நேரடியாக வழங்கி வருகிறது. 

 

1991ம் ஆண்டு வாக்கில் இந்நிறுவனம் தனது முதல் உற்பத்தி ஆலையை நிறுவிய நிலையில், 1995ம் ஆண்டு தனது உற்பத்திப் பொருட்களை, உலக சந்தைக்கு ஏற்றுமதி செய்ய தயாரானது. 2006 மற்றும் 2010ம் ஆண்டுகளில் போலந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளில் உள்ள நிறுவனங்களை கையகப்படுத்தியது. 2011ம் ஆண்டின் முடிவில் சுமார் 80 நாடுகளுக்கு மேலாக இதன் பொருட்களை ஏற்றுமதி செய்திருந்தது. தற்சமயம் ஆண்டுக்கு சுமார் 72,000க்கும் அதிகமான உதிரிபாகங்களை இந்நிறுவனம் உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. நிறுவனத்திற்கு உள்நாட்டில் மூன்று உற்பத்தி ஆலைகளும், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு ஆலையும் உள்ளது. இதன் கட்டார்க்கி தொழிற்சாலை மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சம் மெட்ரிக் டன் தயாரிக்கும் திறனை கொண்டுள்ளது. இதன் நிலப்பரப்பு சுமார் 46 ஏக்கர்.

 

பாதுகாப்புத் துறைக்கு தேவையான 7-அச்சு மற்றும் 11-அச்சு எந்திரத் திறன், 25 டன் ஹைட்ராலிக் சுத்தியல் வரிசை மற்றும் ஆண்டுக்கு 3,60,000 குண்டுகள் உற்பத்தித் திறன் கொண்ட முழுமையாகத் தானியங்குபடுத்தப்பட்ட வெற்று குண்டு மற்றும் மோர்டார் உற்பத்தி வரிசை ஆகியவற்றில் பாலு போர்ஜ் முதலீடு செய்துள்ளது. GERB(Vibration Control) எனும் தொழில்நுட்பத்துடன் கூடிய 16 டன், 10 டன் ஹைட்ராலிக் சுத்தியல் வார்ப்பு மற்றும் 8000 டன் வார்ப்பு அழுத்த இயந்திரம் ஆகிய மூன்று முழுமையாகத் தானியங்கி வார்ப்பு இயந்திரக் கோடுகள் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் இணைந்து ஆண்டுக்கு 72,000 டன் வார்ப்புத் திறனை அளிக்கின்றன.

 

நிறுவனத்தின் SWOT ஆய்வை நாம் இங்கு பார்ப்போம்,

 

நிறுவனத்தின் பலங்கள்(Strengths):

 

  • முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக போர்ஜிங் துறையில் அனுபவம்.
  • போர்ஜிங் மற்றும் துல்லியமான உதிரிபாகங்கள் தயாரிக்க தேவையான ஒருங்கிணைந்த உற்பத்தி வசதிகள்.
  • சர்வதேச OEM வாடிக்கையாளர் தொடர்புகள் – உலகளவில் 25க்கும் மேற்பட்ட நேரடி வாடிக்கையாளர்கள்.
  • GERB Vibration Isolation போன்ற நவீன தொழில்நுட்பம்.
  • வாகனங்கள், ராணுவம், விமானம் எனப் பல துறைகளில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்.

 

பலவீனங்கள்(Weakness):

 

  • அதிக மூலதனச் செலவுகள் தேவைப்படும் தொழில் தான்.
  • உலக பொருளாதாரத் தாக்கம்: உலோகம் மற்றும் எரிசக்தி செலவுகளைச் சார்ந்திருத்தல்(Steel and Energy Prices).
  • உற்பத்தி ஆலை மற்றும் அதன் திறனை(Capacity Utilisation) அதிகரிக்க வேண்டிய அவசியம்.
  • பெரிய வாடிக்கையாளர்களைச் சார்ந்திருக்கும் அபாயம்.
  • விரிவாக்கத்தால் செயல்பாட்டு மூலதனத்தின் (Working Capital) தேவை அதிகரிக்கலாம்.

 

நிறுவனத்தின் வளர்ச்சி வாய்ப்புகள்(Opportunities):

  • பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து துறைகளில் காணப்படும் வளர்ச்சி.
  • ரயில்வே மற்றும் கனரக பொறியியல் துறைகளின் தேவைகள்.
  • மின்சார வாகனங்கள் மற்றும் புதிய எரிசக்தி துறைக்கு தேவைப்படும் உதிரி பாகங்கள்.
  • ஏற்றுமதி சந்தை விரிவாக்கம்.
  • புதிய உற்பத்தித் திறனைப் பயன்படுத்தி வருவாய் அதிகரித்தல்.

  

 அச்சுறுத்தல்கள்(Threats):

 

  • சர்வதேச போர்ஜிங்(Forging) உற்பத்தி நிறுவனங்களின் போட்டி.
  • உலோகம் மற்றும் எரிசக்தி விலை ஏற்ற-இறக்கம்.
  • வாகனத் துறையின் சுழற்சி சார்ந்த தேவை மாற்றங்கள்.
  • பாதுகாப்பு துறையின் தேவைகளில் ஏற்படும் தாமதம் அல்லது ரத்து செய்யப்படுதல்.
  • புதிய தொழிற்சாலை முதலீடுகளுக்கான வருமானம் எதிர்பார்த்த அளவு இல்லாமை.

 

மேலே சொன்ன ஆய்வின் அடிப்படையில் நாம் காணும் போது, பாலு போர்ஜ் நிறுவனத்தின் முக்கிய வளர்ச்சி வாய்ப்பு பெரும்பாலும் பாதுகாப்பு, விமானம் மற்றும் கனரக துறைகளில் தான் உள்ளது.

புதிய தொழிற்சாலை, அதன் சார்ந்து அதிக உற்பத்தித் திறன் ஆகியவை நிறுவனத்திற்கு லாபத்தை ஈட்ட வேண்டும். அதன் பின்னர் வந்த லாபம், சரியான பணவரத்தாக(Cash Flow) அமைய வேண்டும் என்பது தான் நீண்டகால முதலீட்டின் முக்கியமான அளவுகோலாகும்.

நிறுவனத்தின் நிதி அறிக்கையை காணுகையில், இதன் சந்தை மூலதன மதிப்பு சுமார் ரூ.6,200 கோடி. பங்கு விலை ஒன்றுக்கு ரூ.516 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது(நவம்பர் 20, 2026). நிறுவனத்தின் பி.இ. விகிதம் 22 மடங்குகளாகவும், துறை சார்ந்த பி.இ. விகிதம் 30 மடங்குகளாகவும் உள்ளது. நிறுவனத்திற்கு கடன் பெரிதாக இல்லை என்பது கவனிக்கத்தக்கது. இதன் கடன்-பங்கு விகிதம் 0.12 என்ற அளவில் இருந்துள்ளது. 

நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 54 சதவீதமாக உள்ளது. அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் சுமார் ஐந்து சதவீத பங்குகளையும், உள்ளூர் நிறுவனம் முதலீட்டாளர்கள் ஒரு சதவீத பங்கினையும் கொண்டுள்ளனர். நிறுவனத்தின் சார்பில் கடந்த மூன்று வருடங்களில் சுமார் 3.50 சதவீத பங்குகள் விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிறுவனர்கள் சார்பில் சுமார் மூன்று சதவீத பங்குகள் அடமானமாக உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம்(Interest coverage Ratio) 17 மடங்குகளில் உள்ளது. சமீபத்திய(செப்டம்பர் முடிவு) காலாண்டு முடிவுகளின் படி, நிறுவனத்தின் விற்பனை வருவாய் 324 கோடி ரூபாயாகவும், அடிப்படை செலவினம் 231 கோடி ரூபாயாகவும் உள்ளது. நிறுவனத்தின் இயக்க லாபம் ரூ.94 கோடி, அதாவது 29 சதவீத இயக்க லாப விகிதம்(OPM). 

சொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் வரிக்கு முந்தைய வருவாய் 91 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ.77 கோடியாகவும் இருந்துள்ளது. 2025-26ம் நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக காணும் போது, அதன் வருவாய் ரூ.1,107 கோடியாகவும், செலவினம் ரூ.808 கோடியாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம் 27 சதவீதம் எனவும், நிகர லாபம் 306 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves in Balance Sheet) ரூ.1,620 கோடியாகவும், கடன் மதிப்பு ரூ.214 கோடியாகவும் இருந்துள்ளது. வணிக பெறத்தக்கவையாக ரூ.394 கோடி (Trade Receivables) மற்றும் கையிருப்பு ரொக்கத்தொகை ரூ.123 கோடியாகும்.

நிறுவனத்திற்கான பணவரத்து(Cash Flow – CFO)ஒவ்வொரு வருடமும் ஏற்ற-இறக்கமாக வந்து கொண்டிருக்கிறது. CFO to EBITDA விகிதம் 0.09 என்ற அளவில் இருந்துள்ளது. 2025-26ம் நிதியாண்டின் முடிவில் CFO/EBITDA விகிதம் 15 சதவீதமாக இருந்துள்ளது. நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் 904 கோடி ரூபாயை அசையா சொத்துகளில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் கூட்டு விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் 50 சதவீதமாகவும், கூட்டு லாப வளர்ச்சி 102 சதவீதமாகவும் இருந்துள்ளது. பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருடங்களில் 22 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. 

 

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே. 

 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.