பங்குச்சந்தை ஏற்ற, இறக்கம் – இந்த வருடம் என்ன நடக்கலாம் ?
Indian Stock Market Ups and Downs – What can happen this year 2019 ?
கடந்த 2014ம் ஆண்டில் ஏற்றமடைய துவங்கிய சந்தை 2017ம் வருடம் சந்தையின் உச்சத்தில் இருந்தது. கடந்த ஒரு வருடமாக இந்திய பங்குச்சந்தை ஏற்ற-இறக்கத்தில் மட்டுமே வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. தற்போது நாடாளுமன்ற தேர்தலை நோக்கி சந்தையின் போக்கு சென்று கொண்டிருந்தாலும், கடந்த வரலாற்றில் அரசியலை சார்ந்து சந்தை பெரும்பாலும் இல்லை என்பது தெளிவாகிறது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பட்ஜெட் தாக்கல் மற்றும் தேர்தல் காலங்கள் சிறிய ஏற்ற இறக்கத்தை சந்தையில் ஏற்படுத்தியிருந்தாலும், அதன் பாதிப்பு இந்திய பங்குச்சந்தையில் வெகுவாக இல்லை எனலாம். நடப்பு நிதி ஆண்டில் சந்தையின் ஏற்ற இறக்கம் பெரும்பாலும் நிறுவனத்தின் வருவாய் அறிக்கை(Company Earnings) மற்றும் சந்தை அதிக மதிப்பில்(Market Valuation) வர்த்தகமாகி கொண்டிருந்தது தான் காரணமாக உள்ளது.
இனி அடுத்து வரும் காலங்களில் சந்தை எப்படி இருக்கலாம் என கணிப்பது அவ்வளவு சுலபமல்ல. இருப்பினும் வரலாற்று தகவல்கள் அதற்கான வாய்ப்பை நமக்கு எப்போதும் தந்து கொண்டு தான் இருந்துள்ளது. உலகளாவிய பொருளாதார மந்த நிலை, அமெரிக்க-சீன வர்த்தக போர், இங்கிலாந்து நாட்டின் பிரெக்ஸிட்(Brexit) பிரச்னை மற்றும் உள்நாட்டு நிகழ்வுகள் சந்தையில் பங்குகள் வாங்குவதற்கான வாய்ப்பாக அமைந்து கொண்டிருக்கிறது.
சந்தையில் முதலீடு செய்ய பல்வேறு வகையான அடிப்படை பகுப்பாய்வுகள் இருப்பினும், ஒட்டுமொத்த சந்தையின் விலையை அறிந்து கொள்ள கீழ்கண்ட நான்கு காரணிகள்(Four Factors) நமக்கு உதவும். இதன் மூலம் இந்திய பங்குச்சந்தையின் அடுத்தகட்ட நகர்வுகளை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
-
Price to Earnings(P/E)
-
Price to Book Value (P/B)
-
G-sec X PE (Price to Earnings)
-
Market Cap to GDP
Price to Earnings மற்றும் Price to Book Value பற்றி நமது வர்த்தக மதுரை தளத்தில் நாம் ஏற்கனவே சொல்லியுள்ளோம். இவை இரண்டும் அடிப்படை பகுப்பாய்வு காரணிகளை(Fundamental Analysis factors) சார்ந்தவை.
பங்குச்சந்தையை பற்றிய அடிப்படை கல்வி உங்களுக்கு இலவசமாக வேண்டுமா ?
சந்தையில் உள்ள ஒரு நிறுவனத்தின் பங்கின் விலையையோ அல்லது ஒட்டுமொத்த சந்தையின் விலையை அதனதன் வருவாயுடன் ஒப்பிட்டு பார்த்தல் Price to Earnings எனப்படுகிறது. ஒரு நிறுவனத்தின் அல்லது சந்தையின் விலையுடன் புத்தக மதிப்பை கொண்டு ஒப்பிட்டு ஆராய்தல் Price to Book Value ஆகும். கீழ்காணும் தேசிய பங்குச்சந்தையின் இணைய தளத்தில் இதன் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். பொதுவாக சந்தையில் பி.இ. மற்றும் பி.பி. விகிதம் அதிகமாக இருக்கும் சமயத்தில், ஈவு தொகை(Dividend Yield) குறைவாக இருக்கும்.
Nifty PE, PB, Dividend Yield Valuation – NSE India
மூன்றாவதாக அரசாங்க பத்திரங்கள்(Govt. Securities) வழங்கும் வட்டி விகிதங்களை, PE விகிதத்துடன் பெருக்கி விட்டு அதன் மதிப்பை சார்ந்து பங்குச்சந்தை நகர்வுகளை முடிவெடுப்பது. அரசாங்க பத்திரங்கள் பொதுவாக பத்து வருட காலத்தில்(10 year Bond Yield %) முதிர்வடையும் திட்டத்திற்கு வட்டி விகிதங்களை அறிவிக்கும். இதனை சந்தையின் பி.இ. விகிதத்தில் ஒப்பிட்டு பார்க்கும் போது, நமக்கு தற்போதைய சந்தையின் நிலை தெரிய வரும்.
Valuation = G-Sec X PE
நான்காவதாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) எண்களோடு சந்தையின் மதிப்பை(Market Capitalization) ஒப்பிட்டு கொள்வது ஒரு மதிப்பீடு அம்சமாகும். கடந்த பத்து வருட காலத்தில் பங்குச்சந்தையின் மதிப்பை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் சில காலங்களில் சந்தையின் மதிப்பு மிக அதிகமாகவும், அதே வேளையில் பல சமயங்களில் சந்தை தள்ளுபடி விலையில் அதன் மதிப்பை கொண்டிருந்தது.
சென்ற வருடம் ஜனவரி மாதத்தில் சந்தையின் மதிப்பு ரூ. 156 லட்சம் கோடியாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 162 லட்சம் கோடியாகவும் இருந்துள்ளது. ஆக, உள்நாட்டு உற்பத்தியில் சந்தை மதிப்பு 4 சதவீத தள்ளுபடியில் மட்டுமே கிடைத்துள்ளது. இதுவே கடந்த டிசம்பர் 2007ல் சந்தை மதிப்பு அதிகமாக இருந்ததன் காரணமாக பின்னர் பெரிய வீழ்ச்சியை கண்டது நினைவிருக்கலாம். பின்னாளில் மார்ச் 2009ம் வருட காலத்தில் சந்தை 39 சதவீத தள்ளுபடியில் கிடைத்ததும், அந்த நேரத்தில் முதலீடு செய்தவர்கள் இன்று லட்சங்களையும், கோடிகளையும் குவித்துள்ளனர் என்பதை மறுக்க முடியாது.
தற்போது 2019ம் வருட காலத்தின் பிப்ரவரி மாதத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 186 லட்சம் கோடியாகவும், சந்தை மதிப்பு 140 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(Gross Domestic Product) சந்தை மதிப்பு 25 சதவீத தள்ளுபடியில் கிடைத்திருப்பதை காட்டுகிறது. சந்தையின் மதிப்பு எப்போதெல்லாம் தள்ளுபடி விலையில் கிடைக்கிறதோ அப்போது தான் முதலீட்டாளராக நாம் முதலீடு செய்ய வேண்டிய காலமிது.
சந்தை இன்னும் இறக்கத்தை காணலாம் என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். இருப்பினும், தற்போது சந்தை தள்ளுபடியில் காணப்படுவதால் பங்குகளை வாங்கி வைப்பதற்கான காலமாகவே இன்று பார்க்கப்படுகிறது. சந்தை மேலும் இறக்கத்தில் சென்றாலும், அது முதலீடு செய்வதற்கான வாய்ப்பாகவே நாம் பார்க்க வேண்டும். இது கடந்த கால புள்ளிவிவர வரலாறு, எதிர்காலத்தை நம்மால் கணிக்க முடியாது. நீண்டகாலத்தில் பங்குச்சந்தை நல்ல வருமானத்தை தரும் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை