புரோமோட்டர்களின் பங்களிப்பு இல்லாமல் நிறுவனம் செயல்பட முடியுமா ?

புரோமோட்டர்களின் பங்களிப்பு இல்லாமல் நிறுவனம் செயல்பட முடியுமா ?

Listed companies with Zero Promoter Holding – Fundamental Insights

இந்திய பங்குச்சந்தையை பொறுத்தவரை குறைந்தபட்ச பொது பங்கு(Minimum Public Shareholding) விதியின் படி, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பொதுமக்களுக்கு குறைந்தபட்சம் 25 சதவீத பங்குகளை ஒரு நிறுவனம் ஒதுக்க வேண்டும். பொது மக்களுக்கு என சொல்லும் போது சிறு முதலீட்டாளர், பெரு முதலீட்டாளர் மற்றும் நிறுவனங்களும் அடங்கும். நிறுவனர்களின்(Founders, Promoters) பங்களிப்பை பொறுத்தவரை, நம் நாட்டில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தில் 75 சதவீத பங்குகளுக்கு மேல் வைத்திருக்க கூடாது என்பது சட்ட விதியாக உள்ளது.

75 சதவீதத்திற்கு மேலாக ஒரு நிறுவனம் பங்குகளை தன்வசம் வைத்திருந்தால், அந்த பங்குகளை, பங்கு விலக்கல்(Divestment) முறையில் மற்ற பங்குதாரர்களுக்கு விற்று விட வேண்டும். இது பொதுவாக அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் விலக்கு பெற்ற நிறுவனங்களுக்கு பொருந்தாது. தற்போதைய நிலையில், 75 சதவீத பங்குகளுக்கு மேல் வைத்திருக்கும் பட்டியலிடப்பட்டவை, சுமார் 64 நிறுவனங்கள் தான். இவற்றில் எல்.ஐ.சி. இந்தியா நிறுவனம் மற்றும் சில பொதுத்துறை வங்கிகளும் அடங்கும்.

பங்குச்சந்தையில் 50 சதவீதத்திற்கும் மேல் நிறுவனர்களின் பங்களிப்பை(Promoter Holding) கொண்டிருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 2,854 (ஆகஸ்ட் 8, 2023 முடிவில்). இந்த பட்டியலில் ரூ.5,000 கோடிக்கும் மேலான சந்தை மூலதன மதிப்பை கொண்டிருக்கும் நிறுவனங்கள் 396. 5,000 கோடி ரூபாய்க்கும் மேலான சந்தை மூலதன மதிப்பு, 50 சதவீதத்திற்கு மேலான நிறுவனர்களின் பங்களிப்பு மற்றும் கடன்-பங்கு விகிதம் 0.5 மடங்குக்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 254.

பொதுவாக நிறுவனர்களின் பங்களிப்பு, பொது மக்கள் மற்றும் பிற உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்பை காட்டிலும் அதிகமாக காணப்படுவது, நீண்டகாலத்தில் ஒரு முதலீட்டாளருக்கு சாதகமான அம்சமாக இருக்கும். ஒரு நிறுவனத்தின் மீது அதன் நிறுவனர்களே பங்களிப்பை கொடுக்காவிட்டால், பொது மக்களாகிய நாம் அந்த நிறுவனத்தின்(பங்குகள்) மீது நம்பிக்கை வைத்து என்ன பயன் ? இன்றும், சில நிறுவனங்களின் லாபத்தில் பெரும்பாலான பங்கு பலனை அனுபவிப்பது அதன் நிறுவனர்கள் தான்.

40 வருடங்களுக்கு முன்பு, இந்த ‘ABC’ மற்றும் ‘XYZ’ பங்குகளை வாங்கியிருந்தால், இன்று அது பல கோடிகள் பெற்றிருக்கும் என வெற்று பெருமை பேசி என்ன பயன். ஒரு கட்டுரையீர்ப்புக்கு(Article, Blogging Posts) வேண்டுமானால், இது போன்ற தகவல்கள் பயன்படலாம். உண்மையில், 40 வருடங்களுக்கு முன்பிருந்த ஒரு நிறுவனம், இன்று பல மடங்கு உயர்ந்திருந்தால் அந்த பலனை பெரும்பாலும் அனுபவிப்பது அதன் நிறுவனர்கள் தான். ஏனெனில் அவர்கள் வசம் மட்டும் அந்த பங்குகள் இன்றளவிலும் விற்கப்படாமல் இருந்திருக்கும். பொதுமக்களாகிய நாம் அந்த பங்குகளை எப்பொழுதோ விற்றிருப்போம்.

நிறுவனர்களின் பங்களிப்பு, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. எனினும் சில நிறுவனங்களில் நிறுவனர்கள் சார்பாக எந்த பங்களிப்பும் இல்லாமல் இருக்கத்தான் செய்கிறது. அப்படிப்பட்ட நிறுவனங்கள் நல்ல நிறுவனங்களா  அல்லது சரிப்பட்டு வராதா என கேள்வி கேட்டால், அது அந்த நிறுவனத்தின் தொழில் அனுபவமும், நிர்வாக திறனையும் பொறுத்து தான் உள்ளது. 

இந்திய பங்குச்சந்தையில் புரோமோட்டர்களின் பங்களிப்பு இல்லாமல் சுமார் 110 நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் முக்கிய நிறுவனங்களான ஐ.டி.சி, எச்.டி.எப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எல் & டி ஆகியவை அடங்கும். சமீபத்தில் ஜோமாட்டோ மற்றும் பேடிஎம் நிறுவனங்கள். 

நிறுவனர்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு நிறுவனம் பங்குச்சந்தையில் இயங்கலாமா ? ஆம், தாராளமாக இயங்கலாம். சில நிறுவனங்கள் தங்கள் தொழிற்துறையின் சாதகத்திற்கு ஏற்ப, நாட்டின் சட்ட விதிகளுக்காக, திறன்மிக்க தொழில் வல்லுநர்களை நியமிப்பதன் மூலம் இது போன்ற நிறுவனங்களை செயல்படுத்துகின்றன. உண்மையில் அவர்களது பங்குகள், நிறுவனர்கள் பட்டியலில் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மற்ற பொதுப்பங்கு நிறுவனங்களின் வாயிலாக பங்குகளை கைவசம் வைத்திருந்து, நேரடியாக இல்லாமல் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டை வைத்திருப்பர்.

உதாரணமாக ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனத்தில் பெரும்பாலான பங்குகள் இந்திய காப்பீட்டு நிறுவனங்களிடமும், பிற வெளிநாட்டு நிறுவனங்களிடமும் உள்ளன. அதே வேளையில் மேலே சொல்லப்பட்ட நிறுவனங்களில், குறிப்பிடத்தக்க பங்குகளை மறைமுகமாக நிர்வாகத்தை நடத்தும் நிறுவனத்திற்கு உண்டு. இது போல தான் மற்ற நிறுவனர் பங்களிப்பு அல்லாத நிறுவனத்திலும் நடைபெறுகிறது. குழும நிறுவனங்கள்(Group of Companies) சில காலங்களில் இது போன்ற நடைமுறையை பின்பற்றி தங்களது துணை நிறுவனங்களை நடத்துகின்றனர்.

நிறுவனர்கள் தங்களது பங்குகளை வங்கியிலோ அல்லது நிதி நிறுவனங்களிலோ அடமானம் வைத்து, பின்னர் அது மீட்கப்படாமல் போனாலும் இது போன்ற நிலை ஏற்படலாம். நிறுவன கையகப்படுத்துதல், திவால் நிலை போன்ற சமயங்களிலும் நிறுவனர்களின் பங்களிப்பு இல்லாமல் இருக்கலாம்.

பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தை ஆராய, கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய அடிப்படை காரணிகள்(Fundamental Analysis – Factors)

பங்குச்சந்தையில் நிறுவனர்களின் பங்களிப்பு இல்லாவிட்டாலும், அவர்கள் நிறுவனத்தின் நிர்வாகத்தை திறம்பட வைத்திருக்க வேண்டும் என்பது தான் எதார்த்த உண்மை. எனவே, ஒரு நிறுவனத்தை ஆராயும் போது அதன் தொழில் அனுபவம், நிர்வாக திறன், கடனில்லாமை அல்லது கடனை திறம்பட தொழிலில் புகுத்துவது ஆகியவற்றை ஒரு முதலீட்டாளர் கவனிக்க வேண்டியது அவசியம். இல்லையனில் முதலீட்டாளருக்கு, அது ‘விழலுக்கு இறைத்த நீர்’ தான் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.