இந்து கூட்டு குடும்பம் – வருமான வரி தாக்கல் – பாடம் 4
Hindu Undivided Family (HUF) – Income Tax Returns – Lesson 4
வருமான வரி சட்டத்திலும் கூட்டு குடும்பமாக இருக்கும் பட்சத்தில், கிடைக்கக்கூடிய பலன்கள் அதிகமிருந்தாலும் இன்று நாம் அவ்வாறான கூட்டு குடும்பங்களை பார்க்க முடிவதில்லை. இந்து கூட்டு குடும்பம்(HUF) போன்று மற்ற மதங்களுக்கும் வருமான வரி சட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக புத்தம், ஜெயின் மற்றும் சீக்கிய குடும்பங்களும் இந்து கூட்டு குடும்பத்தை உருவாக்கலாம்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்து கூட்டு குடும்பத்தினை உருவாக்குவதன் மூலம் வருமான வரியையும் சேமிக்கலாம். ஒரு தனிநபர் மட்டுமே இந்து கூட்டு குடும்பத்தை ஏற்படுத்த முடியாது. இந்து கூட்டு குடும்பத்தில் குடும்ப தலைவர், மனைவி மற்றும் பிள்ளைகள் இடம் பெறுவர். இந்த குடும்பத்தில் உள்ள சொத்துக்கள் அனைவருக்கும் சமமாகவே பிரித்து கொடுக்கப்படும்.
இங்கு குடும்ப தலைவர் பெரும்பாலும் மூத்த வயதுள்ள ஆணாக இருப்பார். இவரை கர்த்தா(Karta) என்பார்கள். 2016ம் ஆண்டுக்கு முன் பெண் ஒருவர் கர்த்தாவாக இருக்க முடியாது. ஆனால் தற்போது இந்து கூட்டு குடும்பத்தில் உள்ள பெண் ஒருவரும் தலைவராக இருக்கலாம். குடும்பத்தில் ஒரு தலைவரை அடுத்து மற்றவர்கள் உறுப்பினர்கள் ஆவர்.
இந்து கூட்டு குடும்பத்தை உருவாக்க விரும்புபவர்கள் அதற்கான குடும்ப உறுப்பினர்களை கொண்டிருப்பதோடு, குடும்ப பெயரில் பான் எண்ணை(PAN) பெற வேண்டும். வங்கி கணக்கும் இந்து கூட்டு குடும்ப பெயரில் மட்டுமே பெற்றிருக்க வேண்டும். வரி சட்டம் பிரிவு(Income Tax Act) 80 C ன் கீழ் இந்து கூட்டு குடும்பம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள்(Members) என தனித்தனியாக வரி சலுகை பெறலாம். ஆனால் ஒரே முதலீடு அல்லது சேமிப்புக்கு இருவரும் சலுகை பெற முடியாது.
உதாரணத்திற்கு குமார் என்பவரின் குடும்பம் இந்து கூட்டு குடும்பத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டு குடும்பத்தின் பெயரில் செய்யப்பட்ட முதலீடு மற்றும் வருமானம், குடும்பத்தின் வருமானமாக எடுத்து கொள்ளப்பட்டு வரி விகிதங்கள் கணக்கிடப்படும். இப்போது குமார் என்பவரும் தனி நபராக வருமான வரி செலுத்துபவர் எனில், அவருக்கான வரி சலுகை தனியே கணக்கிடப்படும். இதன் மூலம் வரி சேமிப்பை(Save Income Tax) ஏற்படுத்தலாம்.
கூட்டு குடும்பத்தின் கீழ் சொத்துக்கள், காப்பீடு, வருமானங்களை பெறலாம். பூர்வீக சொத்துக்களின் மூலம் கிடைக்கும் வருமானம் இந்து கூட்டு குடும்ப பெயரிலும், குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களுக்குரிய வருமானத்தை தனித்தனியாகவும் வருமான வரி கணக்கில் சமர்ப்பிக்கலாம்.
இந்து கூட்டு குடும்பத்தில் உள்ள பாதகமே, சொத்துக்களில் அனைவருக்கும் சமமான பங்கு உள்ளது. குடும்பத்தில் உள்ள உறுப்பினர் ஒருவர் தனது சொத்தினை பிரிக்க முயற்சிக்கையில், அனைத்து உறுப்பினர்களின் அனுமதி தேவைப்படும். கூட்டு குடும்பத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பூர்வீக சொத்தில் சம உரிமையை பெறும். அது போல குடும்ப உறுப்பினர் ஒருவர் மணம் முடிக்கும் பட்சத்தில், அவரது துணையும் இந்து கூட்டு குடும்பத்தில் அங்கம் பெறுவர். எனவே நிர்வாக திறனை கருத்தில் கொள்வது அவசியம்.
கூட்டு குடும்பமாக செயல்பட்டால் நன்று. இல்லையெனில் நிதி சார்ந்த விஷயங்களில் அது பாரமாகவே அமையும்.
இன்னும் திட்டமிடுவோம்…
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை