2000 எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களை ஏமாற்றிய கால்சென்டர்
SBI Credit Card Holders cheated by Fake Call center
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருந்த போதிலும், தொழில்நுட்ப திருட்டுகளும் அதிகமாக நடந்து வருகின்றன. இதிலும் குறிப்பாக வங்கி மோசடிகள் தொழில்நுட்பத்தின் உதவி கொண்டே பெரும்பாலும் நடைபெறுகின்றன.
சமீபத்தில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள ஒரு ஆன்லைன் ஷாப்பிங் இணையதளத்தின் மூலம் மோசடி நடந்துள்ளது. போலி கிரெடிட் கார்டு கால் சென்டர் மூலம், jayyshree.com என்ற இணையதள பரிவர்த்தனைகள் வாயிலாக OTP – ஒரு முறை கடவுச்சொல்லை கொண்டு 2000 எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களை ஏமாற்றியுள்ளனர்.
2000 கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களிடம் மொத்தமாக சுமார் 5 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடியில் 30 டெலி காலர்கள்(Tele Callers) என்று சொல்லப்படும் கால்சென்டர் தொலைபேசி அழைப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவற்றில் பெரும்பாலும் பெண் அழைப்பாளர்களே ஆவர்.
மோசடியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் சைபர் கிரைம் போலீசார் கடந்த ஜூலை 8 ம் தேதி கைது செய்துள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் ஆணையர் கூறியதாவது, ‘ எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டு பிரிவு ஊழியர்கள் பேசுவது போன்று, வாடிக்கையாளர்களிடம் தொலைபேசியில் பேசி கிரெடிட் கார்டு விவரங்களை சேகரித்து, அதன் மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு மோசடி செய்துள்ளனர் ‘ என்றார்.
இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட விஜய் குமார் சர்மா என்ற நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளில் வாடிக்கையாளர்கள் கவனமாக செயல்படும் படி சைபர் கிரைம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை