வருமான வரி தாக்கலுக்கு எந்தெந்த படிவங்களை பயன்படுத்த வேண்டும் ?
Which Income Tax Return (ITR) Form to use – Efiling ?
நமது வாசகர்கள் சிலர், வருமான வரி தாக்கலுக்கு யார் எந்தெந்த படிவங்களை (Forms) பயன்படுத்த வேண்டும் என கேட்டுயிருந்தனர். வருமான வரி அலுவலகம் சார்பில் ஒவ்வொருவரின் வருமானம் மற்றும் முதலீட்டின் பலனை பொறுத்து தனித்தனி படிவங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தனி ஒருவருக்கு மட்டுமல்லாமல் நிறுவனம் மற்றும் டிரஸ்ட் போன்றவற்றிற்கும் பொருந்துமாறு அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் ஏழு வருமான வரி தாக்கல் படிவங்கள் ( 7 ITR Forms) உள்ளன. இந்த ஏழு படிவங்களும் அவரவரின் வருமான அளவு மற்றும் அவர்கள் மேற்கொண்ட முதலீடு, அதனை சார்ந்த பலனை அனுபவிக்கும் எண்ணிக்கையை பொறுத்து மாறுபடும்.
Types of ITR Forms:
- ITR – 1
- ITR – 2
- ITR – 3
- ITR – 4
- ITR – 5
- ITR – 6
- ITR – 7
ITR – 1 (Sahaj):
வருமான வரி தாக்கலில் (Income Tax Return) முதல் படிவமாகவும், அடிப்படை படிவமாகவும் ITR -1 உள்ளது. இதனை ஸஹஜ் (Sahaj) எனவும் சொல்வதுண்டு. இந்தியில் ஸஹஜ் என்றால் ‘எளிதான’ என அர்த்தமாகும். இது தனி நபர் (Individual) சமர்ப்பிக்கும் எளிமையான படிவமாகும். எனவே நிறுவனங்கள் இந்த படிவத்தை பயன்படுத்த இயலாது. இதனை பயன்படுத்த ஒருவர் இந்திய குடியுரிமை மற்றும் சாதாரண குடியுரிமை (Residents and Ordinary Residents) உள்ளவராக இருக்க வேண்டும்.
மாத சம்பளம் அல்லது ஓய்வூதியம் பெறும் தனி நபர் இந்த படிவத்தை பயன்படுத்தலாம். ஒரே ஒரு வீட்டை மட்டும் கொண்டவர், சம்பளம் போக இதர ஆதாரத்தில் (Other Sources) வருமானம் ஈட்டுபவர் ITR -1 ஐ பயன்படுத்தலாம். ஆனால் இதர வருமானம் லாட்டரி மற்றும் குதிரை பந்தயத்தில் பெற்ற தொகையாக இருக்க கூடாது. தனிநபர் வருமானம் ஒரு குறிப்பிட்ட நிதி ஆண்டில் ரூ. 50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
போர்ச்சுகீசிய சிவல் சட்டத்தின் கீழ் வருமானம் பெற்றவர், இந்த படிவத்தை பயன்படுத்த முடியாது. தொழில் மூலம் வருமானம் ஈட்டுபவர், விவசாய வருமானம் ரூ. 5000 /- க்கு மேல் உள்ளவரும் இந்த படிவத்தை பயன்படுத்த முடியாது. மூலதன ஆதாயம் பெற்றுள்ளோர் மற்றும் வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் வருமானம் போன்றவைகளுக்கு இந்த படிவம் பொருந்தாது.
அதே நேரத்தில் வரி விலக்களிக்கப்பட்ட நீண்ட கால மூலதன ஆதாயம் மற்றும் ஈவுத்தொகைகளுக்கு அறிக்கையிடல் (Reporting Purpose for Exempted Long term capital gains and exempted dividend income) சார்ந்த விஷயமாக இந்த படிவத்தை பயன்படுத்தலாம். இதர வருமானத்தின் கீழ் வருமான இழப்பு சமர்பிப்பவர்கள் ITR – 1 ஐ பயன்படுத்த இயலாது.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ITR – 2:
தனிநபர் அல்லது இந்து கூட்டு /பிரிக்கப்படாத குடும்பம்(HUF) உள்ளவர்களின் வருமானம் ஒரு நிதியாண்டில் ரூ. 50 லட்சத்திற்கு மேல் இருப்பின் ITR – 2 படிவத்தை அணுகலாம். ITR – 1 படிவத்தை சமர்ப்பிக்க இயலாதவர்கள், அதே வேளையில் தொழில் மூலம் வருமானம் பெறாதவர் இந்த படிவத்தை பயன்படுத்தலாம்.
வீடு மூலம் வருமானம் பெறுபவர் மற்றும் மூலதன ஆதாய வருமானம் பெறுபவர்கள் ITR – 2 ஐ எடுத்து கொள்ளலாம். வெளிநாட்டு வருமானம், விவசாய வருமானம் ரூ. 5000 /- க்கு மேல் உள்ளவர்கள், நிறுவனத்தில் கூட்டாளியாக உள்ளோர் (Partner) இந்த படிவத்தை சமர்ப்பிக்கலாம்.
ITR – 3:
தொழில் மூலம் வருமானம் ஈட்டும் தனிநபர் அல்லது இந்து கூட்டு குடும்பம் இந்த படிவத்தை நிரப்பலாம். நிறுவனங்கள் மற்றும் கூட்டு நிறுவனங்கள் ITR – 3 ஐ பயன்படுத்த இயலாது.
ITR – 4:
ITR -4 படிவத்தை சுகம் (SUGAM) என கூறுவதுண்டு. பிரிவு 44AD, 44ADA, 44AE மூலம் தொழில் வருமானம் பெறுபவர், மாத சம்பளம் அல்லது ஓய்வூதியம், ஒரே ஒரு வீடு மூலம் வருமானம் ஈட்டும் தனிநபர் / இந்து கூட்டு குடும்பம் / கூட்டு நிறுவனம் இந்த படிவத்தை நிரப்பலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட வீடு மூலம் வருமானம் ஈட்டுபவர், வெளிநாட்டு சொத்து அறிவித்தல் மற்றும் வெளிநாட்டு வருமானம் உள்ளவர், மூலதன ஆதாயம், கணக்கில் சொல்லப்படாத பண வரவு, முதலீடுகள் உள்ளவர் இந்த படிவத்தை நிரப்ப முடியாது.
ITR – 5:
நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொறுப்பு கொண்ட நிறுவனங்கள்(LLP), கூட்டுறவு சங்கங்கள், உள்ளூர் ஆணையாளர்கள் (Local Authorities), தனிநபர் சேர்ந்த சங்கங்கள்(BOI) ITR -5 ஐ பயன்படுத்த வேண்டும்.
ITR – 6:
பிரிவு 11 ன் கீழ் வருமான வரி விலக்கு பெறாத நிறுவனங்கள் இந்த படிவத்தை பயன்படுத்த வேண்டும். பொதுவாக பிரிவு 11 ல் தான் தொண்டு நிறுவனங்கள் தங்களுக்கு கிடைக்கும் தொகையை வரி விலக்காக பெறுகின்றன.
ITR – 7:
வருமான வரிச்சட்டம் பிரிவு 139(4A), 139(4B), 139(4C) மற்றும் 139(4D) கீழ் வரும் தனிநபர் அல்லது நிறுவனங்கள் ITR -7 படிவத்தினை பயன்படுத்தலாம். அறக்கட்டளை, மதம் சார்ந்த, அரசியல் கட்சிகள், கல்வி மையங்கள், பல்கலைக்கழகங்கள் இந்த படிவத்தை நிரப்பும்.
நினைவிருக்கட்டும்:
கடந்த நிதியாண்டின் ( FY 2017-18) வருமான வரி தாக்கலுக்கான கடைசி தேதி வரும் ஜூலை 31 ம் தேதி. நீங்கள் மதிப்பீடு செய்யும் காலம் – AY 2018-19.
ITR -1 படிவத்தை நிரப்ப எளிய வழிமுறை (English version) – Efiling
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை