அப்போ ‘பேர்ல் வைன்’, இப்போ ‘கோல்டு வைன்’ – அடுத்த சதுரங்க வேட்டை
MLM Scam Alert – Goldvine World
திட்டம் இது தான் – நீங்கள் இந்த திட்டத்தில் 20 டாலர்கள் மட்டும் முதலீடு செய்தால் போதும். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 1440/- மட்டுமே முதலீடு செய்த மூன்று மாதங்களில் 23 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம். இதை விட பெரிய வாய்ப்பு, நீங்கள் மூன்று வருடங்களில் 37 கோடி ரூபாய் சம்பாதிக்கலாம். மேலும் 744 கோடி ரூபாய் வரை சம்பாதிப்பதற்கான வாய்ப்பும் கொடுக்கப்படுகின்றன. உங்களுடைய முதலீடு வெறும் 20 டாலர்கள்.
நீங்கள் எந்தவொரு பொருட்களையும் இங்கே விற்க தேவையில்லை. மற்றவர்களுக்கு நீங்கள் இந்த வாய்ப்பை (ஆள் சேர்ப்பது) அளித்தால் போதும். உங்களுக்கான வருவாய் எளிதாகி நீங்கள் விரைவில் கோடீஸ்வரராகலாம். என்ன ரெடியா ?
முன்னர் ‘பிட்காயின்(Bitcoin)’ என்று சொல்லப்படும் கிரிப்டோ நாணயத்தை அடிப்படையாக கொண்டு ‘பேர்ல் வைன் (Pearlvine)’ என்ற திட்டம் வந்தது. தற்போது இதனை போலவே, ‘கோல்டுவைன்(Goldvine)’ என்றொரு புதிய திட்டம் வந்துள்ளது. கோல்டுவைன் என்பது ஒரு நிறுவனம் அல்ல எனவும், அது ஒரு தானியங்கியாக செயல்படும் மென்பொருள் எனவும் குறிப்பிட்ட இணையதளம் சொல்கிறது. இந்த தானியங்கி மென்பொருளில் முதலீடு செய்யும் அனைவரும் கோல்டுவைனின் முதலாளிகள் எனவும் விவரிக்கிறது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கோல்டுவைன் மென்பொருள் மூலம் முதலீடு செய்யும் ஒருவருக்கு, ‘OneMato’ எனப்படும் டிவிடெண்ட் (ஈவுத்தொகை) யூனிட்கள் ஒதுக்கப்படும் எனவும், அந்த யூனிட்களை அவர் எப்போது வேண்டுமானாலும் விற்று விடலாம் எனவும் சொல்லப்படுகிறது. கோல்டுவைனில் ஒருவர் எந்தவொரு பொருட்களையும் விற்க தேவையில்லை என அத்திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் கூறுகின்றனர். முதலீடுகள் அனைத்தும் இணைய வழியே, அதற்கான ஆவணங்கள் மற்றும் கிளைகள் என்று எதுவுமில்லை.
‘பல்லேடியம்(Palladium)’ என்ற தரவரிசையில் 20 டாலர்களை மட்டும் முதலீடு செய்து, ‘கோல்டு’ என்று சொல்லப்படும் வரிசை மூலம் குறுகிய காலத்தில் 744 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என சொல்கின்றனர். இந்த திட்டத்தில் மற்றவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களையும் 20 டாலர்கள் முதலீட்டை மேற்கொள்ள செய்தால் போதும், வருவாய் ஈட்ட முடியும் என்கின்றனர். சொல்லப்பட்ட இணையதளத்தில் மேற்கோள் காட்டப்பட்ட நபர்களுக்கும், அவர்களின் புகைப்படங்களுக்கும்(Fake Team – Stealing People’s Identity) சம்மந்தமில்லை என்று மற்றொரு தளம் எச்சரிக்கிறது.
வருங்காலத்தில் மெய்நிகர் நாணயங்கள்(Cryptocurrency) உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சொன்னாலும், நம் நாட்டில் தற்போதைய நிலையில் அது தடை செய்யப்பட்டதே. நிதி நிர்வாகத்தில் இருக்கும் ஒழுங்குமுறை ஆணையத்தால் இன்னும், மெய்நிகர் நாணயம் செயல்பாட்டை புரிந்து கொள்ள முடியாத நிலையில், இதனை சார்ந்த சதுரங்க வேட்டை தளங்கள் இந்தியாவில் வளம் வந்த வண்ணம் உள்ளன. எந்தவொரு தொழிலும் விற்பனையை சார்ந்தே உள்ளன. அப்படியென்றால் விற்பனைக்கு ஒரு பொருளோ அல்லது சேவையோ இருக்க வேண்டும். வெறும் ஆட்களை சேர்ப்பதை கொண்டு ஒரு தொழில் வளர்ச்சி பெற்று விடாது. மல்டி லெவல் மார்க்கெட்டிங்(MLM) என சொல்லிக்கொண்டு, நம்மை போன்ற வளரும் நாடுகளில் பல ஏமாற்று மோசடி திட்டங்கள் வந்தும், காணாமல் போய்விட்டன. அந்த திட்டத்தை செயல்படுத்தியவரும், முதலீடு செய்தவர்களின் பணத்தை சுருட்டி கொண்டு ஓடுவதும் சாதாரணமான விஷயமாகி மாறி விட்டது.
அரசு நிர்வகிக்கும் பங்குச்சந்தை, பொருட்சந்தை(Commodity Exchange) மற்றும் நாணய சந்தையை(Currency Exchange) பற்றி நம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடியாத நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டிருப்பதாக சொல்லப்படும் கோல்டுவைன் போன்ற செயல்முறையை நம்மால் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும். பணம் மட்டுமே ஒருவருக்கு தேவையெனினும் பணம் சார்ந்த பேராசை மட்டுமே இருப்பது ஆரோக்கியமானதல்ல.
அமெரிக்காவில் மேலே சொல்லப்பட்ட மூன்று சந்தைகளிலும் அவர்களது பங்கு மக்கள் தொகையில் 60 சதவீதத்திற்கும் மேல். அதுவே நம் நாட்டில் 10 சதவீதத்திற்கும் கீழாக உள்ளது. நிதி சார்ந்த திட்டத்திலும், அதனை சார்ந்த முதலீடுகளையும் நாம் சரியாக புரிந்து கொள்வதற்கான கால அவகாசம் தேவைப்படுகிறது. வங்கி, காப்பீடு, பரஸ்பர நிதிகள், நிதிச்சந்தைகள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் போன்றவற்றில் உள்ள நிறை குறைகளை நாம் புரிந்து கொள்வதே சற்று சிக்கலான விஷயமாக உள்ளன. அப்படியிருக்கும் போது, வெறும் ஆட்களை சேர்க்கும் திட்டமாக சொல்லப்படும் இது போன்ற விஷயங்களில் ஒருவர் கவனமாக இருப்பது அவசியம்.
மல்டி லெவல் மார்க்கெட்டிங் அல்லது நெட்ஒர்க் மார்க்கெட்டிங்(Network Marketing) துறைக்கு ஒவ்வொரு நாட்டிலும், வெவ்வேறான விதிமுறைகள் உள்ளன. இந்த துறை பொதுவாக பொருட்களை அல்லது சேவைகளை வாடிக்கையாளர்களிடம் நேரிடையாக விற்க முடிவெடுக்கிறது. இதற்கு தேவையான நபர்களை, விற்பனையாளராக தேர்ந்தெடுத்து நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்கிறது. இதன் மூலம் இடைத்தரகர்கள் இல்லாமல், ஒரு பொருள் அல்லது சேவையை வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகிறது.
ஆனால், பொருளோ அல்லது சேவையோ இல்லாமல் ஆட்களை சேர்ப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம், கோடீஸ்வரர் ஆகலாம் எனில், அது ஒரு மோசடியே. ஒருவரால் குறைந்த பணத்தில், எந்தவொரு தொழிலையும் மேற்கொள்ளாமல், விற்பனை வளர்ச்சி இல்லாமல் உடனடியாக பணம் சம்பாதிக்க முடியுமா ? அப்படி ஒரு திட்டம் உண்மையென்றால், ஏன் அம்பானியும், அதானியும் மாபெரும் கட்டிடங்களை எழுப்பி, வேலையாட்களை கொண்டு பேரம் பேசி தொழில் செய்ய வேண்டும்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இன்னும் பி.ஏ.சி.எல்.(PACL) நிறுவன பிரச்சனை தீர்வு காணப்படவில்லை. இது போன்ற மோசடிகள் ஏராளம். சதுரங்க வேட்டை முதலாளிகளுக்கும், கோடீஸ்வரர்களுக்குமானதல்ல… அதன் இலக்கு குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை கொண்டவர்களுக்கு !
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை