Castrol India activ

கேஸ்ட்ரால் இந்தியா(Castrol India) காலாண்டு நிகர லாபம் ரூ.205 கோடி

கேஸ்ட்ரால் இந்தியா(Castrol India) காலாண்டு நிகர லாபம் ரூ.205 கோடி 

Castrol India reported a net profit of Rs.205 Crore – Q3CY21

லண்டனை தலைமையிடமாக கொண்ட பிரிட்டிஷ் பெட்ரோலிய(BP) நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் கேஸ்ட்ரால் இந்தியா. வாகன மற்றும் தொழிற்துறைக்கு தேவையான மசகு எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் இந்நிறுவனம், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய உற்பத்தி நிறுவனமாக(Lubricant Industry) சொல்லப்படுகிறது. நாட்டில் 70,000க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களை கொண்டிருக்கும் கேஸ்ட்ரால் இந்தியா கடந்த 1982ம் ஆண்டு மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.

நிறுவனத்தின் சந்தை மதிப்பு 10,800 கோடி ரூபாய். இதன் புத்தக மதிப்பு 13 ரூபாய் மற்றும் வட்டி பாதுகாப்பு விகிதம் 237 மடங்குகளில் உள்ளது. கடனில்லா நிறுவனமாக(Debt Free) வலம் வரும் கேஸ்ட்ரால் இந்தியாவின் நிறுவனர்கள் பங்களிப்பு 51 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை.

இதன் கடந்த கால ஈவுத்தொகை விகிதம்(Dividend yield) 5 சதவீதத்திற்கு மேலாக உள்ளது. நேற்று வெளியிடப்பட்ட காலாண்டு முடிவில் இடைக்கால ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.2.50 என சொல்லப்பட்டுள்ளது. செப்டம்பர் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் 883 கோடி ரூபாயாகவும், செலவினம் 595 கோடி ரூபாயாகவும் உள்ளது. இதர வருமானமாக 12 கோடி ரூபாய் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 205 கோடியாக உள்ளது.

முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது, நிகர லாபம் 68 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. முந்தைய வருடத்தின் செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிகர லாபம் 8 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 2019ம் முழு ஆண்டில் நிறுவனத்தின் வருவாய் 3,877 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 827 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருட காலத்தில் 3 சதவீதமாகவும், பத்து வருட கால அளவில் 5 சதவீதமாகவும் உள்ளது. இது போல லாபம் கடந்த 5 வருடங்களில் 12 சதவீதமும், 10 வருட காலத்தில் 8 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 770 கோடியாக உள்ளது. பணவரத்தும்(Cash Flow) நிறுவனத்திற்கு சாதகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.