வருவாய் ஆதாரங்கள் – வருமான வரி தாக்கல் – பாடம் 2
Sources of Income – Income Tax Returns (Filing) – Lesson 2
சென்ற பாடத்தில் Financial Year மற்றும் Assessment Year என்ன என்பதை பற்றி நாம் பார்த்தோம். ஒருவர் சொல்லப்பட்ட மதிப்பீட்டு காலத்தில்(AY 2019-20) தனது வரி தாக்கலை செய்வது, அதற்கு முந்தைய வருடத்தில்(Previous year i.e 2018-19) பெற்ற வருவாய்க்கு தான்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தனி நபர் ஒருவர் தான் பெற்ற வருமானத்திற்கு ஏற்ப வரி சட்டங்களும் உள்ளன. வருமான அளவினை கொண்டு வருமான வரி விகிதங்களும்(Income Tax Slab & Rates 2019) மாறுபடும். இதற்கான வருவாய் ஆதாரங்கள்(Sources of Income) எவ்வாறு அமைகிறது என்பதனை பார்ப்போம். வருமான வரி செலுத்தும் ஒருவருக்கு தனது வேலையின் மூலம் கிடைத்த மாத ஊதியம் மட்டுமில்லாமல் மற்ற வருவாய் ஆதாரங்களும் உள்ளன. அவை,
- சம்பள வருமானம்(Income from Salary) – ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் போது கிடைக்கும் மாத ஊதியம், படிகள் மற்றும் அதனை சார்ந்த பிற வருவாய்.
- வீடு மூலம் பெறும் வருமானம்(Income from House Property) – வீடு அல்லது கட்டிடங்கள் மூலம் பெறும் வாடகை வருமானம்.
- மூலதன ஆதாய வருமானம்(Capital Gains) – ஒரு மூலதன சொத்துக்களை விற்கும் போது பெறும் லாபம் அல்லது நட்டம்.
- வணிகம் அல்லது தொழில்முனைவின் மூலம் வருமானம்(Income from Business / Profession) – தனது தொழில் அல்லது வணிகத்தின் மூலம் பெறும் வருமானத்திற்கு.
- மற்ற வருவாய் ஆதாரங்கள்(Other Source of Income) – பரிசுகள், வங்கி கணக்குகளில் பெறும் வட்டி வருமானம், குடும்ப ஓய்வூதியம்.
டி.டி.எஸ். பிடித்தம்(Tax Deducted at Source -TDS):
வருமான வரி சட்டத்தின் படி, நாம் பெறப்போகும் வருமானத்திற்கு முன்னரே வரி பிடித்தம் செய்யப்படும், இதனை டி.டி.எஸ். பிடித்தம் (Tax Deducted at Source) என்கிறோம். நாம் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பட்சத்தில் ஒரு நிதியாண்டுக்கான உத்தேச வருமானத்தை நிறுவனமே கணக்கிட்டு, அதற்கான வரி தொகையை நமது சம்பளத்தில் பிடித்து கொள்ளும். நிறுவனத்தில் நாம் சமர்ப்பித்த வரி சலுகை மதிப்புகள் போக, ஏதேனும் இருப்பின் வருமான வரி தாக்கல் செய்யும் போது, வரி சலுகைகளை பெறலாம்(சலுகை இருப்பின்). இதன் மூலம் நம்மிடம் நிறுவனம் பிடித்த தொகையை நாம் திரும்ப பெறலாம். வரி சலுகைக்கான ஆவணங்களை சரி பார்த்தும், பாதுகாப்பாகவும் வைத்து கொள்வது அவசியம்.
வங்கியில் உள்ள நமது சேமிப்பு கணக்கு(Savings Account) மற்றும் வைப்பு நிதி திட்டங்களுக்கு(Fixed Deposit) கிடைக்கப்பெறும் வட்டி வருமானமும் வரிக்கு உட்பட்டது. நடப்பு வரி சட்டப்படி, தனி நபர் ஒருவரின் ஆண்டு வருவாய் ரூ.2,50,000 க்கு மேலாக இருக்கும் பட்சத்தில் அவர் வரி செலுத்த(Tax Payer) அல்லது வரி தாக்கல்(Tax Return) செய்யக்கூடியவராக உள்ளார். வங்கிகளுக்கு நாம் நிறுவனத்தில் பெறும் வருமானத்தை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆதலால், வங்கிகளுக்கான வரி சட்டங்களின் படி, வாடிக்கையாளர்கள் பெறும் வட்டி வருமானத்திற்கு டி.டி.எஸ். பிடித்தம் செய்ய வேண்டும். இது சேமிப்பு கணக்கு மற்றும் வைப்பு நிதிக்கு பொருந்தும். முன்னர் ஒரு நிதியாண்டில் பெறப்படும் வட்டி வருமான தொகை ரூ.10,000 க்கு மேலாக இருந்தால் வங்கி 10 சதவீதம் டி.டி.எஸ். பிடித்தம் செய்யும். இந்த வருட புதிய பட்ஜெட் அடிப்படையில் ரூ. 40,000 /- வரையிலான வட்டி வருமானத்திற்கு வங்கிகள் பிடித்தம் செய்யாது.
வங்கிகளில் நாம் வட்டி வருமானத்தை கையில் பெறாவிட்டாலும், ஒவ்வொரு வருடமும் சொல்லப்பட்ட தொகைக்கு மேலாக வட்டி தொகை இருந்தாலே வங்கிகள் 10 சதவீதம் டி.டி.எஸ். பிடிக்கும். பான்(PAN) எண்ணை வங்கியில் இணைக்காத நிலையில் இது 20 சதவீதமாக எடுத்து கொள்ளப்படும். வங்கிகள் டி.டி.எஸ். பிடித்தம் செய்யாவிட்டாலும் அது நமது மொத்த வருமானத்தில் சேர்க்கப்பட்டு, அதற்கேற்ப வரி வசூலிக்கப்படும்.
நாம் வருமான வரி செலுத்தும் நபராக இருக்கும் பட்சத்தில், வங்கிகள் பிடித்தம் செய்த தொகை போக, மேலும் ஏதேனும் தொகையை செலுத்த வேண்டுமென்றால், இதனை நாம் வரி தாக்கல் செய்யும் போது, படிவம் 26AS ல் தெரிய வரும். நாம் வருமான வரி வரம்பிற்குள் வராத பட்சத்தில், வங்கிகளில் பிடித்தம் செய்யப்பட்ட வட்டி தொகையை திரும்ப பெறலாம்.
பொதுவாக வங்கிகளில் டி.டி.எஸ். பிடித்தம் செய்யாமலிருக்க படிவம் 15G ஐ பயன்படுத்தலாம். மூத்த குடிமக்கள் 15H என்ற படிவத்தை நிரப்ப வேண்டும். 15G மற்றும் 15H படிவங்கள் வங்கிகளில் கிடைக்கப்பெறும்.
இன்னும் திட்டமிடுவோம்…
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை