நடப்பு வருடத்தில் நாட்டின் வளர்ச்சி 7.3 சதவீதத்திலே இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்
Growth Rate will be at 7.3 percent for India – International Monetary Fund
நடப்பாண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் 7.3 % என்ற அளவிலே இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) கணித்துள்ளது. முதலீடு மற்றும் தனியார் நுகர்வு ஆகியவை நாட்டின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்து வருகிறது. ஜி.எஸ்.டி. (GST) நடைமுறையும் துரிதமான வளர்ச்சிக்கு உதவுவதாக நாணய நிதியம் கூறியுள்ளது.
கடந்த வருடத்தில் நாட்டின் வளர்ச்சி (GDP) 6.7 சதவீதத்தை எட்டியது. உலக அளவில் பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து நாடுகளில் சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளி வருகிறது. 2019 ம் ஆண்டு முடிவில் இந்தியா, சீனாவை காட்டிலும் 1.2 சதவீத வளர்ச்சியை கொண்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது சார்ந்து, மற்றொரு நிகழ்வில் பேசிய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், ‘ 2030 ம் ஆண்டில் பொருளாதாரத்தில் உலகின் முதல் மூன்று இடங்களில் நமது நாடும் ஒன்றாக இருக்கும். தற்போது இந்தியா 6 வது இடத்தில் இருக்கிறது. ‘ என்றார்.
சீனாவில் 2017 ம் ஆண்டுக்கான வளர்ச்சி விகிதம் 6.9 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது 2018 ம் வருடத்தில் 6.6 சதவீதமாகவும், அதனை தொடர்ந்து 2019 ல் 6.2 சதவீதமாக குறைத்து மதிப்பீடப்பட்டுள்ளது. இதற்கான காரணமாக வெளிநாட்டு தேவைகள் மற்றும் அதனை சார்ந்த வளர்ச்சி குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
நமது நாட்டின் நடுத்தர கால வளர்ச்சி சற்று சவால் அளிக்கக்கூடியதாகவும், உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் உள்நாட்டில் தற்காலிகமாக பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 2018 ம் ஆண்டில் 2.9 சதவீதமாகவும், இது 2019 ல் 2.5 சதவீதமாக குறைத்து கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள், பாரத ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள், புதிய திவால் சட்டம் (IBC) போன்றவை உதவக்கூடும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை