டி.சி.எஸ். முதலாம் காலாண்டு நிகர லாபம் – ரூ.9008 கோடி
TCS Q1FY22 quarterly results – Net Profit of Rs.9008 Crore
நாட்டின் மிகப்பெரிய ஐ.டி. நிறுவனமான டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்(TCS) தகவல் தொழில்நுட்ப துறையில் 50 வருடங்களுக்கும் மேலான தொழில் அனுபவத்தை கொண்டிருக்கிறது. ரூ.12.05 லட்சம் கோடி சந்தை மதிப்பை கொண்டிருக்கும் இந்நிறுவனத்தின் தலைவராக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திரு.நடராஜன் சந்திரசேகரன் பொறுப்பு வகிக்கிறார்.
டி.சி.எஸ். நிறுவனம் டாட்டா குழுமத்தின் ஒரு அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 46 நாடுகளில் ஐ.டி. சேவையை கொண்டிருக்கும் டி.சி.எஸ். நிறுவனத்தில் 37 சதவீதம் பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். நாட்டில் இந்திய ரயில்வே, இந்திய ராணுவம் மற்றும் அஞ்சலகத்துறைக்கு அடுத்தாற்போல், அதிக பணியாளர்களை கொண்டிருக்கும் நிறுவனம் டி.சி.எஸ். தான்.
நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக அமேசான், கூகுள், அடோப், இன்டெல், ஐ.பி.எம்., போஸ்ச்(Bosch), ஆப்பிள், அசுர்(Azure), சிமாண்டெக் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் செலுத்தும் வாடிக்கையாளர்களாக சுமார் 50 நிறுவனங்கள் உள்ளன.
2020ம் ஆண்டில் நிறுவனத்தின் வருவாய் 23 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும்(1.61 லட்சம் கோடி ரூபாய்), நிகர லாபம் 4.5 பில்லியன் டாலர்களாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் 2021-22ம் நிதியாண்டுக்கான முதலாம் காலாண்டு முடிவுகள் நேற்று(08-07-2021) வெளியிடப்பட்டது.
ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதலாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.45,411 கோடியாகவும், செலவினம் 32,748 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது. இதர வருமானமாக ரூ.721 கோடி மற்றும் சொல்லப்பட்ட காலாண்டில் நிகர லாபம் ரூ.9008 கோடியாக உள்ளது.
நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் 0.09 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம் 75 மடங்குகளாகவும் உள்ளது. நிறுவனர்கள் சார்பில் 72 சதவீத பங்குகள் கைவசம் உள்ளது. நிறுவனர்களின் பங்கு அடமானம் 0.50 சதவீதமாக உள்ளது கவனிக்கத்தக்கது. மார்ச் 2021 முடிவில், இருப்புநிலை கையிருப்பு(Balance Sheet Reserves) ரூ.86,063 கோடியாக சொல்லப்பட்டுள்ளது.
டி.சி.எஸ். பங்குகளில் அன்னிய முதலீட்டாளர்களிடம் 15 சதவீத பங்குகளும், எல்.ஐ.சி. நிறுவனத்திடம் 4 சதவீத பங்குகளும் உள்ளது. முதலாம் காலாண்டு முடிவில் பங்கு ஒன்றுக்கு ஏழு ரூபாயை ஈவுத்தொகையாக(Dividend) அறிவித்துள்ளது நிறுவனம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை