Tag Archives: income tax 2023

வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு – ஜூலை 31, 2023

வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு – ஜூலை 31, 2023

Income Tax Returns – Filing Deadline – July 31, 2023

கடந்த 2022-23ம் நிதியாண்டுக்கான வருமானத்திற்கு நடப்பு மதிப்பீட்டு ஆண்டு 2023-24 காலத்தில் வருமான வரி தாக்கல் செய்வது அவசியம். பொதுவாக ஏப்ரல் 1ம் தேதி முதல் துவங்கப்படும் வரி தாக்கல், இம்முறை தாமதமாக துவங்கியது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டில் வருமான வரி தாக்கலுக்கான கடைசி தேதி இம்மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. 

வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு இம்முறை பெரும்பாலும் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவே. 2020 மற்றும் 2021ம் வருடங்களில் கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட சிரமத்தை சமாளிக்க வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு இது ஜூலை 31ம் தேதி வரை மட்டுமே இருந்தது.

வருமான வரி தாக்கலை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவு செய்யாத நிலையில், அபராத கட்டணம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். 60 வயதுக்குட்பட்ட தனிநபர் ஒருவர், ஒரு நிதியாண்டில் அவரது மொத்த வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், வருமான வரி தாக்கல் செய்வது அவசியம். அவருக்கு வருமான வரி பிடித்தம் செய்யப்படவில்லை என்றாலும், வரி தாக்கல் செய்வது கட்டாயமாகும்.

நடப்பு ஜூலை 26ம் தேதி வரை, நாட்டில் சுமார் 4.75 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். அதே வேளையில் வருமான வரி தளத்தில்(IT Portal) தங்களது பான் எண் கணக்கை பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை சுமார் 11.44 கோடி (தனி நபர்). சொல்லப்பட்ட 4.75 கோடி வருமான வரி தாக்கலில் இதுவரை 4.24 கோடி பேர் மட்டுமே மின்னணு சரிபார்ப்பை(E-Verification) முடித்துள்ளனர்.

பொதுவாக வருமான வரி தாக்கல் செய்திருந்தாலும், மின்னணு சரிபார்ப்பை நிறைவு செய்தால் மட்டுமே அது முழுமையான வரி தாக்கலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தனிநபர் வருமான வரி தாக்கலை செய்துள்ளவர்களில் பெரும்பாலும் ஐ.டி.ஆர் – 1 படிவத்தை பயன்படுத்தியுள்ளவர்களே அதிகம். 

2022-23 மதிப்பீட்டு ஆண்டில்(Assessment year) ஐ.டி.ஆர் – 1 படிவத்தை பயன்படுத்தி வரி தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 37 லட்சமாக இருந்த நிலையில் நடப்பு 2023-24ம் மதிப்பீட்டு ஆண்டில் இது 72.95 லட்சமாக(ஜூன் மாத முடிவில்) இருக்கிறது. அதாவது கடந்த ஆண்டை காட்டிலும் இம்முறை சுமார் 95.50 சதவீதம் அதிகமான வரி தாக்கல் நடைபெற்றுள்ளது. 

மாநிலங்கள் வாரியாக காணும் போது, மகாராஷ்டிராவில் சுமார் 18.52 லட்சம் வரி தாக்கலும், குஜராத்தில் 14.02 லட்சமும் மற்றும் உத்திரப்பிரதேசத்தில் 11.92 லட்சமும் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் ஜூன் மாத முடிவின் படி, 8.19 லட்சம் வரி தாக்கல் பதிவாகியுள்ளன. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com