மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் – அஞ்சலக வரி சேமிப்பு திட்டம்
Senior Citizen Savings Scheme (SCSS) – Postal Savings Scheme
அஞ்சலக சிறு சேமிப்பின் கீழ் பல திட்டங்கள் வலம் வந்தாலும், அதன் சிறப்பம்சமே மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் தான். இளம் தலைமுறையினருக்கும், வருமான வரி வரம்பில் உள்ளோருக்கும் பல சேமிப்பு திட்டங்களும், பல்வேறு முதலீட்டு சாதனங்கள் இருந்தாலும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சேமிப்பு திட்டங்கள் இருப்பது அவசியமாகும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்(SCSS) என்பது ஐந்து வருட கால வைப்பு திட்டம் போன்றது. ஒரு முறை மட்டும் வைப்பு தொகையாக சேமிக்கும் இத்திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ. 1000. அதற்கு மேற்பட்ட முதலீடு 1000 ரூபாய் மடங்கில் இருக்க வேண்டும். அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் வரி சலுகையும் உண்டு. திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகை ரூ. 1 லட்சத்திற்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் ரொக்கமாக செலுத்தலாம். ஒரு லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையாக இருந்தால், காசோலை(Cheque) மூலமாக மட்டுமே செலுத்த முடியும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதற்கு 60 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதே வேளையில் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் அல்லது சில துறைகளில் 60 வயதுக்கு முன்பு ஓய்வு பெறக்கூடிய நிலையில், 55 வயது தளர்வு என்ற சலுகை அளிக்கப்படுகிறது. எனவே, இது போன்ற சமயங்களில் 55 வயது நிரம்பியவர்கள் முதலீடு செய்யலாம். அதற்கான ஆவணங்களை கணக்கு ஆரம்பிக்கும் நிலையில் சமர்பிக்க நேரிடும்.
வெளிநாட்டு வாழ் இந்தியர்(NRI), இந்து கூட்டு குடும்பம்(HUF) ஆகியோர் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியாது. முதிர்வு காலம் 5 ஆண்டுகள். தேவைப்பட்டால் முதிர்வு காலத்தை அடுத்த மூன்று ஆண்டுகள் வரை கணக்கை நீட்டித்து கொள்ளலாம். கணக்கை முதிர்வு காலத்திற்கு முன்னரே மூட முடிவு செய்தால், கணக்கு துவங்கிய ஒரு வருடத்திற்கு பின்னர் மூடலாம். அதற்கு அபராத கட்டணம் வசூலிக்கப்படும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கை தனிநபர் ஒருவரின் பெயரில் அல்லது கூட்டு கணக்காகவும் (Joint Account கணவன் – மனைவி மட்டும்) தொடங்கலாம். நாமினியை எந்தவொரு சமயத்திலும் நிர்ணயிக்கலாம். தனிநபர் ஒருவர், ஒரு நேரத்தில் ஒரு கணக்கை மட்டுமே துவங்க முடியும். நடப்பில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் 8.6 சதவீதமாக உள்ளது.
திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டிற்கு வரி சலுகை உண்டு. அதே வேளையில் கிடைக்க கூடிய வட்டி வருவாய் ஒரு நிதியாண்டில்(2019-20) ரூ. 50,000 க்கு மிகும் போது, டி.டி.எஸ்.(TDS) பிடித்தம் செய்யப்படும். இன்று மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், அஞ்சலகத்தில் மட்டுமில்லாமல் வங்கிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.
கணக்கு துவங்க அடையாள மற்றும் முகவரிக்கான நகல், பான் எண், நாமினி விவரங்கள் மற்றும் முதலீட்டு தொகைக்கான காசோலை ஆகிய ஆவணங்கள் தேவைப்படும். பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் இத்திட்டம் குறுகிய கால இலக்கிற்கு பயன்படும்படி அமைந்துள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை