2020ம் ஆண்டில் இந்திய வாகனத்துறை மீண்டு எழுமா ?
Will the Indian Automotive Industry recover in 2020 ?
கடந்த ஒரு ஒன்றரை வருடமாக இந்திய வாகனத்துறை மட்டுமில்லாமல் உலகளவிலும் வாகனத்துறையின் வளர்ச்சி குறைந்துள்ளது. சீன-அமெரிக்க வர்த்தக போர், கச்சா எண்ணெய் உற்பத்தியில் நிலவும் மாற்றம், பிரிட்டனின் பிரெக்ஸிட் ஒப்பந்தம் மற்றும் உள்நாட்டில் நிலவும் பலவீனமான தேவை நுகர்வு என பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதற்கான காரணிகள் சொல்லப்படுகிறது.
உள்நாட்டில் வாகனத்துறையின் வளர்ச்சி சில காலாண்டுகளாக இறங்குமுகத்தை சந்தித்து வருகிறது. மத்திய அரசு சார்பில் சில கொள்கைகள் பொருளாதாரத்தை ஊக்குவிக்க பயன்பட்டாலும், வரும் 2020ம் ஆண்டு இந்திய வாகனத்துறை மீண்டு எழுமா என்பதே பெரும்பாலானோரின் கேள்வி.
சமீப காலமாக வாகனத்துறையில் ஏற்பட்ட பலவீனமான நுகர்வு தன்மை(Weak Demand Consumption) மற்றும் அதனை சார்ந்த தேக்க நிலை ஆகியவை இந்த துறை மாற்றமடைந்து வருவதையும் சுட்டி காட்டுகிறது. கடந்த சில ஆண்டுகளாக வாகனத்துறை எதிர்பாராத அபரிதமான வளர்ச்சியை கொண்டிருந்தது. இதுவே தற்போது சந்தைக்கு மந்தநிலையை ஏற்படுத்தியுள்ளது.
இனி வரும் காலத்தில், ஒவ்வொரு துறையிலும் ஏற்படக்கூடிய மாற்றம், மிகப்பெரிய அளவில் பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தலாம். அதே சமயத்தில், அவை அதிக வேலை வாய்ப்புகளை கொண்டிருக்கும் என்பதிலும் ஐயமில்லை. மாற்றம் நடைபெற்று வருகிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளா விட்டாலும், உலகளவில் அனைத்து துறைகளிலும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன.
2020ம் ஆண்டில் உலகளவிலான வாகனத்துறையில் பல மாற்றங்கள் ஏற்படலாம். வாகனத்துறை உற்பத்தியாளர்கள் மற்றும் உபகரணங்களை வழங்கி வரும் நிறுவனங்கள் பல சவாலான நிகழ்வுகளை சந்திக்க நேரிடலாம் என மூடிஸ்(Moodys) நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த வருடத்தில் கார் வாகன விற்பனை(Car Sales) மற்றும் வணிக ரீதியிலான வாகன விற்பனை வளர்ச்சி குறையக்கூடும் எனவும், இதன் காரணமாக பெரும்பாலான வளர்ந்து வரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கக்கூடும் எனவும் கூறியுள்ளது.
பருவநிலை மாற்றங்களும், அதன் சார்ந்து எடுக்கப்படும் புதிய கொள்கைகளும் தற்போதைய வாகன சந்தையை பாதிக்கலாம் என சொல்லப்படுகிறது. விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். இதன் காரணமாக அவற்றின் வருவாயில் துண்டு விழலாம்.
நாட்டின் உற்பத்தி துறையில்(Manufacturing in GDP) வாகனத்துறையின் பங்கு 50 சதவீதமாக உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு வணிக வாகன உற்பத்தியில் உலகளவில் 7வது மிகப்பெரிய நாடாக இந்தியா இருந்தது கவனிக்கத்தக்கது. வாகனத்துறை விரைவாக மீண்டு எழுந்தால் மட்டுமே, நாட்டின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி சாத்தியப்படும். இருப்பினும், இலக்கின் மீது நம்பிக்கை கொண்டிருப்போம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை