Tag Archives: kirloskar group

2025-26ம் நிதியாண்டில் கிர்லோஸ்கர் பெர்ரஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ.376 கோடி நிகர லாபம்

2025-26ம் நிதியாண்டில் கிர்லோஸ்கர் பெர்ரஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ.376 கோடி நிகர லாபம்

Kirloskar Ferrous Industries reported a Net Profit of Rs.376 Crore – FY2025-26 Results

மகாராஷ்டிர மாநிலம் புனேவை தலைமையிடமாக கொண்டு இயங்குவது கிர்லோஸ்கர் குழுமம். கிர்லோஸ்கர் நிறுவனம் துவங்கப்பட்டு 136 வருடங்களாகிறது. இக்குழுமத்தின் துணை நிறுவனம் தான் கிர்லோஸ்கர் பெர்ரஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட். வாகனத்துறை, பம்புகள் மற்றும் பைப்புகள், மற்ற உலோகங்களின் உற்பத்திக்கு தேவையான இரும்பு வார்ப்புகளை(Pig Iron and Ferrous Castings) இந்நிறுவனம் தயாரித்து  விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. டிராக்டர் மற்றும் டீசல் இன்ஜின் தொழில்களுக்கு தேவைப்படும் சிலிண்டர் பிளாக்குகள், சிலிண்டர் ஹெட்கள் மற்றும் டிரான்ஸ்மிஷன் பாகங்களையும் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. 

சொல்லப்பட்ட பிரிவில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் கிர்லோஸ்கர் பெர்ரஸ் இண்டஸ்ட்ரீஸ், அதன் சந்தையில் 20 சதவீத பங்களிப்பை(Market Share) கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2025-26ம் நிதியாண்டுக்கான நிதி அறிக்கையை நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. 2026 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 6,784 கோடி ரூபாயாகவும், செலவினம் 5,948 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

2025-26ம் நிதியாண்டில் இயக்க லாபம் ரூ.836 கோடியாகவும், இயக்க லாப விகிதம்(OPM) 12 சதவீதமாகவும் இருந்துள்ளது. வரிக்கு முந்தைய லாபம் 514 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ.376 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது.நிறுவனத்தின் இயக்க லாப விகிதம் கடந்த ஐந்து வருட காலத்தில் ஏற்ற-இறக்கமாக இருந்திருந்தாலும், சராசரியாக ஆண்டுக்கு 12 சதவீதத்திற்கும் மேலாக இருந்துள்ளது.

வருவாய் பிரிவை பொறுத்தவரை, Pig Iron என சொல்லப்படும் இரும்பு வார்ப்பு பிரிவில் ரூ.1,951 கோடி ரூபாயையும், Castings பிரிவு ரூ.1,758 கோடி ரூபாய், ஸ்டீல் பிரிவு ரூ.604 கோடி ரூபாய், டியூப் பிரிவு ரூ.2,130 கோடி மற்றும் இதர பிரிவுகள் ரூ .339 கோடி ரூபாயையும் வருவாயாக ஈட்டியுள்ளது.

 

மார்ச் 2026ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 3,682 கோடி ரூபாயாகவும், கடன் நிலையை காணுகையில் குறுகிய கால கடன் தொகை ரூ.798 கோடி மற்றும் நீண்டகால கடன் தொகை ரூ.237 கோடியாகவும் உள்ளது. நிறுவனத்திற்கு ரொக்கமாக(Cash Equivalents) இருக்கும் தொகை ரூ.117 கோடி. 2025-26ம் நிதியாண்டில் பணவரத்தும் சரியாக வந்து கொண்டுள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனம் முதலீடு செய்த அசையா சொத்துக்களின்(Purchase of Fixed Assets) மதிப்பு ரூ.456 கோடி.

கிர்லோஸ்கர் பெர்ரஸ் நிறுவனத்தின் பங்கு விலை தற்போது ரூ.465 என்ற விலையிலும்(மே 8, 2026), அதன் புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 228 ரூபாய் என்ற விலையிலும் உள்ளது. நிறுவனத்தின் கூட்டு விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 27 சதவீதமாகவும், இதுவே பத்து வருடங்களில் 20 சதவீதமாகவும் உள்ளது. கூட்டு லாப வளர்ச்சியை காணும் போது, ஐந்து வருடங்களில் 5 சதவீதமாகவும், பத்து வருட காலத்தில் 21 சதவீதம் என்ற அளவிலும் இருந்துள்ளது.

பங்கு மூலதனம் மீதான வருவாய்(Return on Equity) வளர்ச்சி, கடந்த ஐந்து வருட காலத்தில் சராசரியாக 14.2 சதவீதமாக இருந்துள்ளது. நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) ஐந்து மடங்குகளிலும், கடன்-பங்கு விகிதம்(Debt to Equity Ratio) 0.28 மடங்கு என்ற அளவிலும் உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 51 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

நிறுவனத்தின் தற்போதைய பி.இ. விகிதம் 20 மடங்களுக்கு கீழாக உள்ளது. துறை வாரியான பி.இ. விகிதம் 25 மடங்காக இருப்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் பங்கு விலை தற்போது ரூ.465 என்ற விலையில் வர்த்தகமாகி கொண்டிருந்தாலும், பணப்பாய்வு மதிப்பீட்டின்(Discounted Cash Flow Valuation) படி, பங்கு ஒன்றுக்கு ரூ.225-282 என்ற விலையை பெறுகிறது(MoS சேர்த்து).

 கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com