நிலைக்கழிவு – வருமான வரி தாக்கல் – பாடம் 3
Standard Deduction – Income Tax Returns (Filing) – Lesson 3
தனி நபர் ஒருவரின் ஆண்டு வருவாயில் ஒரு நிலையான தொகை கழிக்கப்படுவதால் வரிக்கு உட்பட்ட வருமானத்தை குறைக்க உதவும். இதன் மூலம் ஒருவரின் வரி செலுத்திய தொகையும் குறைக்கப்படும்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பொதுவாக ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவருக்கு தனது சம்பளத்தில் சில பிடித்தங்கள்(Deductions) இருக்கும். அதே போல, தான் பெற்ற வருவாயில் சில வரி சலுகைகளும் கிடைக்கப்பெறும். உதாரணத்திற்கு வீட்டு வாடகை, விடுமுறை மூலமாக பெற்ற தொகை(Leave Encashment), குழந்தைகளுக்கான கல்வி செலவுகள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி(Providend Fund) போன்றவற்றிற்கு வரி விலக்கு உண்டு.
இது போக வருமான வரி துறையால் அறிவிக்கப்பட்ட நிலைக்கழிவுகளையும்(Standard Deduction) நாம் வரி சலுகையாக பெறலாம். கடந்த 2018ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் படி, மாத சம்பளம் வாங்கும் ஒருவருக்கு ரூ.40,000 /- வரை நிலைக்கழிவாக தனது வருவாயில் குறைத்து கொள்ள முடியும். நடப்பு வருட பட்ஜெட்டில் இந்த தொகை ரூ. 50,000 /- ஆக உயர்த்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. உயர்த்தப்பட்ட இந்த சலுகை நிதியாண்டு 2019-20 க்கு உரியதாகும். இதனை நாம் அடுத்த மதிப்பீட்டு காலத்தில் மட்டுமே பெற முடியும்.
மருத்துவ செலவுகள், பயணப்படிகள்(Transport Allowance) ஆகியவை இந்த நிலைக்கழிவு தொகையில் அடங்கும். முன்னர் பயணப்படி ரூ. 19,200 /- மற்றும் மருத்துவ செலவுகள் ரூ. 15,000 /- (ஆண்டுக்கு) வரையிலான தொகைக்கு மட்டுமே நாம் நிலைக்கழிவுகளை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இதுவரை வருமான வரி தாக்கல் செய்தவர்கள் மருத்துவ செலவுகள் மற்றும் பயணப்படிகளை தனித்தனியாக சமர்ப்பித்த நிலை மாறி, இந்த ஆண்டின் மதிப்பீட்டு காலத்தில்(AY 2019-20) அடிப்படை நிலைக்கழிவுகளாக 40,000/- ரூபாய் வரை கழித்து கொள்ளலாம்.
உதாரணத்திற்கு உங்கள் ஆண்டு வருவாய் ரூ.6 லட்சம் எனில், நிலைக்கழிவுகள் 40,000 /- ரூபாயை கழித்தது போக உங்களது வருமானம் ரூ.5,60,000 /- ஆக குறையும். அடுத்த வருட மதிப்பீட்டு காலத்தில்(AY 2020-21) இது 6,00,000 – 50,000 = 5,50,000 /- ஆக இருக்கும். மேலும் மற்ற வரிச்சட்ட பிரிவுகளின் (80C, 80D, 80E, 80G, etc) கீழும் நாம் வரி சலுகையை பெறலாம்.
ஒரு நிறுவனத்தில் தற்சமயம் பணிபுரியும் ஒருவர் ஏற்கனவே வேலை பார்த்த அல்லது ஓய்வு பெற்ற நிறுவனத்தில் ஓய்வூதியம் (பென்ஷன்) பெற்று வந்தால், அந்த வருமானம் வரிக்கு உட்பட்டதாகும். எனவே, அவரது மொத்த வருவாய் வருமான வரிக்கு உட்பட்டதாக இருக்கும் பட்சத்தில் அவர் அதற்கான வரியை செலுத்த வேண்டும். இந்நிலையிலும் அவர் அடிப்படை நிலைக்கழிவான ரூ. 40,000 /- சலுகையை பெறலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை