ஆண்டுக்கு 10 மில்லியன் எலெக்ட்ரிக் வாகனங்கள், பரோடா வங்கியில் 100 மில்லியன் டாலர் கடன் – உலக சாதனையில் ஓலா நிறுவனம்

ஆண்டுக்கு 10 மில்லியன் எலெக்ட்ரிக் வாகனங்கள், பரோடா வங்கியில் 100 மில்லியன் டாலர் கடன் – உலக சாதனையில் ஓலா நிறுவனம்  

10 Million EVs & USD 100 Million Long Term Debt – India’s Ridesharing MNC Ola Cabs

கடந்த 2010ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரத்தை சேர்ந்த 25 வயதான திரு. பவிசு அகர்வால் தனது நண்பர் திரு. அன்கிட் பங்களிப்புடன் ஓலா நிறுவனத்தை துவங்கினார். ஐ.ஐ.டி. மும்பையில் படித்த இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்பு, தனது பயணக்காலத்தின்  போது ஏற்பட்ட மோசமான அனுபவத்தால் ஓலா நிறுவனத்தை துவக்க முடிந்தது.

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு ஓலா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் தனது கிளைகளை பரவியுள்ளது. 250 நாடுகளுக்கு மேலாகவும், 25,000 டிரைவர்களுக்கு அதிகமாக தனது சேவையை கொண்டிருக்கும் ஓலா, இன்று 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட இந்திய பன்னாட்டு நிறுவனமாக வலம் வருகிறது.

பல முதலீட்டாளர்களையும், வாடிக்கையாளர்களையும் ஈர்த்துள்ள இந்நிறுவனம் வாகன சவாரி, வாடகை வண்டி மற்றும் உணவு விநியோக சேவையில் தனது தொழிலை விரிவாக்கி உள்ளது. சமீபத்தில் ஓலா எலக்ட்ரிக் வாகன தயாரிப்பிலும் இந்நிறுவனம் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஓலா மின்னணு இயக்கம்(OLA Electric Mobility) என்ற முயற்சியை எடுத்திருக்கும் இந்த நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டில் சுமார் 59 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாக ஈர்த்தது. டாட்டா குழுமத்தின் தலைவர் திரு. ரத்தன் டாட்டா அவர்களும் ஓலா எலக்ட்ரிக் தொழிலில் முதலீடு செய்துள்ளதாக நிறுவனம் கூறியிருந்தது.

பின்பு ஜப்பானின் முதலீட்டு நிறுவனமான சாப்ட் பேங்கும்(SoftBank) 250 மில்லியன் டாலர்களை ஓலா நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தது. ஆண்டுக்கு ஒரு கோடி(10 மில்லியன்) மின்னணு வாகனங்களை தயாரிக்க உள்ளதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் முதற்கட்டமாக நடப்பு 2021ம் ஆண்டுக்குள் 10 லட்சம் மின்னணு வாகனங்களை தயாரித்து சந்தைக்கு கொண்டு வர நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஓலா எலக்ட்ரிக் முயற்சியின் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் பகுதியில் 500 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை ஒன்றை அமைத்துள்ளது. இங்கு இரு சக்கர வாகனங்களை பெருமளவில் உற்பத்தி செய்ய நிறுவனம் முனைந்துள்ளது. இதன் காரணமாக ஆண்டுக்கு 10 மில்லியன் எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி இலக்காக நிர்ணயித்து உலக சாதனை பட்டியலை ஏற்படுத்தியுள்ளது ஓலா நிறுவனம்.

உலகின் மிகப்பெரிய உற்பத்தி ஆலையாக இது இருக்கும் எனவும், உற்பத்திக்கு தேவையான முதலீடாக, பேங்க் ஆப் பரோடா வங்கியில் நீண்டகால கடனாக சுமார் 100 மில்லியன் டாலர்கள் பெறுவதற்கான ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 700 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு, ஓலா எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை வாங்குவதற்கான இணையதளமும் வெளியிடப்பட்டது. ரூ.499 மட்டும் செலுத்தி வாகன முன்பதிவை செய்து கொள்ளலாம் என நிறுவனம் கூறியிருந்த நிலையில், ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மதிப்பு 85 ஆயிரம் ரூபாயிலிருந்து 1.10 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம்(on road price) என சொல்லப்படுகிறது. எலக்ட்ரிக் வாகனத்துக்கான சார்ஜிங் நிலையங்களை ஏற்படுத்துவதிலும் ஓலா தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக 400க்கும் மேற்பட்ட நகரங்களில் சார்ஜிங் நிலையங்களை ஏற்படுத்தும் திட்டமும் உள்ளது.

எனினும் மின்சாரத்திற்கான கட்டணம் எவ்வாறு நிர்ணயிக்கப்படும் என்பதனை பற்றி சொல்லப்படவில்லை. ஓலா நிறுவனத்தில் 60க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் இருக்கும் நிலையில், இந்நிறுவனம் இதுவரை லாபத்தை ஈட்டவில்லை. 2019ம் ஆண்டின் முடிவில் இந்நிறுவனம் ரூ.2,600 கோடியை நட்டமாக கொண்டிருக்கிறது. கடந்தாண்டு கொரோனா ஊரடங்கின் காரணமாக 1000க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணிநீக்கம் செய்தது ஓலா நிறுவனம். ஓலா நிறுவனத்திடம் வாடகைக்கு வாகனம் ஓட்டுபவர்களும் சொல்லப்பட்ட காலத்தில் வருவாய் இன்றி சிரமப்பட்டனர். நிறுவனத்தின் வருவாய் அளவு அதிகரித்து வந்தாலும், பொதுவாக இது போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்கு வெகு காலமாகிறது. சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க முதலீட்டு நிறுவனமொன்று ஓலா நிறுவனத்தின் மதிப்பை 50 சதவீதம் வரை குறைத்து, நிறுவனம் 3 பில்லியன் டாலர் மதிப்பை தான் பெறும் என சொல்லியிருந்தது.

சமீபத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஜொமோட்டோ(Zomato) நிறுவனமும் இதுவரை லாபமீட்ட முடியவில்லை. இது பேடிஎம்(Paytm) நிறுவனத்திற்கும் பொருந்தும். புதுமைகளை கொண்டிருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நீண்டகால வளர்ச்சி அடிப்படையில் பல முதலீடுகளை ஈர்க்கும். ஆனால் அவை லாப நோக்கத்திற்கு வர பல வருடங்கள் எடுத்து கொள்ளும். பங்குச்சந்தையில் ஈடுபடும் முதலீட்டாளர்களை பொறுத்தவரை லாபமீட்டும்  மற்றும் கடனில்லா நிறுவனங்கள் தான் நீண்டகாலத்தில் செல்வவளத்தை அளிக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s