செல்வ வளத்தை பெருக்குவதற்கான ஐந்து நுட்பங்கள்
Five techniques for the Wealth Creation
ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதை போல, நம்மிடம் இருக்கும் பணம் வளர்வதற்கும் இரு விஷயங்கள் தேவைப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு திட்டத்தில் நாம் முதலீடு செய்ய முனைந்தாலும், காலம் மற்றும் வருவாய் விகிதம் அதன் மதிப்பீட்டை தருகின்றன. பணவீக்கம், வரி விதிப்பு, முதலீட்டு தொகை மற்றும் பிற காரணிகள் ஒருபுறம் இருந்தாலும், முதலீடு செய்யும் காலமும்(Tenure), அதனை சார்ந்த வருவாய் விகிதமும்(Investment Returns%) தான் ஒருவருக்கான செல்வத்தை ஏற்படுத்துகிறது.
குறுகிய காலத்தில் விரைவாக ஈட்டப்படும் பணம், நீண்ட காலத்தில் பயனளிக்க வேண்டுமானால் மறுமுதலீடு செய்து காத்திருந்தால் மட்டுமே, அவை பெரும் செல்வத்தை அளிக்கும். இல்லையெனில் அதன் திறன் செயலிழந்து விடும். ஏழை மற்றும் நடுத்தர வருவாய் கொண்டவர்கள் குறுகிய காலத்தில் அதிக லாபமீட்ட விரும்புவதும், பணக்காரர்கள் நீண்டகாலத்தில் பணத்தை விதைத்து விட்டு, காத்திருந்து பின் முதலீட்டு பெருக்கத்தை ஏற்படுத்துவது தான் செல்வத்தின் ரகசியம். இங்கே பணக்காரர்கள் எனப்படுபவர் முதலீட்டு ஒழுக்கத்தை கடைபிடிப்பவர்.
நாம் எந்த வேலை பார்த்து கொண்டிருந்தாலும், பணக்காரர்களின் சிந்தனைகளை எளிமையாக கடைபிடிக்கலாம். அது போன்ற செல்வ வளத்தை ஏற்படுத்துவதற்கான ஐந்து நுட்பங்களை நாம் இங்கே காணலாம்.
நிதி பாதுகாப்பு எப்போதும் அவசியம்:
பணம் பண்ணுவதே மட்டுமே பணக்காரர்களின் இலக்காக இருக்க முடியாது. மாறாக நமது எதிர்பாராத மற்றும் அவசியமில்லாத செலவுகளையும் கட்டுப்படுத்த வேண்டும். உங்களுக்கு மற்றும் குடும்பத்தாருக்கு தேவைப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு மட்டும் செலவு செய்ய பழகுங்கள். ‘தேவையில்லாத பொருட்களை நீங்கள் வீட்டில் வாங்கி குவிக்கும் போது, ஒரு நாள் உங்களுக்கு தேவைப்பட்ட ஒரு பொருளை நீங்கள் விற்க நேரிடும்’ என திருவாளர் வாரன் பப்பெட் கூறுகிறார்.
அவசியமில்லாத செலவுகளை குறைத்து கொள்வதை போல, எதிர்பாராது வரும் செலவுகளையும் முடிந்தவரை தவிர்த்தல் நலம். அடிப்படை நிதி பாதுகாப்பை(Financial Protection) அளிக்கும் டேர்ம் இன்சூரன்ஸ், மருத்துவ மற்றும் விபத்து காப்பீட்டை பெறுவது அவசியம். இதன் மூலம் வரும் நாட்களில் ஏற்படும் எதிர்பாராத செலவுகளை தவிர்க்கலாம். சொல்லப்பட்ட காப்பீடு திட்டங்கள் உண்மையில் உங்கள் உடல்நலனை பாதுகாக்கா விட்டாலும், நீங்கள் இதுவரை சேமித்து வைத்திருந்த பணத்தை விரயம் செய்ய விடாது.
அவசர கால நிதியை(Emergency Fund) எப்போதும் உங்கள் நண்பனாக்கி கொள்ளுங்கள். உங்களுக்கு வேலையிழப்பு ஏற்படும் சமயத்தில், நோய்த்தொற்று காலத்தில், தொழிலில் மந்தநிலை ஏற்படும் சமயம் என பல்வேறு சூழ்நிலைகளில் அவசர கால நிதி உங்களுக்கு உதவும். அவசர கால நிதி எனும் போது, குறைந்தபட்சம் உங்களது மாத வருமானத்தை போல 6 முதல் 12 மடங்குகளில் தொகையை சேமித்து வைத்திருப்பது நல்லது. இந்த நிதியை ரிஸ்க் தன்மை அதிகம் கொண்ட முதலீட்டு திட்டத்தில் போட கூடாது. அவசரத்திற்கு எப்போதும் பணத்தை எடுக்குமாறு, பாதுகாப்பான வங்கி சேமிப்பு கணக்கு அல்லது லிக்விட் பண்டுகளில் கையிருப்பாக வைத்து கொள்ள வேண்டும்.
நிதி இலக்குகளும், அதற்கான திட்டமிடலும்:
உங்களது ஒவ்வொரு தேவைக்கும், முன்னரே திட்டமிட்டு கொள்வது அந்த தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்து கொள்ள உதவும். தேவையெனும் போது சில வாரங்கள் முதல் மாதங்கள் அல்லது வருடங்கள் வரை இருக்கலாம். ஒவ்வொரு தேவையையும் நிதி இலக்குகளாக(Create Financial Goals) உருவாக்கி கொள்ளுங்கள். அதனை அடைய தேவையான தொகை, காலம், எதிர்பார்க்கும் வட்டி விகிதம் மற்றும் அதனை சார்ந்த மாதாந்திர அல்லது வாராந்திர முதலீட்டு தொகை என திட்டமிட்டு கொள்ளுங்கள்.
உதாரணமாக வருடாவருடம் உங்கள் குழந்தைக்கு பிறந்தநாள் விழா கொண்டாட விரும்பினால், அதனை ஒரு இலக்காக(Birthday Fund) நிர்ணயித்து, பிறந்தநாள் விழாவுக்கு தேவையான செலவுகளை, மாத முதலீடாக கணக்கிட்டு கொள்ளுங்கள். பின்பு அதனை பாதுகாப்பான அல்லது குறைந்த ரிஸ்க் தன்மை கொண்ட முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்து வாருங்கள். விழாவுக்கு முன்னர் தேவையான தொகையை நீங்கள் அத்திட்டத்தில் இருந்து எடுத்து செலவழித்து கொள்ளலாம். இது போன்று குழந்தை மேற்படிப்பு, திருமண செலவுகள், வீடு மற்றும் வாகனம் வாங்குவது என பல்வேறு இலக்குகளுக்கு இந்த உத்தியை பயன்படுத்தலாம். குறுகிய கால இலக்கிற்கு ரிஸ்க் குறைவான முதலீட்டு திட்டத்தையும், நடுத்தர மற்றும் நீண்டகால இலக்குகளுக்கு மிதமானது முதல் ரிஸ்க் அதிகம் கொண்ட திட்டங்களையும் தேர்ந்தெடுக்கலாம்.
அஸெட் அலோகேஷன்(Asset Allocation) எனும் பணவளக்கலை:
சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் பல இருந்தாலும், அனைத்தும் ஒருசேர திறம்பட வருவாயை அளிப்பதோ, குறைவதோ கிடையாது. ஒவ்வொரு முதலீட்டு திட்டத்திற்கும் தனித்துவமான தன்மைகளும், காலமும் உண்டு. உதாரணமாக பொருளாதாரம் நன்றாக வளர்ந்து வரும் நிலையில் பங்குச்சந்தைகள் ஏறுவதும், இதற்கு மாறாக பொருளாதாரம் சரியும் நிலையில் தங்கத்தின் மதிப்பு அதிகரிப்பதும் இயல்பு. இது போன்று வங்கிகளின் வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும் நிலையில், முதலீட்டாளர் ஒருவர் வேறொரு முதலீட்டு வாய்ப்பை தேடுவதும் ஏற்படத்தான் செய்யும்.
பங்குகள், பத்திரங்கள், வங்கி டெபாசிட், தங்கம், ரியல் எஸ்டேட் என ஒவ்வொரு முதலீட்டு திட்டமும் வெவ்வேறு காலத்தில் ஏற்ற-இறக்கத்தை சந்திக்கும். ஒரே முதலீட்டு திட்டத்தில் நாம் முதலீடு செய்யும் நிலையில், அதற்கான ரிஸ்கும் மிக அதிகம். எனவே நமது முதலீட்டை, அஸெட் அலோகேஷன் முறையில் பரவலாக்க சிறிதளவு தங்கம், வங்கி டெபாசிட், பரஸ்பர நிதிகள் மற்றும் பங்குகள், பிற முதலீடுகள் கொஞ்சம் என முதலீடு செய்யலாம்.
இதன் மூலம் ஏதேனும் ஒரு முதலீட்டு திட்டம் சரிவை கண்டாலும், நமது முதலீட்டு போர்ட்போலியோ அதிகம் பாதிக்கப்படாது. அஸெட் அலோகேஷன் முறையில் நீண்டகாலத்தில் நல்ல வருவாயை ஏற்படுத்தலாம்.
பங்கு முதலீட்டை பல்வகைப்படுத்துதல்(Diversification):
கடந்த ஐம்பது வருடங்களில் பங்குச்சந்தை போன்ற அருமையான ஒரு முதலீட்டு வாய்ப்பு(உலகளவில்) எங்கும் கிடைக்கப்பெறவில்லை. இன்று எளிமையாக கையாளும் நிலையில், யாரும் முதலீடு செய்யக்கூடிய வகையில் பங்குச்சந்தை முதலீடுகள் உள்ளன. அதே வேளையில் நல்ல நிறுவனங்களையும், நீண்டகாலத்தில் வருவாய் ஈட்டக்கூடிய துறைகளை கண்டறிவதும் சவாலான விஷயம்.
துறை சார்ந்த பங்குகளை ஆராயும் போது, அவற்றின் தொழில் அடிப்படை பகுப்பாய்வுகளை(Business Fundamentals) நாம் அறியலாம். இருப்பினும் நாம் இப்போது முதலீடு செய்யும் துறை எக்காலத்திலும் வருவாயை அளித்து கொண்டு தான் இருக்கும் என உறுதியாக சொல்ல முடியாது. நவீன தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டினால் ஒவ்வொரு துறையும், அதனை சார்ந்த தொழில் நிறுவனங்களும் மாற்றமடைந்து வருகின்றன. இதனை சமாளிக்க முடியாத துறைகள் மற்றும் நிறுவனங்கள் பின்னாளில், முதலீட்டாளர்களுக்கு எந்தவொரு வருவாயை அளிக்க முடியாத நிலையாக அமைகின்றன.
எனவே பங்கு முதலீட்டை மேற்கொள்ளும் போது, பல்வேறு துறை சார்ந்த நல்ல நிறுவன பங்குகளை கண்டறிந்து முதலீடு செய்ய வேண்டும். உலோகங்கள்(Metals) சார்ந்த துறை பொதுவாக சுழற்சி கால அடிப்படையில் இயங்கும். உலக பொருளாதாரத்தால் அதிகம் பாதிப்படையும் துறையாக இருக்கும். அதே நேரத்தில் நுகர்வோர் பொருட்கள் மற்றும் சாதனங்கள்(FMCG and Consumer Durables) போன்ற துறைகளின் தேவை நாள்தோறும் உள்ளது.
நுகர்வோர் பொருட்கள், வாகனம், பார்மா, தகவல் தொழில்நுட்பம், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், ரசாயனம், உட்கட்டமைப்பு என துறை வாரியாக நாம் பிரித்து முதலீடு செய்யும் போது, நீண்டகாலத்தில் நல்ல வருவாயை ஏற்படுத்தலாம்.
காத்திருக்கும் விளையாட்டு(Waiting Game – Delayed Gratification):
இன்றைய காலத்தில் பணம் சேர்ப்பது அப்படியொன்றும் கடினமான வேலையல்ல. ஆனால் அதனை மென்மேலும் பெருக்குவதோ, ஈட்டிய செல்வத்தை தக்க வைப்பதோ பணக்காரர்களின் ரகசியம். இது நாம் அனைவரும் அறிந்த ரகசியமும் கூட. இருப்பினும் அனைவராலும் கடைபிடிக்கப்படுவதில்லை.
மாதாமாதம் சிறுகச்சிறுக முதலீடு செய்து விட்டு, நீண்டகாலம் காத்திருந்து பெரும் செல்வத்தை ஈட்ட பொறுமையும் அவசியம். காத்திருத்தல் எவ்வளவு முக்கியமோ, அதனை போன்று காலமும், வட்டி விகிதமும் அவசியம். அதன் மூலமே நாம் கூட்டு வட்டியின் பலனை முழுவதுமாக பெற முடியும். நம்மில் பெரும்பாலானோர் நீண்டகாலத்திற்கென முதலீடு செய்த தொகையை, அவ்வப்போது தேவைப்படும் செலவுக்கு எடுப்பது, தொடர் முதலீட்டை நிறுத்துவது அல்லது தாமதப்படுத்துவது போன்ற காரணங்களால், அந்த முதலீடு நீண்டகாலத்தில் வளர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதில்லை.
இன்று பொன்சி(Ponzi) போன்ற ஏமாற்று திட்டங்களில் மோசடி பேர்வழிகளிடம் மாட்டிக்கொள்வது குறுகிய காலத்தில் அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என பேராசைப்படுபவர்கள் தான். நீண்டகாலத்தில் பொறுமையாக முதலீடு செய்து விட்டு, முதலீட்டு பலனை அனுபவிப்பவர்கள் இது போன்ற ஏமாற்று திட்டங்களில் கவனம் செலுத்துவதில்லை.
பிறக்கும் குழந்தை ஒரே நாளில் படித்து விட்டு, வேலைக்கு சென்று சம்பாதிப்பதோ அல்லது தொழில் புரிவதோ இல்லை. அதற்கான காலமும் அதிகம், காத்திருந்து முதலீடு செய்வதே சாலச்சிறந்தது. இது தான் பணக்காரர்களின் ரகசியம். தனிநபர் ஒருவர் துவங்கிய சிறு நிறுவனங்கள் பல, பின்னாளில் பெரு நிறுவனங்களாக கட்டமைக்கப்படுவதும் காத்திருத்தலின் பயனால் தான். “பணக்காரர்கள் நேரத்தில் முதலீடு செய்கிறார்கள், ஏழைகள் பணத்தில் முதலீடு செய்கிறார்கள்” என்கிறார் உலக பெரும் பணக்காரர் வாரன்.
ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் எப்போதும், எந்த பொருளையும் உடனடியாக வாங்கும் முயற்சியில் / உணர்ச்சியில் உள்ளனர்; பணக்காரர்கள் எப்போதும் தங்களது தேவையறிந்து, காத்திருந்தே முடிவில் அனுபவிக்கிறார்கள்; அதனால் தான் அவர்கள் எப்போதும் பணக்காரர்கள் !
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை