நுகர்வோர் விலை பணவீக்கம் செப்டம்பரில் சற்றே உயர்வு – 3.77 %
CPI Inflation Slightly higher in September 2018 – 3.77 percent
உணவு பொருட்களின் விலை உயர்வால் கடந்த செப்டம்பர் மாதத்தின் சில்லரை பணவீக்கம் (CPI – Retail Inflation) 3.77 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3.69 % அளவில் இருந்தது. சந்தையில் வல்லுநர்கள் எதிர்பார்த்த 4 % அளவை செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் எட்டவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
முன்னர், பாரத ரிசர்வ் வங்கி (Reserve Bank of India -RBI) கணித்த மதிப்பீட்டில் ஜூலை – செப்டம்பர் 2018 காலாண்டு முடிவில் சில்லரை விலை பணவீக்கம் 4.6 சதவீதமாக இருக்கும் என்பதை கடந்த சில வாரங்களுக்கு முன் 4 சதவீதமாக மாற்றியமைத்தது. தற்போது இதன் மதிப்பீட்டில் சில்லரை பணவீக்கம் குறைவாகவும், அதே நேரத்தில் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது சற்றே உயர்ந்தும் காணப்படுகிறது.
உணவுப்பொருட்களின் (Food and Beverages) விலை 0.85 சதவீதத்திலிருந்து 1.08 சதவீதமாக உயர்ந்தது. பழங்கள் மற்றும் பால் பொருட்களின் விலை குறைந்தும், புகையிலை சார்ந்த பொருட்களின் விலை உயர்ந்தும் உள்ளது. பழங்களின் விலை 3.57 சதவீதத்திலிருந்து 1.12 % ஆக குறைந்தும், மீன் மற்றும் மாமிசத்தின் பணவீக்கம் 3.21 % லிருந்து 2.32 சதவீதமாக செப்டம்பர் மாதத்தில் இருந்தது.
பருப்பு வகைகளின் பணவீக்கம் (-8.58) சதவீதமாக காணப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதன் விலை (-7.76) இருந்தது குறிப்பிடத்தக்கது. கிராமப்புற பணவீக்கம் 3.34 சதவீதமும், நகர்புறத்தில் 4.31 சதவீதமும் உள்ளது. ஆகஸ்ட் மாத கிராமப்புற பணவீக்கம் 3.41 % ஆகவும், நகர்ப்புற விலைவாசி 3.99 சதவீதமாகவும் இருந்தது.
நுகர்வோர் விலை குறியீட்டு எண் 140.40 லிருந்து (ஆகஸ்ட் 2018) கடந்த மாதத்தில் 140.30 என்ற மதிப்பில் உள்ளது. நுகர்வோர் விலை பணவீக்கம் (Consumer Price Index) மதிப்பீடு கடந்த 2012 ம் ஆண்டை தொடக்க ஆண்டாகவும், அதன் அடிப்படை மதிப்பை 100 ஆகவும் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை