தங்க பத்திர திட்டம் ஜூன் 3 முதல் – முதலீடு செய்வது எப்படி ?
Sovereign Gold Bonds – Series I – How to invest in Gold Bonds Scheme ?
மத்திய அரசின் தங்க பத்திர திட்டம் 2019-20ம் நிதியாண்டுக்கான முதல் வெளியீடு ஜூன் 3 முதல் ஜூன் 7, 2019 வரை பதிவு செய்யப்பட்டு வருகிறது. பதிவிற்கு பின், வரும் ஜூன் 11ம் தேதி முதலீட்டாளர்களுக்கு பத்திரங்கள் வழங்கப்படும்.
பாரத ரிசர்வ் வங்கியால்(RBI) வெளியிடப்படும் இந்த தங்க பத்திர திட்டத்தில் இந்திய குடிமக்களாக உள்ள தனி நபர், இந்து கூட்டு குடும்பம், டிரஸ்ட்(Trust), பல்கலைக்கழகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் முதலீடு செய்யலாம். முதலீடு செய்வதற்கு வருமான வரி துறையிடம் பாண்(PAN) எண்ணை பெற்றிருப்பது அவசியமாகும்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
முதலீடு செய்யப்போகும் முன், நகைக்கடையில் தங்கம் வாங்கும் போது பின்பற்றும் கே.ஒய்.சி.(KYC) முறையை இங்கும் பின்பற்ற வேண்டும். தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவர், தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலேயே முதலீடு செய்யலாம் அல்லது பங்குச்சந்தையிலும் தங்க பத்திரத்தை வாங்கி கொள்ளலாம். தங்கப்பத்திர திட்டம் பங்குச்சந்தையில் வருடம் முழுவதும் வர்த்தகமாகி(Trading in Stock Exchange) கொண்டிருப்பதால், தனிநபர் ஒருவர் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம்.
தங்க பத்திர திட்டம்(SGB) என்பது நாம் தங்கம் வாங்குவது போன்றே கிராம் கணக்கில் வாங்கி கொள்ளலாம். ஆனால் நமக்கு அது நகைகளாக கிடைக்கப்பெறாமல், பத்திரமாக(Bonds) கிடைக்கப்பெறும். குறைந்தபட்ச முதலீடு 1 கிராமாக(1 Gram) உள்ளது. அதிகபட்சமாக தனிநபர் ஒருவர் ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் 4 கிலோ வரை முதலீடு செய்து கொள்ளலாம். டிரஸ்ட்களுக்கு இந்த வரம்பு 20 கிலோ வரையாகும்.
தங்கத்தின் தினசரி ஏற்ற-இறக்கத்தை தங்க பத்திர திட்டத்திலும் காணலாம். முதிர்வு காலம் 8 வருடங்கள் ஆகும். இருப்பினும் ஒருவர் முதலீடு செய்த ஐந்தாவது வருடம் முதல் வெளியேறி கொள்ளலாம். துவக்கத்தில் முதலீடு செய்த தொகைக்கு ஆண்டுக்கு 2.5 சதவீதம் என்ற அளவில் வட்டி கணக்கிடப்பட்டு, ஆறு மாதத்திற்கு ஒரு முறை, முதலீட்டின் மீதான வட்டி வருவாய்(Interest Income) வழங்கப்படும்.
முதலீட்டின் முதிர்வில், அன்றைய தங்கத்தின் விலைக்கேற்ப பணமாக மட்டுமே பெற முடியும், தங்கமாக கொடுக்கப்படாது. அதே வேளையில் முதலீடு செய்யப்படும் தொகை ஒரு கிராம் தங்கத்தின் விலையில்(Units per Gram) அமையும். தங்கத்தின் தரம் 999 சுத்தத்தில்(Purity) அடங்கும்.
பாரத ரிசர்வ் வங்கியின் வரைமுறைப்படி, ஒருவர் தான் முதலீடு செய்திருக்கும் தங்க பத்திரத்தினை அடமானம்(Collateral loan) வைத்து வங்கியில் கடனை பெற்று கொள்ளலாம். தங்க பத்திர திட்டத்தில் முதலீட்டை திரும்ப பெறும் போது, கிடைக்கப்பெறும் வருவாய்க்கு(Capital Gains) வரி சலுகையும் உண்டு. தங்க பத்திரத்தை மற்றொருவருக்கு மாற்றம் செய்யும் போதும் வரிச்சலுகைகள் வழங்கப்படுகின்றன.
தங்க பத்திர திட்டத்தில் பெரும்பாலும் குறைந்த அளவிலான முதலீட்டிற்கு மட்டும் ரொக்கமாக முதலீடு செய்ய முடியும். அதிகபட்ச முதலீட்டுக்கு வரைவோலை(DD), காசோலை(Cheque) அல்லது இணைய பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம்.
நடப்பு நிதியாண்டில் இரண்டாம் கட்ட வெளியீடு வரும் ஜூலை 8ம் தேதியும், மூன்றாவது வெளியீடு ஆகஸ்ட் மாதத்திலும் மற்றும் நான்காம் வெளியீடு செப்டம்பர் மாதத்திலும் தொடங்கப்படும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை