மீண்டுமொருமுறை வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி

மீண்டுமொருமுறை வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி 

No change in Repo Rate for the Eleventh Time – RBI Monetary Policy 

நடப்பு நிதியாண்டின் முதல் கூட்டமாக நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தில் வங்கி ரெப்போ வட்டி விகிதம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் சார்ந்த அறிக்கை இன்று பாரத ரிசர்வ் வங்கியால்(RBI) வெளியிடப்பட்டது. 

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என மீண்டும் இம்முறை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம்(REPO Rate) என்பது மத்திய ரிசர்வ் வங்கி, நாட்டில் உள்ள வங்கிகளுக்கு கடன் அளிக்கும் போது வசூலிக்கப்படும் வட்டி விகிதமாகும். இதுவே வங்கிகளிடம் இருந்து மத்திய ரிசர்வ் வங்கி கடன் பெற்றால், அதற்கான வட்டி விகிதம் தான் ரிவர்ஸ் ரெப்போ விகிதம்(Reverse Repo Rate).

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்தில் தொடரும் எனவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம், எந்த மாற்றமுமின்றி 3.35 சதவீதத்தில் இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையை கருத்தில் கொண்டு கடந்த 2020ம்  ஆண்டு முதல் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் பெரியளவில் மாற்றமில்லை.

தற்போது சொல்லப்பட்ட அறிவிப்புடன் சேர்த்து, பதினொன்றாவது முறையாக வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், வரக்கூடிய மாதங்களில் பணவீக்க விகிதத்தை கருத்தில் கொண்டு வங்கி வட்டி விகிதங்கள் உயர்த்தப்படலாம். 

நடப்பு 2022-23ம் நிதியாண்டில் நாட்டின் பணவீக்கம் 5.7 சதவீதமாக இருக்கும் எனவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி(GDP) 7.2 சதவீதமாக இருக்கும் எனவும் பாரத ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. இதுவே கடந்த முறை, பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாகவும், பணவீக்கம் 5.3 சதவீதமாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது கவனிக்கப்பட வேண்டியவை.

பணவீக்க மதிப்பீட்டில் அதிகபட்சமாக 2022-23ம் நிதியாண்டின் முதல் காலாண்டில்(April – June 2022) 6.3 சதவீதமாக பணவீக்கம் இருக்கலாம் என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை காட்டிலும் விலைவாசி உயர்வை(Inflation) கட்டுப்படுத்துவதே தற்போதைய நோக்கம் என பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.  

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.