Indian Stock market July 2019

20 நாட்களில் 200 பில்லியன் டாலர்களை இழந்த இந்திய பங்குச்சந்தை

20 நாட்களில் 200 பில்லியன் டாலர்களை இழந்த இந்திய பங்குச்சந்தை 

The Indian Stock Market lost $ 200 Billion in 20 days – Economic Slowdown

 

தேசிய பங்குச்சந்தையின் குறியீடான நிப்டி(Nifty50) கடந்த ஜூன் மாதத்தில் தனது வாழ்நாள் உச்சமாக 12,100 புள்ளிகளை அடைந்தது. நேற்று (01-08-2019) நிப்டி50 குறியீடு 138 புள்ளிகள் குறைந்து 10,980 புள்ளிகளாக வர்த்தகத்தை முடித்து கொண்டது. இதே போல மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ்(Sensex) குறியீடு, ஜூன் மாதத்தில் வாழ்நாள் உச்சமாக 40,310 புள்ளிகள் வரை சென்றது. நேற்று சென்செக்ஸ் குறியீடு 37,018 புள்ளிகள் என்ற அளவில் முடிந்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த நான்கு வாரங்களில் நிப்டி50 சுமார் 1220 புள்ளிகளும், மும்பை சந்தையின் சென்செக்ஸ் 3,300 புள்ளிகளும் இறக்கத்தை கண்டுள்ளன. அதாவது வர்த்தகமான கடந்த 20 நாட்களில் இந்திய பங்குச்சந்தை சுமார் 200 பில்லியன் டாலர்கள் அளவிலான மதிப்பை இழந்துள்ளது எனலாம். இந்திய மதிப்பில் சுமார் 13.85 லட்சம் கோடி ரூபாய்.

 

நாட்டின் 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி நடைபெற்றது. மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலில் எதிர்பார்த்த நிகழ்வுகள் நடைபெறாத நிலையில், அதனை தொடர்ந்து இந்திய பங்குச்சந்தையும் இறக்கம் கண்டது. ஜூலை மாதத்தில் பெரும்பாலான பங்குகள் 20 சதவீதத்திற்கும் மேல் இறக்கத்தில் முடிந்தது கவனிக்கத்தக்கது.

 

உலகளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை(Economy Slowdown), நாட்டில் உள்ள தொழில், வேலை வாய்ப்பு மற்றும் வாகன துறைக்கு தேவையான மத்திய அரசின் முடிவுகள் எட்டப்படாதது ஆகியவை சந்தையை பாதித்துள்ளன. அரசு சார்பில் மின்சார வாகனத்திற்கு வரி சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஏற்கனவே சந்தையில் இருக்கும் வாகனங்களுக்கு வரி சலுகை குறைப்பு ஏற்படாத நிலையில் இந்த துறை பெரும் சரிவை சந்தித்து வருகிறது.

 

வாகனத்துறையில் உள்ள முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் தொடர்ச்சியாக வருவாய் குறைந்த வண்ணம் உள்ளது. இதற்கு காரணமாக மத்திய அரசு சரியான கொள்கைகளை வகுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. அதே வேளையில், அடுத்த ஓரிரு வருடங்களில் இந்த நிலை சரிசெய்யப்பட்டு, வாகன துறை மற்றும் நாட்டில் உள்ள மற்ற தொழில்கள் மேம்படும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

பங்குச்சந்தையில் அந்நிய முதலீட்டாளர்களுக்கு வரி விதிப்பு சாதகமாக இல்லை. இதன் காரணமாக கடந்த மாதத்தில் சுமார் 16,870 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறி உள்ளனர். இருப்பினும் ஜூலை மாதத்தில் உள்நாட்டு முதலீடு 20,400 கோடி ரூபாய் சந்தைக்குள் வந்துள்ளது.

 

கடந்த ஒரு மாதத்தில் தேசிய பங்குச்சந்தை நிப்டி 7.5 சதவீதமும், சென்செக்ஸ் 6.7 சதவீதமும் இறக்கத்தை கண்டுள்ளது. வரவிருக்கும் நாட்களில் சந்தை இறங்கும் பட்சத்தில், நிப்டி(Nifty) 10,600 மற்றும் 10,480 புள்ளிகளை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சந்தையில் தற்போது குறுகிய காலத்தில் முதலீடு செய்யாமலிருப்பது நல்லது. நீண்ட கால முதலீட்டாளர்கள், நல்ல நிறுவன பங்குகளை கண்டறிந்து 10-20 சதவீத இறக்கத்தில் சிறுக சிறுக முதலீடு செய்து வரலாம். வாகன துறை கடந்த ஒரு மாதத்தில் 15 சதவீதமும், ஒரு வருட காலத்தில் 38 சதவீதமும் இறக்கத்தில் உள்ளன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.