Hour glass

முதலீட்டாளராக தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து கணித கணக்கீடுகள்

முதலீட்டாளராக தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து கணித கணக்கீடுகள் 

5 Basic Formulas for Investment Beginners 

பொதுவாக நம்மில் பெரும்பாலோருக்கு இருக்கும் குழப்பம் சேமிப்பும், முதலீடும் ஒன்று என எண்ணிக்கொள்வது தான். சேமிப்பு எனும் போது நாம் நம் வீட்டில் உள்ள ஒரு உண்டியலில் போட்டு வைப்பது, அருகில் உள்ள அஞ்சலகத்தில் சேமிப்பது, வங்கிக்கணக்கில் டெபாசிட் மூலம் சேமிப்பது என சொல்லலாம். இவை பெரும்பாலும் பணவீக்கத்தை தாண்டி வளராது. முதலீடு எனும் போது நீண்டகாலத்தில் முதலீட்டு பெருக்கத்தை(Capital Appreciation) ஏற்படுத்தும். அது மட்டுமில்லாமல் அவ்வப்போது தொடர் வருவாயை(Income) அளிக்கும் வாய்ப்பும் முதலீட்டில் கிட்டும்.

மேலும் பணவீக்கத்தை காட்டிலும் அதிக வருவாய் பெறுவதற்கு முதலீடு செய்தால் மட்டுமே சாத்தியம். முதலீட்டு சாதனம் எனும் போது தொழில் புரிவது(Business), பங்குகள், மியூச்சுவல் பண்டுகளில் சில திட்டங்கள், ரியல் எஸ்டேட், புதிய தொழில்நுட்பங்களை(Passive income) கற்று கொள்வதன் மூலம் சாத்தியப்படும். இவற்றில் தங்கம் ஒரு சேமிப்பாகவோ அல்லது முதலீடாகவோ கருதப்படாது. அதே வேளையில் தங்கத்தின் விலை நீண்டகாலத்தில் பணவீக்கத்தை சரிக்கட்ட உதவக்கூடும்.

நீங்கள் செய்வது சேமிப்பாக இருந்தாலும் சரி, முதலீடாக இருந்தாலும் அனைத்து வகையான நிலைகளுக்கும் சில பொதுவான கணித கணக்கீடுகள் பொருந்தும். இந்த கணக்கீடுகள் நாம் பள்ளிக்காலத்தில் கற்ற ஃபார்முலா தான். மிகவும் சலிப்பாக காணப்படும் கணித வகுப்புக்கள் தான் பின்னாளில் நாம் சம்பாதிக்கும் போது தேவைப்படுகிறது. எல்லோராலும் பணம் சம்பாதிக்க முடியும், செலவழிக்கவும் முடியும். ஆனால் முதலீடு செய்யும் போதும், கடன் வாங்க செல்லப்போகும் போது தான் நாம் கணக்கியலை எதிர்பார்க்கிறோம்.

‘ நான் செய்த முதலீட்டிற்கு எவ்வளவு வட்டி தொகை கிடைக்கும், வாங்கிய கடனுக்கு மாத இ.எம்.ஐ. எப்படி ‘ என கேள்வி கேட்க துவங்கும் போது நமக்கு பள்ளிக்கால கூட்டு வட்டி நியாபகம் வரலாம். ஒரு முதலீட்டாளராக அல்லது கடன் பெறுபவராக நீங்கள் இருப்பின், சொல்லக்கூடிய ஐந்து கணித சூத்திரங்கள் உங்களுக்கு பயனளிக்கும்.

முதலீட்டின் மீதான நிகர வருவாய்(Absolute Returns):

இதனை ஒரு முழுமையான வருவாய் என கூறலாம். நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு ஒரு குறிப்பிட்ட காலத்தில் கிடைக்கப்பெறும் வருவாயாகும். கூட்டு வட்டியாக சொல்லப்படாமல், ஒரு குறிப்பிட்ட காலத்தில் கிடைக்க கூடிய நிகர வருவாய்க்கு சதவீதத்தில் சொல்லப்படும். வங்கி டெபாசிட், மியூச்சுவல் பண்டுகள், பங்குகள், ரியல் எஸ்டேட் அல்லது தங்கத்தில், குறிப்பிட்ட கால அளவில் ஈட்டப்படும் வருவாய்.

உதாரணமாக, நீங்கள் ஒரு குறிப்பிட்ட மியூச்சுவல் பண்டு திட்டத்தில் 2019ம் ஆண்டின் ஜனவரி ஒன்றாம் தேதி 1 லட்ச ரூபாயை முதலீடு செய்துள்ளீர்கள் என வைத்து கொள்வோம். 2020ம் ஆண்டின் மார்ச் 5ம் தேதிப்படி உங்களது கணக்கில் ரூ.1,22,000 உள்ளது. அதாவது ரூ.1 லட்சம் முதலீட்டிற்கு 22,000 ரூபாய் லாபமாக காணப்படுகிறது. இதனை நாம் செய்த முதலீட்டிற்கான வருவாய் எனலாம். லாப அடிப்படையில் உங்களது வருவாய் 22 சதவீதமாக உள்ளது.

முதலீடு – ரூ.1,00,000 (Original Investment)

முதலீட்டுக்கான வருவாய்(ROI) – ரூ.22,000 (மார்ச் 5ம் தேதிப்படி)

Absolute Returns % = (Return on Investment / Original Investment) X 100

= (22000/100000) X 100

முதலீட்டின் மீதான நிகர வருவாய் விகிதம் – 22 %

முதலீட்டின் மீதான வருடாந்திர வருவாய் விகிதம்(Annualized Returns):

நீங்கள் செய்த முதலீட்டிற்கான வருவாய் ஆண்டு அடிப்படையில் கணக்கிடப்படுவது, வருடாந்திர வருவாய் விகிதம் எனப்படும்.

உதாரணமாக நீங்கள் ஒரு வங்கியில் ஒரு லட்ச ரூபாயை டெபாசிட் செய்துள்ளீர்கள். ஒரு வருடத்தின் முடிவில் உங்களுக்கு கிடைக்க கூடிய முதிர்வு தொகை ரூ.1,07,185 (முதலீடும் சேர்த்து) எனில், உங்களது வருடாந்திர வருவாய் விகிதம் – 7.185 %

Annualized Returns % = (ROI / OI) X 100 X (1 / Holding period of investment in years)

முதலீடு – ரூ. 1 லட்சம்

முதலீட்டுக்கான வருவாய் – ரூ.7,185

வைத்திருக்கும் காலம்(Holding Period) – 1 Year

வருடாந்திர வருவாய் விகிதம் = (7185/100000) X 100 X (1/1) = 7.185 %

இதுவே, நீங்கள் சொல்லப்பட்ட முதலீட்டை மூன்று வருடம் வைத்திருக்கும் நிலையில், உங்களுக்கு கிடைக்கக்கூடிய முதிர்வு தொகை ரூ.1,23,500 எனில், வருடாந்திர வருவாய் விகிதம் ?

முதலீடு – ரூ. 1 லட்சம்

முதலீட்டுக்கான வருவாய் – ரூ.23,500

வைத்திருக்கும் காலம்(Holding Period) – 3 Years

வருடாந்திர வருவாய் விகிதம் = (23500/100000) X (1/3) = 7.83 %

பணவீக்கத்தை சரிக்கட்டக்கூடிய வருவாய் (Inflation adjusted returns):

முதலீட்டை பொறுத்தவரை நீங்கள் பணவீக்கத்தை தாண்டிய வருவாயை ஈட்ட முடியவில்லையெனில், அதனால் பாதிக்கப்படுவது உங்களுக்கான குறித்த நேர நிதி இலக்குகள் தான். பாதுகாப்பான சேமிப்பு என குறைந்த வருவாய் கொண்ட திட்டத்தில் நீங்கள் நீண்டகாலத்தில் முதலீடு செய்யும் போது, அது விலைவாசியை சரி செய்யாது. இதன் காரணமாக உங்களுக்கு தேவையான தொகையில் பற்றாக்குறை ஏற்படும். இதனை ஒரு முதலீட்டு இழப்பாக சொல்லலாம். எனவே, பணவீக்கத்தை சரிக்கட்ட கூடிய வருவாயாக இருப்பதை உறுதி செய்த கொள்ள வேண்டும்.

உதாரணமாக நீங்கள் 10 சதவீதம் வருமானம் தரக்கூடிய முதலீட்டு திட்டத்தில் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்வதாக வைத்து கொள்வோம். பணவீக்கம் 4 சதவீதமாக இருந்தால், உங்களுக்கான உண்மையான வருவாய் 5.76 சதவீதமே…

Inflation Adjusted Returns % = (1 + Investment returns %) / (1 + Inflation rate %) – 1

= (1 + 10 %) / (1 + 4 %) – 1

= (1.10) / (1.04) – 1

= 5.76 %

மற்றொரு உதாரணம், வங்கி டெபாசிட் மூலம் உங்களுக்கு கிடைக்கக்கூடிய வட்டி விகிதம் 6 சதவீதமாக இருந்து, பணவீக்கமும் 7 சதவீதமாக சொல்லப்பட்டால்… உங்களுக்கு முதலீட்டு இழப்பு தான்.

= (1 + 6%) / (1 + 7%) – 1

= (1.06) / (1.07) – 1

= (- 0.93) %

வரியை சரிக்கட்டக்கூடிய வருவாய் (Tax adjusted Returns):

முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு பணவீக்கம் ஒரு மறைமுக சுமை என்றால், நேரடி சுமையாக வரி விதிப்புகள் இருக்கும். பணவீக்கமும், வரிகளும் இருமுனை கத்தி போல. இதனை சரிக்கட்டி விட்டு, உங்களால் வருவாய் ஈட்ட முடிந்தால், அது தான் சிறந்த முதலீட்டு சாதனமாக கருதப்படும்.

சம்பாதித்த வருமானம் வரிக்கு உட்பட்டதாக இருக்கும் நிலையில், எந்தவொரு முதலீட்டிற்கும் வரித்தொகையை கணக்கிடுவது அவசியம். நீங்கள் வரி செலுத்துபவராக இருந்தால், பெரும்பாலும் வங்கி டெபாசிட் மூலம் கிடைக்க கூடிய வருவாய் வரி செலுத்துவதற்கே போதுமானதாக இருக்கும் நிலை காணப்படுகிறது.

உதாரணமாக, நீங்கள் செய்யும் முதலீட்டில் 10 சதவீத வருமான வாய்ப்பு இருந்து, அதே வேளையில் 30 சதவீத வருமான வரி செலுத்துபவராக இருப்பின், உங்களுடைய வரிக்கு பிந்தைய வருவாய் 7 சதவீதமாக தான் இருக்கும்.

Tax adjusted returns % = Earned Interest rate X (1 – Tax rate %)

வட்டி விகிதம் – 10 %

வரி விகிதம் – 30 %

= 0.10 X (1 – 0.30)

= 0.07

= 7 %

இதனை மற்றுமொரு உதாரணம் மூலம் ஒப்பிட்டு பார்க்கலாம். ஒரு வங்கி டெபாசிட் திட்டத்தில் உங்களுக்கான வட்டி ஆண்டுக்கு 8 சதவீதமாக சொல்லப்படுகிறது. இன்னுமொரு வரி சேமிப்பு பத்திரத்தில் ஆண்டுக்கு 7 சதவீதம் கிடைக்க பெறுகிறது. மேலும் குறிப்பிட்ட பங்குகளில் நீங்கள் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 10 சதவீத ஈவுத்தொகை(Dividend) கிடைக்கும்.

மேலே சொன்ன மூன்று சாதனங்களில், உங்களுடைய வரிக்கு பிந்தைய வருவாய் (30% வரி விதிப்பு),

வங்கி டெபாசிட் (FD) – 5.6 %

வரி சேமிப்பு பத்திரம்(Tax saving bonds) – 7% (வரி விலக்கு)

பங்குகள்(Dividend on Shares) – 10% (ஆண்டுக்கு ரூ.5,000க்கு குறைவாக இருக்கும் நிலையில், வரி இல்லை)

கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (CAGR):

CAGR முறை பொதுவாக வருடாந்திர கூட்டு வட்டி அடிப்படையில் வருவாயை கணக்கிட பயன்படுகிறது. அதாவது ஒவ்வொரு காலத்திலும் கிடைக்க கூடிய வட்டி வருவாய், மறுமுதலீடு செய்யப்பட்டால் வட்டிக்கு வட்டி கிடைப்பதை இந்த முறை சொல்கிறது.

Compounded Annual Growth Rate(CAGR) = (Ending Value / Beginning Value) ^ (1 / No. of years)

2015ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில், நீங்கள் நல்ல நிறுவன பங்கு ஒன்றில் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்கிறீர்கள். அப்போதைய நிலையில் பங்கு ஒன்றின் விலை ரூ.100. 2020ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் அந்த பங்கின் விலை ரூ.200 க்கு வர்த்தகமானது என வைத்து கொள்வோம். இப்போது ஜனவரி 2020 காலத்தின் படி, உங்களுடைய கூட்டு வருடாந்திர வளர்ச்சியை கண்டுபிடிப்போம்.

Ending Value – ரூ.200

Beginning Value – ரூ.100

வைத்திருக்கும் காலம் – 5 வருடங்கள்

= (200/100) ^ (1/5) – 1

=  (2) ^ (0.2) – 1

= 1.1486 – 1

= 0.1486

= 14.86 %

வைத்திருக்கும் காலம்: 

நீங்கள் கணக்கிடுவது வருடங்கள் அடிப்படையில் என்றால், அது 1 / No. of years ஆக இருக்க வேண்டும்.

மாதங்களாக இருந்தால், 12 / No. of months

நாட்களாக இருந்தால், 365 / No. of Days

மேலே சொல்லப்பட்ட ஐந்தும் எந்தவொரு முதலீட்டாளருக்கும், முதலீட்டு சாதனத்திற்கும் தேவையான அடிப்படை கணக்கீடுகள் ஆகும். எனவே முதலீடு செய்யும் முன், பணவீக்க விகிதம் மற்றும் உங்களது வருமான வரி விகிதத்தை கணக்கிட்டு கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s