Aadhaar linking

மீண்டும் பான் – ஆதார் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிப்பு

மீண்டும் பான் – ஆதார் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிப்பு 

PAN-Aadhaar linking deadline extended to March 31, 2022

நடப்பில் எந்தவொரு நிதி சார்ந்த தேவைகளுக்கும், அரசின் உதவிகளை பெறுவதற்கும் ஆதார் எண்ணை கொண்டிருப்பது அவசியமாக உள்ளது. ரேசன் கடை முதல் வருமான வரி தாக்கல் செய்வது வரை ஆதார் எண் பதிவு செய்யப்படுகிறது. இவற்றில் நம்மிடம் உள்ள பான்(PAN) எண்ணுடன் ஆதார்(Aadhaar) எண்ணை இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பான் எண்ணை பெறுவதற்கு வருமான வரி செலுத்துபவர்கள் மட்டும் தான் வைத்திருக்க வேண்டும் என்று நடைமுறையில் இல்லை. வங்கியில் புதிய கணக்கை துவங்குதல், ஒரு பரிவர்த்தனை(Transaction) 50,000 ரூபாய்க்கு மிகும் போது, தொழில் நிறுவனத்தினை பதிவு செய்கையில், சொத்துக்களை வாங்க மற்றும் விற்க, அன்னிய செலாவணி(வெளிநாட்டு வருவாய்) போன்றவற்றுக்கும் பான் எண்ணை கொண்டிருப்பது அவசியமாகிறது.

பான் எண்ணை பெறுவதற்கு எந்த வயது வரம்பும் இல்லை. 5 வயது குழந்தைக்கும் பான் கார்டு எண்ணை பெறலாம். நமக்கான அடையாள சான்றாகவும் சில சமயங்களில் பான் கார்டு எண் பயன்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பு அரசின் சார்பில் வெளியிடப்பட்டது. வரி ஏய்ப்பை தடுக்கும் ஏற்பாடாகவும் இது பார்க்கப்படுகிறது.

பான் – ஆதார் இணைப்பில் பொது மக்களுக்கு அவ்வப்போது ஏற்படும் சிக்கல்களால் இதற்கான காலக்கெடு ஒவ்வொரு வருடமும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. பான் மற்றும் ஆதார் எண்களில் உள்ள தரவுகள் சரியாக பொருந்தினால் மட்டுமே அவை இணைக்கப்படுவது சாத்தியமாகிறது. இல்லையெனில், அவை இணைக்கப்படாத நிலையாகவே எடுத்து கொள்ளப்படுகிறது.

பெயரில் உள்ள பிழை, ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. பான் எண்ணில் பெயர் பிழைகளை சரி செய்வது அவ்வளவு எளிதாக இல்லை. அவற்றுக்கு சரியான அடையாள ஆவணம் நம்மிடம் இருக்க வேண்டும். எனவே, ஆதார் கார்டில் உள்ள தகவல் சரிசெய்யப்பட வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

மத்திய நேரடி வரிகள் வாரியம் சார்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் பான் – ஆதார் எண்ணுக்கான இணைப்பு காலக்கெடு 2022ம் ஆண்டின் மார்ச் 31ம் தேதியாக சொல்லப்பட்டுள்ளது. இதற்கு முன்பு செப்டம்பர்  30, 2021 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இதன் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி தளத்தில் ஏற்பட்டிருக்கும் கோளாறுகளும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.