தள்ளுபடி பணப்பாய்வு மற்றும் பாதுகாப்பு விளிம்பு – வகுப்பு 13.0
Discounted Cash Flow and Margin of Safety
Discounted Cash Flow (DCF) Valuation:
நீங்கள் ஏதேனும் ஒரு முதலீட்டு சாதனத்தில் (Investment Products) ரூ. 10,000 /- ஐ ஒரு முறை மட்டுமே முதலீடு செய்கிறீர்கள் என வைத்து கொள்வோம். உங்களுக்கு அந்த தொகை பத்து வருடங்களுக்கு பிறகு தான் தேவைப்படுகிறது. பத்துவருட முடிவில் (10 % வட்டியில்) உங்களுக்கு கிடைப்பது ரூ. 25,937/-. நீங்கள் செய்த முதலீட்டை தவிர்த்து பார்த்தால், உங்களுக்கு கிடைத்த முதலீட்டு வருமானம் – ரூ. 15,937 /- ( 25,937 – 10,000). இந்த முதலீட்டின் மூலம் கிடைத்த 15,937 ரூபாயை நாம் நிகர தற்போதைய வருமானம் (அ) மதிப்பு (NPV – Net present value) என்கிறோம். இதனை போன்று நமது பங்குச்சந்தை நிறுவனத்திலும். நீங்கள் ரூ. 10,000 ஐ ஒரு நிறுவனத்தில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்திருந்தால் உங்களுக்கு கிடைக்கும் நிகர தற்போதைய மதிப்பு என்பது அவசியமானது. நீங்கள் முதலீடு செய்யும் நிறுவனத்தின் தொழில் மூலம் கிடைக்கும் NPV மதிப்பு நேர்மறையாக இருந்தால், அந்த நிறுவனத்தின் வருவாய் செலவை காட்டிலும் அதிகமாக உள்ளது எனலாம். NPV மதிப்பு சுழியாக அமைந்தால் (பூஜ்யம்) அந்த நிறுவனத்தின் பணப்பாய்வு அறிக்கையின் படி, வரவு-செலவில் மாற்றமில்லை என எடுத்து கொள்ளலாம். NPV மதிப்பு எதிர்மறையாக இருப்பின், நிறுவனத்தின் செலவு வருவாயை காட்டிலும் அதிகமாயுள்ளது எனலாம். இருப்பினும், சில சமயங்களில் ஒரு நிறுவனம் குறிப்பிட்ட வருடத்தில் புது கிளைகள் மற்றும் கட்டிடங்களுக்காக செலவு செய்திருக்கலாம்.அதனால் பணப்பாய்வு அறிக்கையை (Cash Flow statement) ஆராய்வது முக்கியமானதாகும்.
ஒரு நிறுவனத்துக்கு வர வேண்டிய தொகை குறிப்பிட்ட காலத்தில் சரியாக வந்திருந்தால் அந்த நிறுவனத்தின் மற்ற செயல்பாடுகள் நன்றாக இருந்திருக்கும். ஆகையால் நாம் பார்க்க போகும் இந்த முறை பணப்பாய்வு (Cash Flow) அடிப்படையில் அமையும். ஒரு நிறுவனத்தின் அனைத்து செலவினங்களும் போக, உபரியாக எவ்வளவு தொகையை கொண்டிருக்கிறது என்பதை பணப்பாய்வு அறிக்கையில் அறியலாம். இந்த உபரியை Free Cash Flow (FCF) எனலாம். இது ஒவ்வொரு வருடமும் மாறுபடும். இந்த உபரி என்று சொல்லப்படும் Free Cash Flow ஒரு முதலீட்டாளருக்கு தேவையானது. இதனை கொண்டு நாம் ஒரு பங்கின் உள்ளார்ந்த (அ) உண்மையான விலையை அறியலாம்.
DCF முறையில் கணக்கிட தேவையானவை:
- எதிர்கால பணப்பாய்வுகளின் வளர்ச்சி மதிப்பீடு (Growth Estimating in FCF)
- முனைய வளர்ச்சி விகிதம் (TGT – Terminal Growth Rate)
- தள்ளுபடி விகிதம் (Discount Rate)
ஒரு நிறுவனத்தின் Free Cash Flow -FCF மதிப்பினை பெற அதன் பணப்பாய்வு அறிக்கையை எடுத்து கொள்ளுங்கள். அவற்றில் கிடைக்கும் Net Cash from /(used in) Operating Activities மதிப்பை, Purchase of Fixed Asset ல் கழித்து கிடைப்பது தான் Free Cash Flow. இதனை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு கணக்கிட்டு அதன் சராசரியை அறிந்து வையுங்கள். ஒரு நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியை நாம் கணிப்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை. இருப்பினும், நாம் அந்த நிறுவனத்தின் கடந்த கால வளர்ச்சியை கணக்கில் கொண்டு, எதிர்காலத்தில் இதனை போன்று அமையலாம் என DCF முறைக்கு எடுத்து கொண்டோம். எதிர்கால வளர்ச்சியாக சுமார் அடுத்த 10 வருட காலங்களை எடுத்து கொள்ளலாம். சராசரியாக முதல் 5 வருடங்களுக்கு வளர்ச்சி 10 % என எடுத்து கொண்டால், அடுத்த 5 வருட காலத்திற்கு அதனை விட குறைவாக எடுத்து கொள்வது ஒரு முதலீட்டாளரான நமக்கு பாதுகாப்பு தான். ஏனெனில் அடுத்த 5 வருடங்களில் நாம் என்ன செய்யலாம் என்பதை எளிதாக முடிவு செய்யலாம், ஆனால் 10 வருடத்தில் என்ன நடக்கும் என்பதை நம்மால் எளிதாக கூற முடியாது, இதே போல தான் ஒரு நிறுவனத்தின் தொழிலுக்கும்.
உதாரணத்திற்கு, நாம் எடுத்து கொள்ளும் முதல் 5 வருட வளர்ச்சி – 10 %, அடுத்த 5 வருட வளர்ச்சி – 8 %. நாம் இங்கே எடுத்து கொண்ட நிறுவனம் 10 வருட கால கணக்கீட்டிற்கு தான். முனைய வளர்ச்சி(Terminal Growth) என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அப்பால் எதிர்பார்க்கப்படும் பணப்பாய்வு வளர்ச்சியாகும். அதனால் Terminal Growth Rate எனப்படும் முனைய வளர்ச்சியை பொதுவாக, 0 – 2 சதவீதத்திற்கு இடையில் ஒரு மதிப்பை எடுக்கலாம். தள்ளுபடி விகிதம்(Discount Rate) என்பது எதிர்காலத்தில் கிடைக்கப்பெறும் தொகைக்கு (Future Cash Flows) இன்றைய மதிப்பில் தள்ளுபடி செய்வது. உதாரணத்திற்கு, நாம் முதலீடு செய்திருக்கும் நம் நண்பரின் தொழிலில் ஒரு ஆண்டுக்கு பிறகு கிடைக்கும் Cash Flow தொகை ரூ. 100 என எதிர்பார்த்தால், நமது தள்ளுபடி 5 % ஆக இருக்கும் பட்சத்தில் நாம் தொழிலுக்கு செலுத்த வேண்டிய தொகை – ரூ. 95.23 /- ( 100 / 1.05); தள்ளுபடி 15 % ஆக இருக்கும் போது, நாம் கொடுக்க வேண்டிய தொகை – ரூ. 86.95 /- (100/1.15). இதன் மூலம் நாம் அறிவது, எந்த அளவுக்கு நமது தள்ளுபடி விகிதம் அதிகரிக்கிறதோ, அந்தளவுக்கு நாம் வாங்க வேண்டிய பங்கின் விலைக்கும் விலை குறைவு கிடைக்கும். ஆக 100 ரூபாய் மதிப்புள்ள பங்கு ஒன்றுக்கு 15 % தள்ளுபடியில் ரூ. 86.95 /- கொடுத்தால் போதும். அதிக விலைக்கு சென்று வாங்க வேண்டிய அவசியமில்லை.
இதற்கான சூத்திரம்:
DCF = [CF1 / (1+r)1] + [CF2 / (1+r)2] + … + [CFn / (1+r)n]
CF = Cash Flow
r = discount rate (WACC – Weighted Average Cost of Capital)
(Source: https://www.investopedia.com/terms/d/dcf.asp )
பாதுகாப்பு விளிம்பு (Margin of Safety):
நீங்கள் ஓட்டப்பந்தய போட்டியில் கலந்து கொள்ள போகிறீர்கள். கலந்து கொள்ளும் முன் என்ன செய்யலாம் ?
பொதுவாக பந்தயத்திற்கான வழிமுறைகளை தெரிந்து கொள்வோம். பந்தயத்திற்கான தூரம் மற்றும் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை போன்றவற்றையும் அறிந்து வைப்போம். முக்கியமாக, பந்தயத்திற்கு தயாராகும் விதமாக நமக்கு நாமே பயிற்சி எடுத்து கொள்வோம் அல்லது ஒரு பயிற்சியாளரிடம் கற்று கொள்வோம். இது போன்ற விஷயத்தில் ஒன்றையும் கடைபிடிக்காமல் நம்மால் பந்தயத்தில் வெல்வது, இரண்டாம் அல்லது மூன்றாம் இடம் பெறுவது சாத்தியமில்லை எனலாம். இதனை தான் நாம் பாதுகாப்பு விளிம்பு என்கிறோம். ஒரு செயலை செய்யும் முன், அதற்கான விஷயங்களை தயார்படுத்தி கொண்டால் நமக்கு கிடைக்கும் விளைவு நேர்மறையாக அமையலாம், இல்லாவிட்டாலும் எதிர்மறை விளைவிலிருந்து நம்மை காப்பாற்றி கொள்ளலாம். உதாரணத்திற்கு, நாம் பேருந்தில் பயணம் செய்யும் முன், பயணக்கட்டணத்தை விட சற்று கூடுதல் பணத்தை கையில் வைத்து கொள்வோம். இது ஒரு பாதுகாப்பு அம்சம் கருதி தான் செய்கிறோம். மழை வரும் என கணித்தால், நம்முடன் மழைக்குடையை எடுத்து செல்வோம். நமது வாகனம் மற்றும் வீட்டு கதவுக்கு இரண்டு சாவிகள், நம்மிடம் உள்ள சான்றிதழ்களுக்கு ஒரு நகல் என நாம் ஒவ்வொரு விஷயத்திலும் பாதுகாப்பு கருதி, வரும் முன் காப்போம் செயலை தினமும் செய்து வருகிறோம்.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதனை போல தான் பங்குச்சந்தையிலும்; நாம் ஒரு பங்கின் உண்மையான விலையை கணித்தாயிற்று, ஆனால் சந்தையில் நாம் அதன் உண்மையான விலையில் பங்கை வாங்கிய பின், விலை குறைந்தால் என்ன செய்வது ?
அதனால் தான் பங்கிற்கும், வரும் முன் காப்போம் செயல்பாடு. உண்மையான விலையிலிருந்து சற்று குறைவான விலையில் பங்கு கிடைத்தால் நமக்கு நல்லது தானே. பங்கின் விலை அதன் உண்மை விலையிலிருந்து இறங்கினாலும், நம் முதலுக்கு ஆபத்து இல்லையே. உதாரணமாக நாம் கண்டறிந்த ஒரு பங்கின் உண்மையான விலை(Intrinsic Value) ரூ. 100 என வைத்துக்கொள்வோம். சந்தை ஏதோ ஒரு காரணத்தால் இறக்கமடைகிறது. நாம் வாங்கிய பங்கும் இறங்குகிறது (இறக்கத்தில் விலை – ரூ. 85/-). இப்போது நாம் பாதுகாப்பு விளிம்பு அடிப்படையில் (Margin of Safety) 10 % விலையில் வாங்கியிருந்தால் ( 10 % of Rs. 100 = 90 Rs.) நமக்கு பங்கு ஒன்றுக்கு 5 ரூபாய் தான் நஷ்டம். பாதுகாப்பு விளிம்பு 20 % என்றால் (20 % of Rs. 100 = 80 Rs), நமக்கு சந்தை இறங்கினாலும் 5 ரூபாய் லாபம் தான். ஆக, Margin of Safety மூலம் நாம் நமது முதலீட்டை பாதுகாத்து கொள்ளலாம். சரி, எவ்வளவு சதவீதம் Margin of Safety ஆக வைத்து கொள்ளலாம் என கேட்டால், அது ஒரு முதலீட்டாளரின் ரிஸ்க் தன்மையை பொறுத்து தான் அமையும். உங்கள் வயது, வருமானம் மற்றும் நஷ்டத்தை தாங்கிக்கொள்ளக்கூடிய மனக்கட்டுப்பாடு போன்றவை தான் இதனை தீர்மானிக்கும். இருப்பினும் ஒரு ஆரம்ப நிலை முதலீட்டாளராக 20-30 % Margin of Safety எடுத்து கொள்வது நம் பணத்திற்கு பாதுகாப்பானது.
இப்போது நமக்கு புரிந்திருக்கும், ஒரு பங்குக்கு உள்ளார்ந்த மதிப்பும், பாதுகாப்பு விளிம்பும் எவ்வளவு முக்கியமென்று. அதனால் ஒரு நிறுவனத்தின் பங்கை சந்தையில் வாங்கும் முன் பேரம் பேச தயாராகுங்கள்.