பங்குச்சந்தை அலசல் – வோல்டாஸ் பங்குகளை வாங்கலாமா ?
Voltas – A Tata Product – Fundamental Analysis
டாட்டா குழுமத்தின் ஒரு அங்கமான வோல்டாஸ்(Voltas) நிறுவனம் கடந்த 1954ம் ஆண்டு துவங்கப்பட்டதாகும். இந்நிறுவனம் திட்டங்கள் மற்றும் தயாரிப்புகள் வணிகத்தில் பரவலாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஏர் கண்டிஷனர், ஏர் கூலர்கள், நீர் குளிரூட்டிகள், நீர் விநியோகிப்பான் ஆகிய பிரிவுகளில் உற்பத்தி மற்றும் விற்பனை சேவையை செய்து வருகிறது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நாட்டின் முதல் இன்வெர்ட்டருடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை தயாரித்த நிறுவனம் வோல்டாஸ். இந்தியாவின் மிகப்பெரிய ஏர் கண்டிஷனிங் நிறுவனமாகவும் வோல்டாஸ் வலம் வருகிறது. உலகின் மிகப்பெரிய கோபுரமான துபாயின் பர்ஜ் கலிஃபா(Burj Khalifa) மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலின் மிகப்பெரிய கப்பலான குயின் மேரியிலும்(RMS Queen Mary 2) வோல்டாஸ் நிறுவனத்தின் குளிர் சாதனங்கள் பொருத்தப்பட்டிருப்பது அதன் சிறப்பம்சம்.
வீட்டு உபகரணங்கள் பிரிவில் உள்ள இந்நிறுவனம் நாடு முழுவதும் குறிப்பிடத்தக்க சேவைகளை கொண்டிருக்கிறது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 23,210 கோடி. புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ. 123 விலையில் உள்ளது. இதன் சந்தை பங்கு விலை புத்தக மதிப்பை காட்டிலும் 6 மடங்கில் வர்த்தகமாகி வருகிறது. நிறுவனத்திற்கு கடன்கள் பெரிதாக இல்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 30 சதவீதமாகவும், நிறுவனர்கள் தங்கள் பங்குகளை அடமானம் ஏதும் வைக்கவில்லை.
கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை 32 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. பங்கின் மீதான வருவாய் கடந்த பத்து வருட காலத்தில் 17 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. விற்பனை வளர்ச்சி கடந்த மூன்று வருட காலத்தில் 8 சதவீதமும், 5 வருட காலத்தில் 6 சதவீதமும் மற்றும் பத்து வருட காலங்களில் 5 சதவீதமும் வளர்ந்துள்ளது.
பங்குச்சந்தை இலவச வகுப்புகள்(Stock Market Course) – பதிவு செய்ய
நிறுவனத்தின் லாபம் கடந்த மூன்று வருடங்களில் 16 சதவீதமும், ஐந்து வருட காலத்தில் 18 சதவீதமும் மற்றும் 10 வருடங்களில் 8 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. வோல்டாஸ் பங்கின் விலை கடந்த ஐந்து வருடங்களில் 23 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. செப்டம்பர் 2019ம் காலாண்டின் முடிவில் நிறுவனத்தின் கையிருப்பு ரூ. 4,060 கோடி.
சமீபத்தில் வெளிவந்த டிசம்பர் 2019ம் காலாண்டு முடிவின் படி, நிறுவனத்தின் வருவாய் ரூ. 1,493 கோடியாகவும், நிகர லாபம் 87 கோடி ரூபாயாகவும் உள்ளது. கடந்த டிசம்பர் 2018 காலாண்டுடன் ஒப்பிடும் போது, வருவாய் மற்றும் லாபத்தில் பெரிய மாற்றம் எதுவுமில்லை. 2018-19ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 7,124 கோடி மற்றும் நிகர லாபம் ரூ. 508 கோடி.
நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 0.08 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம் 30 மடங்காகவும் உள்ளது. தற்போது இந்த பங்கின் விலை ரூ. 700க்கு மேல் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. அதே வேளையில் தள்ளுபடி செய்யப்பட்ட பணப்பாய்வின்(DCF) படி, பங்கு ஒன்றின் விலை 250 ரூபாய் மதிப்பை பெறும். நிறுவனத்தின் நிதி அறிக்கை திருப்திகரமாக உள்ளது. பிராண்டு(Value Brand) காரணத்தால் பங்கு விலை அதிகமாக காணப்படுகிறது. இந்த துறை பருவகால மற்றும் சுழற்சி முறையில் காணப்படுவதால், வருவாய் பெரும்பாலும் சொல்லப்பட்ட காலத்தில் தான் மீண்டெழும்.
பொதுவாக சில்லரை வணிகத்தில் குளிர் சாதனங்களின் சேவை கோடை காலத்தில் தான் தேவைப்படும். இந்த நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப விகிதங்கள் ஜூன் காலாண்டுகளில் (ஏப்ரல் – ஜூன்) தான் அதிகமாக இருக்கும். அதே போல மார்ச் காலாண்டுகளும் (ஜனவரி-மார்ச்) ஓரளவு வருமானத்தை ஈட்டும். எனவே வருவாய் மற்றும் பங்கு விலை குறைந்திருக்கும் காலங்களில் இந்த பங்கினை கவனிக்கலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை