இன்போசிஸ் முதலாம் காலாண்டு நிகர லாபம் – ரூ.5,195 கோடி
Infosys reported a Net Profit of Rs.5,195 Crore in Q1FY22
நாற்பது வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட இன்போசிஸ், இன்று பில்லியன் டாலர் வருவாயை கொடுக்கும் இந்திய பன்னாட்டு(MNC) தொழில்நுட்ப நிறுவனமாக வலம் வருகிறது. அவுட்சோர்சிங், கன்சல்டிங் மற்றும் நிர்வகிக்கப்பட்ட ஐ.டி. சேவைகளை அளித்து வரும் இந்நிறுவனம், உலகம் முழுவதும் சுமார் 123 மையங்களின் மூலம் தனது கிளைகளை பரவலாக்கி உள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 6.72 லட்சம் கோடி ரூபாய். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக திரு. சலீல் பரேக் உள்ளார். 2020-21ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,00,472 கோடியாகவும், நிகர லாபம் 19,351 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.
சொல்லப்பட்ட வருடத்தின் முடிவில், நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு மட்டும் ரூ.74,227 கோடி. நடப்பு நிதியாண்டின் முதலாம் காலாண்டுக்கான முடிவுகளை நேற்று(14-07-2021) இன்போசிஸ் வெளியிட்டது. ஏப்ரல்-ஜூன் 2021 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.27,896 கோடியாகவும், செலவினம் 20,464 கோடி ரூபாயாகவும் உள்ளது. இதர வருமானமாக 622 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது.
முதலாம் காலாண்டில்(Quarterly results) நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,195 கோடி. அதாவது பங்கு ஒன்றுக்கு நிறுவனம் 12 ரூபாயை லாபமாக ஈட்டியுள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தில் 426 கோடி பங்குகள்(அனைத்து பங்குதாரர்களையும் சேர்த்து) இருப்பது குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 0.07 ஆக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் சுமார் 13 சதவீத பங்குகள் உள்ளன. பங்கு அடமானம் எதுவும் நிறுவனர்கள் சார்பில் வைக்கப்படவில்லை. அன்னிய முதலீட்டாளர்களிடம் 33 சதவீத பங்குகளும், உள்ளூர் முதலீட்டு மற்றும் நிதி நிறுவனங்களிடம் 22 சதவீத பங்குகளும் உள்ளன.
நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.(LIC India) யிடம் 5.50 சதவீத இன்போசிஸ் பங்குகள் இருப்பது கவனிக்கத்தக்கது. இது போல தேசிய பென்சன் திட்ட(NPS Trust) அமைப்பிடம் சுமார் 1.2 சதவீத பங்குகளும் உள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை