Tag Archives: health insurance

இந்தியாவில் காப்பீட்டுத் துறை – துறை சார்ந்த அலசல்

இந்தியாவில் காப்பீட்டுத் துறை – துறை சார்ந்த அலசல்

Insurance Industry in India – Sectoral Analysis 

காப்பீடு என்பது கடந்த நூறு வருடங்களோ அல்லது 200 வருடங்களுக்கு முன்னரோ துவக்கப்பட்ட ஒரு சிந்தனை என நாம் நினைக்கலாம். உண்மையில் காப்பீட்டின்(Insurance) வரலாறு என்பது சுமார் 6000 வருடங்களுக்கு முன்னர் தோன்றியவை. தொழிற்புரட்சியின் போது தான் காப்பீட்டின் தேவையையும் உணர வேண்டியிருந்தது. பொதுவாக ‘காப்பீடு’ என்பது உங்களுக்கும்(தனி நபர், சொத்து, நிறுவனம் அல்லது அரசு) ஒரு காப்பீட்டை அளிக்கக்கூடிய நிறுவனத்திற்குமான ஒப்பந்தம் தான். ஏதேனும் நிதி சார்ந்த இழப்பு உங்களுக்கு ஏற்படும் போது, அதற்கான இழப்பீட்டை கோருவதற்கு தான் இந்த ஒப்பந்தம் பயன்படுகிறது. அதாவது உங்களுக்கான ரிஸ்க்கை நீங்கள் மற்றொருவரிடம்(காப்பீட்டு நிறுவனம்) மாற்றியுள்ளீர்கள்(Transferring the Risk). 

இந்தியாவில் காப்பீட்டின் தோற்றம் 1818ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டின் முதல் காப்பீட்டு நிறுவனமான ஓரியண்டல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் 1818ம் ஆண்டு ஐரோப்பியர்களால் துவக்கப்பட்டது. இருப்பினும், இந்தியாவின்(இந்தியர்களால்) முதல் காப்பீட்டு நிறுவனமான பம்பாய் மியூச்சுவல் லைப் இன்சூரன்ஸ் சொசைட்டி 1870ம் ஆண்டில் தான் தோற்றுவிக்கப்பட்டது. நாட்டின் இன்றைய மிகப்பெரிய காப்பீடு நிறுவனமாக வலம் வரும் எல்.ஐ.சி. இந்தியா(LIC India) கடந்த 1956ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு மட்டும் சுமார் 52 லட்சம் கோடி ரூபாய்(மார்ச் 2024 தரவு). 

245க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அந்நிய நாட்டின் காப்பீட்டு நிறுவனங்களும், வருங்கால வைப்பு நிதி சங்கங்களும் சேர்ந்தது தான் இன்றைய எல்.ஐ.சி. இந்தியா நிறுவனம்(தேசியமயமாக்கப்பட்டது).  

2023ம் ஆண்டின் முடிவில், உலகளவில் காப்பீட்டுத்(இன்சூரன்ஸ்) துறையின் மதிப்பு ஒன்பது டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். இவற்றில் அமெரிக்காவின் பங்களிப்பு மட்டும் சுமார் 40 சதவீதம், அதாவது 3.60 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும். அதற்கடுத்தாற் போல சீனாவில் சுமார் 723 பில்லியன் டாலர்களாக இருந்துள்ளது. மூன்றாம் மற்றும் நான்காம் இடம் முறையே ஐக்கிய ராச்சியம்(UK) மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. ஐரோப்பிய யூனியன் என காணுகையில் அந்நாடுகள் ஒருங்கிணைந்து 16 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.

2032ம் ஆண்டு முடிவில் இது 18.6 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 2024ம் வருடம் முதல் 2032ம் வருடம் வரை, ஆண்டுக்கு சராசரியாக 13 சதவீத கூட்டு வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உலகின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனங்கள் சில – ஜெர்மனியின் அல்லையன்ஸ்(1,250 பில்லியன் டாலர்கள்), அமெரிக்காவின் பெர்க்சயர் ஹாத்வே(அட, திருவாளர் வாரன் பப்பெட் அவர்களின் நிறுவனம் தான் – 960 பில்லியன் டாலர்கள்) மற்றும் ப்ரூடென்ட்சியல்(938 பில்லியன் டாலர்கள்), சீனாவின் பிங் ஆன்(937 பில்லியன் டாலர்கள்) மற்றும் சீனா லைப் இன்சூரன்ஸ்(900 பில்லியன் டாலர்கள்), பிரான்ஸின் ஆக்சா, அமெரிக்காவின் மெட்லைப், ஐக்கிய ராச்சியத்தின் லீகல் & ஜெனரல், ஜப்பானின் நிப்பான் லைப் மற்றும் அமெரிக்காவின் யுனைடெட் ஹெல்த் ஆகிய நிறுவனங்களாகும்.

காப்பீட்டுத் துறை பொதுவாக மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுள் காப்பீடு, ஆயுள் அல்லாத காப்பீடு(Non-Life) மற்றும் மருத்துவக் காப்பீடு(Health). ஆயுள் அல்லாத காப்பீடும், மருத்துவக் காப்பீடும் ஜெனரல் இன்சூரன்ஸ் எனவும், ஆயுள் காப்பீடு லைப் இன்சூரன்ஸ் எனவும் அழைக்கப்படுகிறது. வாகனம், மருத்துவம், பயணம், வீடு மற்றும் சொத்துக்கள், வணிகம், விபத்து, பயிர் மற்றும் கால்நடை, வான்வழி மற்றும் கடல்வழி, திருட்டு மற்றும் தீப்பிடித்தல் ஆகியவற்றுக்கு எடுக்கப்படும் காப்பீடுகள் அனைத்தும் ஜெனரல் இன்சூரன்ஸ் பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தனிநபர் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு, முதலீடு ஆகியவற்றை உள்ளடக்கிய காப்பீடுகள் லைப் இன்சூரன்ஸ் பிரிவின் கீழ் உள்ளது. இது போக Reinsurance என சொல்லப்படும் காப்பீடு நிறுவனங்களிடையே தங்களது ரிஸ்க்கை பரவலாக்குவதற்கான(Transferring the Risk) காப்பீடும் உள்ளது. ஆனால் இவை பெரும்பாலும் தனி நபருக்கானதல்ல.

2023ம் ஆண்டில் சொல்லப்பட்ட 9.0 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், ஆயுள் அல்லாத காப்பீட்டின் மதிப்பு மட்டும் சுமார் 4.41 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும். உலகளவில் காப்பீட்டு சந்தையின் மதிப்பு, ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தில் 7 சதவீத பங்களிப்பை மட்டுமே கொண்டுள்ளது.  இருப்பினும், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் ஆயுள் காப்பீட்டின் தேவை மற்றும் அதன் மதிப்பு கடந்த சில காலாண்டுகளாக உயர்ந்து வருகிறது. 

இந்தியாவில் காப்பீட்டு சந்தை எப்படி ?

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் வெறும் 2.7 சதவீதமாக இருந்த(2000ம் ஆண்டு) இந்திய காப்பீட்டுச் சந்தை தற்போது 4 சதவீதமாக(2022) உயர்ந்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த காப்பீட்டு சந்தையின் மதிப்பு சுமார் 131 பில்லியன் அமெரிக்க டாலர்கள்(2022). 2031ம் ஆண்டின் முடிவில் இது 318 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலக காப்பீட்டுச் சந்தையை ஒப்பிடுகையில், இந்தியாவின் பங்களிப்பு குறைவே. இருப்பினும் ஒட்டுமொத்த பிரீமியம் மதிப்பு அடிப்படையில் பத்தாவது இடத்தில் இந்தியா உள்ளது. 

இந்திய காப்பீடு சந்தையில் ஆயுள் காப்பீடு மட்டும் 70 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சந்தையில் மொத்தமாக 24 ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் எல்.ஐ.சி. இந்தியா(அரசு பொதுத்துறை) நிறுவனம் மட்டும் 60 சதவீத சந்தை மதிப்பை பெற்றுள்ளது. பொதுவாக ஆயுள் காப்பீடு சந்தையில் பிரீமியம் இரு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது – புதிய வணிக பிரீமியம்(New Business Premium) மற்றும் புதுப்பிக்கப்படும் பிரீமியம்(Renewal Premium). புதிய வணிக பிரீமியம் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், புதுப்பிக்கப்படும் பிரீமியம் ஒவ்வொரு ஆண்டும் ஏற்ற-இறக்கத்துடன் காணப்படுகிறது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது பெரும்பாலும் காப்பீட்டின் தேவையை உணராமல், ஆண்டுதோறும் தொடர்ச்சியாக பிரீமியத்தை கட்டாமல் இருப்பது தான்.

இந்தியாவில் ஆயுள் காப்பீட்டில் உள்ள முக்கிய நிறுவனங்கள்:

  • எல்.ஐ.சி. இந்தியா 
  • எச்.டி.எப்.சி. லைப் 
  • எஸ்.பி.ஐ. லைப் 
  • ஐ.சி.ஐ.சி.ஐ ப்ரூடென்ட்சியல் லைப் 
  • ஆக்ஸிஸ் மேக்ஸ் லைப் 

2022-23ம் ஆண்டு முடிவில், இந்தியாவில் ஆயுள் காப்பீட்டு பிரீமியம் 7.83 லட்சம் கோடி ரூபாய். சொல்லப்பட்ட வருவாய், இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13 சதவீத வளர்ச்சியாகும். எல்.ஐ.சி. இந்தியா நிறுவனத்தின் பங்களிப்பு 59 சதவீதமாகவும், எச்.டி.எப்.சி. லைப் 8%, எஸ்.பி.ஐ. லைப் 10 சதவீதம் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. ப்ரூடென்ட்சியல் லைப் நிறுவனத்தின் பங்களிப்பு 5 சதவீதமாகவும் இருந்துள்ளது.

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் வெறுமனே நிதிப் பாதுகாப்பு, சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை வழங்குவதோடு ஓய்வூதியம் சார்ந்த திட்டங்களையும்(Pension System – Annuity Plans) வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் அல்லாத காப்பீட்டு சந்தை:

உலகளவில் இந்திய ஆயுள் அல்லாத காப்பீட்டு சந்தை 14வது இடத்திலும், ஆசியாவில் நான்காவது மிகப்பெரிய சந்தையாகவும்(ஜெனரல் இன்சூரன்ஸ்) உள்ளது. இச்சந்தை 2022-23ம் ஆண்டு முடிவில் சுமார் 2.57 லட்சம் கோடி ரூபாயை பிரீமியம் வருவாயாக ஈட்டியுள்ளது. மருத்துவ காப்பீட்டின் மூலம் 38 சதவீதமும், வாகனங்கள் மூலம் 32 சதவீதமும், தீப்பிடித்தல்(Fire Insurance) 9 சதவீதம், தனிநபர் விபத்துக் காப்பீடு 3 சதவீதம் மற்றும் கடல் சார்ந்த காப்பீடு 2 சதவீத பங்களிப்பையும் ஒட்டுமொத்த வருவாயில் அளித்துள்ளது.

சில முக்கிய ஆயுள் அல்லாத காப்பீட்டு நிறுவனங்கள்:

  • நியூ இந்தியா (13%)
  • ஐ.சி.ஐ.சி.ஐ லோம்பார்ட் (9%)
  • பஜாஜ் அல்லையன்ஸ் (7%)
  • யுனைடெட் இந்தியா (7%)
  • ஓரியண்டல் இன்சூரன்ஸ் (6%)
  • எச்.டி.எப்.சி. எர்கோ (6%) 

சில முக்கிய மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள்:

  • ஸ்டார் ஹெல்த் & அல்லைடு இன்சூரன்ஸ் 
  • கேர் ஹெல்த் 
  • எச்.டி.எப்.சி எர்கோ 
  • நிவா புபா 
  • ஆதித்யா பிர்லா 
  • மணிப்பால் சிக்னா 
  • ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்ட் 
  • டாடா ஏ.ஐ.ஜி 

ஜெனரல் இன்சூரன்ஸை(ஆயுள் அல்லாத மற்றும் மருத்துவ) பொறுத்தவரை 62 சதவீத பங்களிப்பு தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து தான் வருகிறது. இச்சந்தையில் தனித்த மருத்துவக் காப்பீட்டை(Standalone Health Insurance) மட்டும் அளிக்கும் நிறுவனங்களின் பங்களிப்பு 10 சதவீதமாக உள்ளது. ஸ்டார் ஹெல்த், கேர் ஹெல்த், ஆதித்யா பிர்லா ஹெல்த், நிவா புபா போன்ற நிறுவனங்கள் தனித்த மருத்துவக் காப்பீட்டை வழங்கும் நிறுவனங்களாகும்.

காப்பீட்டில் அரசின் பங்களிப்பு மற்றும் அன்னிய முதலீடுகள்:

1991-92ம் ஆண்டில் ஏற்பட்ட இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கை, நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம். அதன் காரணமாக நாட்டில் தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கையும், அன்னிய முதலீடுகளும் கவரப்படும் நாடாக இந்தியா மாறியுள்ளது. இதற்கு காப்பீட்டுத் துறையும் விதிவிலக்கல்ல. 

கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய காப்பீட்டு துறை ஈர்த்த அன்னிய முதலீடுகளின் மதிப்பு மட்டும் 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய ரூபாய் மதிப்பில் 54,000 கோடி). இது போல இந்திய காப்பீட்டு நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணையும் அந்நிய நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளது. உதாரணமாக டாடா-ஏ.ஐ.ஜி(AIG), பார்தி-ஆக்சா, பஜாஜ்-அல்லயன்ஸ்(சமீபத்தில் அல்லயன்ஸ் பங்குகளை பஜாஜ் நிறுவனம் வாங்கப்போவதாக தகவல்).

கடந்த 2015ம் ஆண்டுக்கு முன்பு வரை, காப்பீட்டு துறையில் அன்னிய முதலீடுகளின் வரம்பு 26 சதவீதத்திற்கு குறைவாக இருக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து இன்று 74 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை(பட்ஜெட் 2025) என்ற வரைமுறைக்கு வந்துள்ளது. இவ்வாறாக அரசின் கொள்கைகள் இருக்கும் நிலையில் அரசின் காப்பீட்டு பங்களிப்பும் மாற்றம் பெற்று வருகிறது. 

மருத்துவக் காப்பீட்டை பொறுத்தவரை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் மருத்துவக் காப்பீடுகள் பெரும்பாலும் நடைமுறையில் உள்ளன. ஆயுள் மற்றும் விபத்து சார்ந்த காப்பீடுகள் ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்கப்பெறுகிறது. நடப்பு பட்ஜெட்டில் பயிர் காப்பீட்டுக்காக இந்திய அரசு சுமார் 1.75 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்குவதாக கூறியுள்ளது. இது கடந்த ஆறு வருடங்களில் காணப்படாத அதிகபட்ச அளவாகும்.

இது போல இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.(IRDAI) 2047ம் ஆண்டு முடிவில் நாட்டில் உள்ள ‘அனைவருக்கும் காப்பீடு’ என்ற வாசகத்தை கொண்டு இலக்கினை நிர்ணயித்துள்ளது. மற்றொரு புறம் தகவல் தொழில்நுட்பமும்(Blockchain & AI Technology) காப்பீட்டு துறையில் புகுத்தப்பட்டு அதனை எளிமையாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. 

ஸ்வாட் ஆய்வு(SWOT Analysis) காப்பீட்டு துறைக்கு எப்படி ?
  • பலம்: நாட்டின் மக்கட் தொகை மற்றும் தனிக்குடும்பம் அதிகரித்து வருதல்  மற்றும் அதன் காரணமாக காப்பீட்டின் தேவை.  அரசின் காப்பீட்டுக் கொள்கைகள், காப்பீட்டில் தகவல் தொழிநுட்பத்தின் தேவை அதிகரிப்பு மற்றும் அந்நிய முதலீடுகளின் வரம்பு உயர்வு.
  • பலவீனம்: நாட்டின் மக்கட் தொகை மற்றும் பொருளாதாரத்தில் குறைவான பங்களிப்பு (5 சதவீதத்திற்கும் கீழ்), கிராமப்புறங்களில் காப்பீட்டின் தேவை பற்றிய விழிப்புணர்வு இல்லாமை, காப்பீட்டில் ஏற்படும் மோசடிகள் மற்றும் தவறான காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுக்கும் நிலை, வாடிக்கையாளர்கள் எளிமையாக புரிந்து கொள்ள முடியாத எண்ணற்ற பாலிசி திட்டங்கள்.
  • வாய்ப்புகள்: அதிகரித்து வரும் மருத்துவ செலவுகளால் காப்பீடு எடுக்க வேண்டிய தேவை, கிராமப்புறங்களில் காப்பீட்டுக்கான வாய்ப்புகள், ஏ.ஐ. மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்ப வரவால் காப்பீடு பெறுதல் மற்றும் கிளைம் செய்வதில் உள்ள எளிமை.
  • அச்சுறுத்தல்கள்: ஒழுங்குமுறை ஆணையத்தின் மாற்றங்கள், இணைய வழி தாக்குதல் மற்றும் வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாப்பதில் உள்ள சிக்கல்கள், இயற்கை பேரழிவு, காலநிலை மாற்றங்கள் மற்றும் பொருளாதார மந்தநிலை ஏற்படும் போது மக்களிடம் போதுமான பணப்புழக்கம் இல்லாதது, அதிகரித்து வரும் காப்பீடு நிறுவனங்கள் மற்றும் அதன் சார்ந்த விலையில் உள்ள போட்டிகள் 

 

பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் சில காப்பீட்டு நிறுவனப் பங்குகள்:

இந்தியப் பங்குச்சந்தையில் இதுவரை 11 காப்பீடு சார்ந்த நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றில் எல்.ஐ.சி. இந்தியாவின் சந்தை மதிப்பு மட்டும் ரூ.5 லட்சம் கோடிக்கும் மேல். தற்போது வரை, நாட்டின் மிகப்பெரிய ஐ.பி.ஓ.(IPO – Public Offering) வெளியீடும் இது தான்.

  • எல்.ஐ.சி. இந்தியா 
  • எஸ்.பி.ஐ. லைப் 
  • எச்.டி.எப்.சி. லைப் 
  • ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்ட் 
  • ஐ.சி.ஐ.சி.ஐ. புரு லைப் 
  • ஜெனரல் இன்சூரன்ஸ் 
  • கோ டிஜிட் 
  • நியூ இந்தியா அஸுரன்ஸ் 
  • ஸ்டார் ஹெல்த் 
  • நிவா புபா 
  • மெடி அசிஸ்ட் 

தனிநபர் மற்றும் குடும்பத்தின் வருமான விகிதம் அதிகரித்து வரும் நிலையில், வருங்காலத்தில் நாட்டின் மற்றும் உலகின் பொருளாதார சூழல் அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்படலாம். வருமானம் ஈட்டும் தனிநபர் ஒருவர் தனது குடும்பத்தின் நிதி நலனை பாதுகாக்க டேர்ம் இன்சூரன்ஸ், மருத்துவ மற்றும் விபத்துக் காப்பீடு, ஓய்வூதியம் போன்ற திட்டங்களை தேர்ந்தெடுக்கும் நிலை உள்ளது. இது காப்பீட்டுத் துறைக்குமான வளர்ச்சியாகவும் உள்ளது. 

வெறுமனே வரிச் சலுகைக்காகவும், சேமிப்புக்காகவும் காப்பீட்டு திட்டங்களை பயன்படுத்தாமல், சரியான காப்பீட்டை தேர்ந்தெடுப்பதும் தனிநபர் ஒருவரின் நிதி சார்ந்த கடமையாகும் ! 

 

(தகவல்கள் மற்றும் தரவுகள்): Allied Market Research, IBEF, IRDAI & ChatGpt & Others

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மருத்துவ காப்பீடு, அதுவே உங்கள் உடல்நலத்துக்கான இழப்பீடு

மருத்துவ காப்பீடு, அதுவே உங்கள் உடல்நலத்துக்கான இழப்பீடு 

Health Insurance is one of your Wealth protection Tool

தகவலுக்கும், தானியங்கி சேவைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் இன்றைய நவீன காலத்தில் நிதி சார்ந்த தேவைகளும் அதிகரித்து கொண்டிருக்கின்றன. முன்னொரு காலத்தில் குடும்பத்தில் உள்ள ஏதோ ஒரு வாரிசு தன்னை பாதுகாக்கும் என்ற பெற்றோர்களின் நிலை, இன்று மாறி நிதி தேவைகளை சற்று கவனிக்க வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது.

தனிநபர் ஒருவரின் வருவாயை மட்டுமே கொண்டிருக்கும் குடும்பத்தினருக்கு பெரும்பாலும் தேவைப்படுவது நிதி சார்ந்த பாதுகாப்பு தான். வருவாய் ஈட்டும் ஒருவர் எதிர்பாராமல் இறக்க நேரிட்டால், அவரது குடும்ப உறுப்பினர்களை நிதி சார்ந்து பாதுகாக்க டேர்ம் இன்சூரன்ஸ் என்ற காப்பீட்டு கவசம் இன்று அத்தியாவசியமான ஒன்று.

மருத்துவ சேவை மேம்பட்டிருந்தாலும், பெரும்பாலான நோய்களுக்கும், மரணத்திற்கும் காரணமாக அமைவது நமது விழிப்புணர்வு இல்லாமை தான். உடல் நலனை பேணுவது மற்றும் ஆரோக்கியமான மனநிலையை கொண்டிருப்பது காலத்தின் கட்டாயம். இருப்பினும் எதிர்பாராமல் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் புதிய நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. எனவே இது போன்ற சமயங்களிலும் நாம் நிதி சார்ந்து சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.

பணம் படைத்தவர்களாக இருந்தாலும், நோய்வாய்ப்பட்டு இருக்கும் நிலையில் கரைவது நம் உடல்நலம் மட்டுமல்ல, நாம் சேர்த்து வைத்த பணமும், மனமும் தான். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது பார்த்து கொள்ளலாம், எனக்கு இப்போது ஏன் வேண்டும் மருத்துவ காப்பீடு என நீங்கள் சொன்னால் !

  •  மருத்துவச்செலவு ரூ.10 லட்சமாக இருக்கும் போது, சேமித்து வைத்திருக்கும் பணத்திலிருந்து அல்லது கடன் வாங்கியாவது 10 லட்சத்தை செலவு செய்வது புத்திசாலித்தனமா ?
  • செல்வம் அதிகமிருந்தாலும், ஆண்டுக்கு 20,000 ரூபாயை மருத்துவ காப்பீட்டுக்காக கட்டி விட்டு, 30 லட்ச ரூபாயை காப்பீட்டு கவரேஜாக பெறுவது புத்திசாலித்தனமா ? (ஆண்டுக்கு 20,000 ரூபாய் வீதம் அடுத்த 20 வருடங்கள் காப்பீட்டை வாங்கினாலும், மொத்த காப்பீட்டு செலவு ரூ.4 லட்சம் தான். Section 80D வருமான வரிச்சலுகை வேறு. இருபது வருடங்களில் நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏதும் மருத்துவ செலவு ஏற்படாது என்பது விதியா என்ன ?)
  • ஆண்டுக்கு 10 லட்ச ரூபாயை வருமானமாக சம்பாதிக்கிறீர்கள் என வைத்து கொள்வோம். சேமிப்பு பெரிதாக எதுவுமில்லை, கடன் மட்டுமே அதிகம். உங்களது குடும்பத்தின் ஒரே வருவாயை கொண்டிருக்கும் நீங்கள் உடல்நலன் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, சுமார் 20 லட்ச ரூபாய் செலவாகும் என சொன்னால், ‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை’ என உங்கள் குடும்பத்தினர் சொன்னாலும்… உண்மையான நிலை என்ன ?  

‘மருத்துவ காப்பீடு உண்மையில் உங்கள் உடல்நலனை முழுமையாக பாதுகாக்கிறதோ, இல்லையோ… ஆனால் நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தை நூறு சதவீதம் பாதுகாக்கும் ‘ என நண்பர் தேவ் ஆசிஷ்(Dev Asish, Stable Investor) கூறுவார்.

திருமணமானவர்கள் உங்கள் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு ஏதாவது உதவி செய்ய விரும்பினால், அவர்களுக்கு மருத்துவ காப்பீட்டை பரிந்துரையுங்கள் அல்லது வாங்கி கொடுங்கள். திருமணமாகாத (80s, 90s Kids) கிட்ஸ்களுக்கும் மருத்துவ காப்பீடு கட்டாயம். மருத்துவ தேவை உள்ள அனைவருக்கும் இது பொருந்தும்.

மருத்துவ காப்பீட்டுக்கான தேவை என்ன ?

  • அதிகரித்து கொண்டிருக்கும் பணவீக்கம் – விலைவாசி உயர்வு(Inflation)
  • மருத்துவ தேவைக்கான அவசியமான காலமிது, நீங்களாகவே சுய மருத்துவம் செய்து விட முடியாது (வருமுன் காப்பது மட்டுமே நமது கடமை) – எதிர்பாராத விபத்துக்களை தவிர்க்க இயலாது
  • மருத்துவச்செலவுகளுக்கான தொகை அதிகரித்து வருதல் – செலவு தொகையை நம்மால் கணிக்க இயலாது
  • புதிய நோய்களை கண்டறிதல்(Lifestyle Diseases)
  • வரும் முன் காக்கும் நடவடிக்கை – மருத்துவ காப்பீடு
  • ஈட்டிய அல்லது ஈட்டவிருக்கும் செல்வத்தை பாதுகாத்தல்
  • குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்டிருப்போருக்கு ஆபத்துக்கால நண்பன்
  • செல்வம் படைத்தோருக்கு தேவையில்லாத செலவுகளை தவிர்க்க உதவும்

மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு – இரண்டில் எது அவசியம் ?

மருத்துவ காப்பீடும்(Health Insurance), ஆயுள் காப்பீடும்(Term Plan) உங்கள் இரு கண்கள் போல. ஒரு கண் மட்டும் போதுமா, இரண்டும் வேண்டுமா என்பதனை நீங்களே முடிவு செய்யுங்கள்.

தனிநபர் ஒருவரின் வருவாயை மட்டும் கொண்டிருக்காமல், குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்களது தொழில் மூலம் வருவாய் ஈட்டி, குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும், தங்களது கணக்கில் 100 கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பணமிருந்தால் நீங்கள் டேர்ம் மற்றும் மருத்துவ காப்பீடு அவசியம் எடுக்க வேண்டுமா என்பதனை கொஞ்சம் யோசிக்கலாம் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீடு வழங்க மறுக்க கூடாது

எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீடு வழங்க மறுக்க கூடாது

Insurance Companies do not refuse to provide insurance for HIV and AIDS Patients

நமது நாட்டில் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 21 லட்சம் (கடந்த ஆண்டு வரை) ஆகும். உலகளவில் தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரியா நாடுகளுக்கு அடுத்தாற் போல் எச்.ஐ.வி. நோய் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.

 

எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் காப்பீடு வழங்குவது குறித்து ஏற்கனவே உச்ச நீதிமன்றம், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்தை கேட்டிருந்தது. அதன் சாரமாக, சமீபத்தில் இர்டா (Insurance Regulatory and Development Authority of India -IRDAI) ஆணையத்தின் தலைவர் பேசும் போது, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இது போன்ற நோயாளிகளுக்கு சிறப்பான திட்டத்தையோ அல்லது ஒருங்கிணைந்த சுகாதார திட்டத்தையோ அறிமுகப்படுத்த விரும்புகிறோம் என்றார்.

 

காப்பீடு நிறுவனங்களும் இந்த வரைமுறையை பின்பற்ற வேண்டுமெனவும் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது. எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீடு வழங்குவதில் எந்த பாரபட்சமும் கூடாது எனவும், காப்பீட்டை மறுக்கவும் கூடாது என காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதே நேரத்தில் காப்பீடு நிறுவனங்களுக்கும் இது ஒரு சவாலாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதுவரை மெடிகிளைம் (Mediclaim -Health Insurance) திட்டத்தில், ஒருவர் காப்பீடு திட்டத்தை வாங்கிய பிறகு அவர், இது போன்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே கோரிக்கை (Claims) ஏற்கப்படும் என இருந்தது. இனி காப்பீடு நிறுவனங்கள் புதிய காப்பீடு திட்டத்தை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

காப்பீடு நிறுவனங்கள் புதிய காப்பீடு பெறுபவர்களுக்கான தகவல்களையும், ஏற்கனவே காப்பீடை பெற்றவர்களின் தரவுகளையும் நிர்வகிப்பதில் சிரமம் ஏற்படலாம். சிலர் நோயின் தன்மையினை மறைத்து காப்பீட்டு திட்டத்தை பெற்று கொண்டு, பின்பு அறிவிக்கும் பழக்கமும் உள்ளது. ஏனென்றால், எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் போன்ற கவரேஜ்களுக்கு பிரீமியம் சற்று அதிகமாக இருக்கலாம். அவர்களுக்கான சிகிச்சை சிறப்பம்சம் கொண்டதாக இருக்கும் என இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. தாமாக வந்து அறிவிக்கும் பயனாளர்களுக்கு அதற்கான சலுகைகள் மற்றும் பலன்கள் உறுதிப்படுத்தப்படும் என காப்பீடு நிறுவனங்கள் கூறியுள்ளன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com