Egg sandwich asset allocation

நிறைவான செல்வத்தை சேர்க்க பன்முக முதலீடு அவசியம் !

நிறைவான செல்வத்தை சேர்க்க பன்முக முதலீடு அவசியம் !

Asset Allocation for Goal Planning & Wealth Creation

“யானைக்கும் அடி சறுக்கும்” – பொதுவாக வன உயிரினங்களில் யானை தான் நடக்கும் போது மிகவும் கவனத்துடன் நடந்து செல்லும். அப்படி எச்சரிக்கையுடன் அது நடந்தாலும், சில சமயங்களில் அதன் அடி சறுக்கி கீழே விழும். இதன் காரணமாக பலமான காயம் அல்லது சில நேரங்களில் மரணம் வரை கொண்டு செல்லும்’. இதனை தான் யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள்.

நாம் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும், திறமைசாலியாக நிரூபிக்கப்பட்டிருந்தாலும் சில சமயங்களில் தவறிழைப்பதுண்டு. இதனை நாம் முதலீட்டு சிந்தனையிலும் காணலாம். பங்குச்சந்தையில், “அவர் பார்க்காத லாபமே கிடையாது, அவர் தேர்ந்தெடுக்கும் அத்தனை முதலீடும் பல மடங்குகள் லாபம் தந்துள்ளது” என ஒருவரை எல்லா காலத்திலும் ஒப்பிட்டு சொல்ல முடியாது. பங்கு முதலீட்டின் மூலம் பணக்காரரான திருவாளர் வாரன் பப்பெட்டின் முதலீட்டு உத்தியே சில காலங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

அப்படியிருக்க, சிறு முதலீட்டாளர்களுக்கு தொடர்ச்சியாக அனைத்து காலத்திலும், ஒரு முதலீட்டு திட்டத்தை கொண்டு வெற்றி நடை போட்டு விட முடியாது. தங்கம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மக்களிடம் பரவலாக காணப்படும் திட்டம் தான், பொருளாதாரம் நன்றாக இருந்தால் தங்க முதலீட்டின் மீதான வருவாய் குறைந்து விடுகிறதே, வங்கிகளின் வட்டி விகிதம் பாதுகாப்பு என சொல்லப்பட்டிருந்தாலும், பணவீக்கத்தை தாண்டிய வருவாயை அவை பெரும்பாலும் அளிப்பதில்லை. ரியல் எஸ்டேட் மற்றும் பங்குகளும் இது போன்று சுழற்சி முறையில் இயங்க கூடியவை தான். அனைத்து வகையான முதலீடும் எல்லா காலத்திலும் நல்ல வருவாயை கொடுத்ததில்லை.

“எனக்கு தங்கத்தில் முதலீடு செய்வது தான் பிடிக்கும், அதன் மேல் தான் எனக்கு நம்பிக்கை உண்டு’ என நீங்கள் சொன்னால் கடந்த 2011ம் ஆண்டு தங்கத்தில் அதிகப்படியாக முதலீடு செய்திருந்தால் 2018ம் ஆண்டு வரை உங்கள் முதலுக்கே மோசம் வந்திருக்கும்.

தங்கம் ஏற்றம் பெறும் நிலையில், பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்ததை நாம் வரலாற்றில் காணலாம். வங்கி வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும் போது, கடன் பத்திரங்கள்(குறிப்பாக பரஸ்பர நிதிகளில்) வருவாய் அதிகரித்துள்ளது. பொருளாதார மந்தநிலை காலங்களில் பொருட்சந்தை எதிர்பாராத வருவாயை அளிப்பது, இன்னும் சில சமயங்களில் ரொக்கமாக வைத்திருப்பதே மேல் என்ற நிலையும் இருப்பதுண்டு.

உதாரணமாக, கடந்த 30 வருடங்களில் தங்கத்தின் மீதான முதலீடு 15 வருடங்கள் மட்டுமே பாசிட்டிவ்(Positive) வருவாயை அளித்துள்ளது. அதிகபட்சமாக கடந்த 2007, 2009, 2010 மற்றும் 2020ம் வருடங்களில் 20 சதவீதத்திற்கு மேல் வருவாயை கொடுத்துள்ளது. எதிர்மறையாக கடந்த 1997 மற்றும் 2013ம் ஆண்டுகளில் 20 சதவீதத்திற்கு மேல் தங்கம் வீழ்ச்சியடைந்துள்ளது.

சொல்லப்பட்ட காலத்தில் ரியல் எஸ்டேட் முதலீடு 24 வருடங்கள் பாசிட்டிவ் வருவாயை கொடுத்துள்ளது கவனிக்க வேண்டிய விஷயம். அதிகம் மற்றும் நிலையான வருவாய் கொண்ட காலமாக 2000-2006 இடையேயான வருடங்கள் இருந்துள்ளது. மோசமான காலமாக 2008ம் வருடத்தில் சுமார் 40 சதவீத அளவில் இந்த முதலீடு வீழ்ச்சியடைந்துள்ளது.

அரசு கடன் பத்திரங்கள் எதிர்மறையான வருவாயை கொடுக்காவிட்டாலும், பணவீக்கத்தை தாண்டிய தொடர் வருவாயை அளித்ததில்லை. அதே வேளையில் பங்குச்சந்தை முதலீடு 30 வருடங்களில் 17 வருடங்கள் பாசிட்டிவ் வருவாயை அளித்துள்ளது. அதிகபட்ச வருவாயாக 2009ம் ஆண்டில் 70 சதவீதத்திற்கு மேலாக அளித்துள்ளது. 2008ம் ஆண்டில் ஏற்பட்ட அமெரிக்க சப் பிரைம்(Subprime Crisis) வீழ்ச்சிக்கு பிறகான ஏற்றம் தான் இது. கடந்த வருடம்(2020) கொரோனா பெருந்தொற்று காரணமாக மார்ச் மாதத்தில் உலக பங்குச்சந்தை குறியீடுகள் பெரு வீழ்ச்சி அடைந்திருந்தாலும், யாரும் எதிர்பாராத வண்ணம் அந்த வருடத்தின் முடிவில் நல்ல வருவாயுடன் முடித்து கொண்டது. மோசமான காலமாக 2008ம் வருடத்தில் பங்குச்சந்தை குறியீடு 50 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரே முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்வதால் ஏற்படும் பாதகங்கள்:

ஒவ்வொரு முதலீட்டு திட்டமும், ஒரு குறிப்பிட்ட காலத்தில் அல்லது சுழற்சி முறையில் ஏற்றத்தையும், இறக்கத்தையும் சந்திப்பது இயல்பானது. இதனை நம்மால் அவ்வளவு எளிதாக முன்னரே கணித்து விட முடியுமா என்றால் – உண்மையில் அது தான் இல்லை. போதுமான திறமையும், தகவல்களும் இருந்தாலும் கணிப்பது கடினமே ! ஒரே முதலீட்டு திட்டத்தில் முழு தொகையையும் முதலீடு செய்வதால் ஏற்படும் பாதகங்கள் சில,

  • முதலீட்டை பெருமளவில் இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்
  • இலக்கிற்கான தொகையை பெறுவதில் சிக்கல் (அல்லது) தொகை குறைவு
  • முதலீட்டு ரிஸ்க்(Investment Risk) மிக அதிகம்
  • மற்றொரு முதலீட்டு திட்டத்தின் வாய்ப்பை(Opportunity Cost) தவற விடுதல்
  • சந்தையை தவறான கணிக்க கூடிய நிலை அல்லது ஆட்டு மந்தை கூட்ட மனநிலையில்(Herd Mentality) செயல்படுவது.

அஸெட் அலோகேஷன்(Asset Allocation) எனும் பணவளக்கலை:

அப்படியென்றால் என்ன செய்வது, நீண்ட காலத்தில் எவ்வாறு செல்வமீட்டுவது ? இதற்காக தான் முதலீட்டில் பன்முகத்தன்மையை புகுத்த வேண்டும். ஒரே திட்டத்தில் முதலீடு செய்து விட்டு, அதன் முழு ரிஸ்க் தன்மையை ஏற்படுத்துவதற்கு மாறாக, அஸெட் அலோகேஷன்(Asset Allocation) என்னும் பன்முக முதலீட்டு தன்மையை தேர்ந்தெடுக்கலாம்.

இதன் மூலம் முதலீட்டு ரிஸ்க் குறைவதுடன் அதிக வருவாய் ஏற்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம். நமது இலக்கிற்கு தேவையான கார்பஸ் தொகையையும் நாம் எளிதாக பெற முடியும்.

அஸெட் அலோகேஷன் முறையில் தங்கம் கொஞ்சம், பங்குகள், பரஸ்பர நிதிகள் மற்றும் பத்திரங்கள் சிறிதளவு, வீட்டு மனையில் ஓரளவு முதலீடு மற்றும் ரொக்கம் என நமது முதலீட்டை பரவலாக்கம் செய்வதன் மூலம் ரிஸ்க்கை குறைத்து, எக்காலத்திலும் பாசிட்டிவ் வருவாயை பெறலாம். சந்தையை கணிக்க வேண்டிய அவசியமுமில்லை.

அஸெட் அலோகேஷன் முறையில் ஒருவர் முதலீடு செய்திருந்தால், கடந்த 30 வருடங்களில் நான்கு வருடங்கள் மட்டுமே அவர் எதிர்மறை வருவாயை(Negative Returns) கொண்டிருப்பார். குறிப்பிட்ட வருடத்தில் ஏதேனும் ஒரு முதலீட்டு திட்டம் அதிகம் சம்பாதித்த வருவாயை, அஸெட் அலோகேஷன் முறை கொண்டிருக்காவிட்டாலும் நீண்டகாலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருவாயை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக 2008ம் வருடத்தில் பங்குச்சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் 40 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியடைந்திருந்தாலும், தங்கம் மற்றும் பத்திரங்களில் ஓரளவு முதலீடு செய்திருந்தால் சொல்லப்பட்ட வருடத்தில் இழப்பு குறைவே. அதாவது அனைத்து முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்திருந்து,  ஏதேனும் ஒரு முதலீட்டு திட்டம் சரிவை கண்டாலும், நமது போர்ட்போலியோ அதிகம் பாதிக்கப்படாது. அஸெட் அலோகேஷன்  முறையில்  நீண்டகாலத்தில் நிலையான(பணவீக்கத்தை தாண்டிய) மற்றும் நல்ல வருவாயை ஏற்படுத்தலாம்.

அஸெட் அலோகேஷன் முறையின் வகைகள்(Types of Asset Allocation):

  • சமநிலைப்படுத்தும் அஸெட் அலோகேஷன்(Strategic Asset Allocation):

இந்த முறையில் அனைத்து வகையான திட்டத்திலும் முதலீட்டை மேற்கொள்வது அவசியம். அதே வேளையில், முதலீட்டு சமநிலைப்படுத்துவதும்(Re-balancing) முக்கியம். உதாரணமாக நாம் பங்குகளில் 50 சதவீதமும், கடன் பத்திரங்கள், ரியல் எஸ்டேட், தங்கம் முறையே 20%, 20%, 10% என முதலீடு செய்திருக்கும் நிலையில், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பங்கு முதலீட்டின் வருவாய் ஏறி விட்டால், நமது போர்ட்போலியோவில் பங்கு முதலீட்டின் பங்களிப்பு அதிகரித்து விடும். எனவே கிடைக்கப்பெறும் லாபத்தை கொண்டு மற்ற திட்டங்களில் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும்.

அதாவது பங்கு முதலீட்டு பங்களிப்பு 50 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக அதிகரித்து விட்டால், அதனை குறைக்க சிறிதளவு பங்குகளை விற்று விட்டு, மற்ற முதலீட்டு திட்டங்களின் பங்களிப்பை அதிகரித்து கொள்ள வேண்டும்.

இதன் மூலம் நமது முதலீட்டு போர்ட்போலியோ(Investment Portfolio) எப்போதும் சமநிலையை பெற்றிருக்கும். பங்கு முதலீட்டை பெரும்பான்மையாக கொண்டிருக்கும் இந்த அஸெட் அலோகேஷன் முறை நீண்ட காலத்திற்கு உரியது.

  • திட்டமிடப்பட்ட அஸெட் அலோகேஷன்(Tactical Asset Allocation):

பொதுவாக குறுகிய காலத்தில் காணப்படும் வாய்ப்புகளை பயன்படுத்தி அதிக வருவாயை பெருக்க இந்த அஸெட் அலோகேஷன் முறை உதவும். பங்குகள், தங்கம், ரியல் எஸ்டேட் மற்றும் கடன் பத்திரங்கள் என நாம் கலவையாக இங்கே முதலீடு செய்திருந்தாலும், தங்கத்தில் அல்லது பங்குகளில் அதிக வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்பு தெரிந்தால், அதன் பங்களிப்பை அதிகரித்து கொள்ளலாம். இங்கே சமநிலை என்பதனை தாண்டி, குறுகிய காலத்தில் ரிஸ்க் எடுக்க கூடிய மனப்பான்மையை கொண்டு வரும்.

இந்த முறையில் முதலீடு செய்ய போதுமான திறமையும், சந்தை சார்ந்த சரியான தகவலும் கிடைக்கப்பெறுவது அவசியம். இதனை பொதுவாக பரஸ்பர நிதிகளின் பண்டு மேலாளர்கள் கையாள்வதுண்டு.

  • மாறுபட்ட அஸெட் அலோகேஷன் (Dynamic Asset Allocation):

இது ஒரு எதிர் சுழற்சி முறையாகும்(Counter-cyclical strategy). உலக பொருளாதார காரணிகளை கொண்டு, கரடி அல்லது காளை சந்தையின் போக்கில் முதலீடு செய்வதாகும். பொதுவாக பங்குகள் ஏற்றம் பெற்று வரும் நிலையில், நமது போர்ட்போலியோவில் பங்கு முதலீட்டை அதிகரிப்பதும், மற்ற முதலீட்டு திட்டங்களில் முதலீட்டை குறைப்பதும் ஆகும். பொருளாதார மந்தநிலை காலங்களில் பங்கு முதலீட்டை குறைத்து, கடன் பத்திரங்கள் மற்றும் தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரிப்பது இதன் நடைமுறையாகும்.

பொருளாதாரம் மீண்டு வரும் போது மற்ற முதலீடுகளை விற்று பங்கு முதலீட்டை அதிகரித்து கொள்வதும், இந்த அஸெட் அலோகேஷன் முறையின் தனித்துவமாகும்.

பொதுவாக அஸெட் அலோகேஷன் வகை(Types) முறையில் அனைவரும் திறம்பட முதலீடு செய்து விட முடியாது. அதற்கான தகவலும், நேரமும் அதிகமாக தேவைப்படும். எனவே இந்த வகைகளை பரஸ்பர நிதிகளில்(Mutual Funds) கிடைக்கப்பெறும் திட்டங்களின் வாயிலாக தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.

அனைத்து காலத்திலும் நிறைவான செல்வத்தை ஏற்படுத்த அஸெட் அலோகேஷன் உங்களுக்கு கைகொடுக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s