கொப்பளித்த விலைவாசி உயர்வு – நவம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம்
Rising Prices on Essential Needs – CPI Retail Inflation to 5.54 Percent in November 2019
நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 4.62 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த நவம்பர் மாத பணவீக்கம் 5.54 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டில் சொல்லப்பட்ட இதே காலத்தில் பணவீக்கம்(Inflation) 2.33 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை உயர்வால் கடந்த மாத சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக காய்கறிகளின் விலை நவம்பர் மாதத்தில் 36 சதவீதமாக இருந்துள்ளது. இது அக்டோபர் மாத இறுதியில் 26 சதவீதமாக இருந்துள்ளது.
பருப்பு வகைகளின் விலை 14 சதவீதமும், மாமிசம் மற்றும் மீன் ஆகியவற்றின் விலை 9.38 சதவீதமும் உயர்ந்து காணப்பட்டுள்ளது. இது போல முட்டையின் விலையும் 6 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆக, அக்டோபர் மாதத்தில் 7.89 சதவீதமாக காணப்பட்ட உணவுப்பொருட்களின் சில்லரை விலை பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 10 சதவீதமாக இருக்கிறது.
வீட்டுமனை விலையும் 4.5 சதவீதம் உயர்ந்துள்ளது. புகையிலை பொருட்களின் விலை 3.26 சதவீதமும், துணிமணிகள் மற்றும் காலணிகள் 1.30 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதே வேளையில் எரிபொருட்களின் விலை இரண்டு சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
நவம்பர் மாதத்தில் நகர்ப்புற சில்லரை விலை பணவீக்கம்(Urban Retail Inflation) 5.76 சதவீதமாகவும், கிராமப்புறங்களில்(Rural) 5.27 சதவீதம் என்ற அளவிலும் சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அக்டோபர் மாதத்தை ஒப்பிடுகையில் இரு சார்பிலும் விலை உயர்ந்துள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருந்த குறுகிய கால இலக்கான 4 சதவீத பணவீக்கம் என்ற நிலையை கடந்த அக்டோபர் மாத பணவீக்கம் மீறியது. தற்போது அதனை விட சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்து காணப்பட்டுள்ளது. கடந்த நிதி கொள்கை குழு கூட்டத்தில் பாரத ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை(REPO Rate) குறைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை