ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி
REPO rate unchanged – RBI – Monetary Policy Committee(MPC)
பாரத ரிசர்வ் வங்கி சார்பாக மத்திய நிதி கொள்கை குழு கூட்டம் கடந்த டிசம்பர் 6 முதல் 8ம் தேதி வரை நடைபெற்றது. ஆண்டுக்கு ஆறு முறை நடக்கும் இக்கூட்டத்தில் நாட்டின் வட்டி விகித மாற்றம் சார்ந்த அறிக்கைகள் வெளியிடப்படும். கூட்டத்தில் ரிசர்வ் வங்கி சார்பாக மூன்று அதிகாரிகளும், அரசு சார்பில் மூன்று உறுப்பினர்களும் கலந்து கொள்வர்.
வங்கிகளுக்கான வட்டி விகிதம், பணவீக்க நிலவரம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிதி சந்தை மற்றும் பொது நிதி போன்றவற்றை ஆலோசித்து பின்பு வாக்களிக்கும் முறையில் முடிவுகள் அறிவிக்கப்படும். இம்முறை கூட்டத்தில் எடுக்க முடிவின் படி, வங்கிகளுக்கான ரெப்போ வட்டி(REPO) விகிதத்தில் மாற்றமில்லை எனவும், இதற்கு முன்னர் இருந்த நிலையே தொடரும் எனவும் ரிசர்வ் வங்கி சார்பில் சொல்லப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ(Reverse REPO) வட்டி விகிதம் 3.35 சதவீதம் என்ற அளவிலும் இருக்கும் என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம்(Repo Rate) என்பது மத்திய ரிசர்வ் வங்கி, நாட்டில் உள்ள வங்கிகளுக்கு கடன் அளிக்கும் போது வசூலிக்கப்படும் வட்டி விகிதமாகும். இதுவே வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி கடன் பெற்றால், அதற்கான வட்டி விகிதம் தான் ரிவர்ஸ் ரெப்போ விகிதம்.
நடப்பு நிதியாண்டில் நாட்டின் பணவீக்க விகிதம் 5.3 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆண்டு முழுவதுமான மதிப்பீட்டில் 9.5 சதவீதமாக இருக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. அதாவது அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் 6.6 சதவீதமும், ஜனவரி – மார்ச் நான்காம் காலாண்டில் 6 சதவீதமுமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
நாட்டின் வட்டி விகிதம் கடந்த இரண்டு வருடங்களாக 6 சதவீதத்திற்கும் கீழ் இருந்து வருகிறது. இது பாரத ரிசர்வ் வங்கியின் பணவீக்க இலக்குகளை சார்ந்து இருப்பது கவனிக்கத்தக்கது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை