டி.சி.எஸ். நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் ரூ. 8,131 கோடி
TCS Net profit rises to Rs. 8,131 Crore – Q1FY20
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் ஐ.டி. துறையில் முதன்மை இடத்தில் அங்கம் வகிக்கும் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்(Tata Consultancy Services) நிறுவனத்தின் 2019-20ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டு முடிவுகள் நேற்று வெளிவந்தது. ஜூன் மாத காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 38,172 கோடியாகவும், நிகர லாபம் 8,131 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
முதலாம் காலாண்டில் வரிக்கு முந்தைய லாபம்(PBT) 10,638 கோடி ரூபாயாக உள்ளது. தற்போது வெளிவந்த நிறுவனத்தின் நிகர லாபத்தை கடந்த வருடம் ஜூன் மாத காலாண்டுடன் ஒப்பிடும் போது 10.8 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. அதே வேளையில் வருவாய் வளர்ச்சியும் 11.42 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.
இதர வருமானமாக ரூ. 1,675 கோடி ரூபாய் மற்றும் தேய்மானமாக 817 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது. லைப் சயின்ஸ்(Life Science) மற்றும் சுகாதார துறை இரண்டும் 18 சதவீத வருவாய் வளர்ச்சியை கொண்டுள்ளது. மற்ற அனைத்தும் இம்முறை ஒற்றை இலக்க வளர்ச்சியை மட்டுமே கண்டுள்ளது.
டாலர் மூலமான(Currency terms) வருவாயிலும் டி.சி.எஸ். நிறுவனம் எதிர்பார்த்த அளவை முதலாம் காலாண்டில் பெறவில்லை. கடந்த ஜூன் காலாண்டில் சில்லரை மற்றும் நுகர்வோர் தொகுக்கப்பட்ட பொருட்களில் 10 சதவீத வளர்ச்சியை கண்டிருந்த நிலையில், இம்முறை 8 சதவீத வளர்ச்சியை மட்டுமே பெற்றுள்ளது.
வங்கி நிதி சேவை மற்றும் காப்பீடு(BFSI) துறையில் நிறுவனம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டவில்லை. இந்த துறையில் கடந்த ஜூன் காலாண்டில் 11.6 சதவீதத்தை பெற்றிருந்த நிலையில், இம்முறை 9 சதவீத வளர்ச்சியை மட்டுமே கண்டுள்ளது. இருப்பினும் இரண்டாம் காலாண்டில் எதிர்பார்த்த வளர்ச்சியை பெறுவோம் என நிறுவனத்தின் சார்பில் சொல்லப்பட்டுள்ளது.
நிறுவனத்தில் நிறுவனர்களின் பங்களிப்பு(Promters Holding) 72 சதவீதமாகவும், பங்கு அடமானம்(Pledging) சுமார் 3 சதவீதமாகவும் உள்ளது. சமீபத்திய பட்ஜெட் அறிவிப்பில் நிறுவனர்கள் தங்களது பங்களிப்பை 65 சதவீதமாக குறைத்து கொள்ள வேண்டுமென சொல்லப்பட்டது. இதன் தாக்கம் வரும் நாட்களில் டி.சி.எஸ். நிறுவன பங்கின் விலையில் ஏற்படலாம்.
டி.சி.எஸ். நிறுவனத்தின் சந்தை மதிப்பு 8 லட்சம் கோடி ரூபாயாகவும், 5 வருட சராசரி விற்பனை மற்றும் லாப வளர்ச்சி 12 மற்றும் 10 சதவீதம் முறையே காணப்படுகிறது. வரும் வெள்ளிக்கிழமை (12-07-2019) மற்றொரு பெரிய ஐ.டி. நிறுவனமான இன்போசிஸ் காலாண்டு முடிவுகள் வெளிவர இருக்கிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை