முதலீட்டாளர்கள் கவனம் ஈர்க்கும் ப்ளோட்டிங் ரேட் திட்டங்கள்
Floating Rate Bonds and Funds – Inflation Insights
உலகளவில் பணவீக்க விகிதம் அதிகரித்து வருவது அனைவரும் அறிந்த விஷயம். விண்ணைத் தொடும் விலைவாசி ஒருபுறம் இருக்க, வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை தொடர்ச்சியாக உயர்த்தும் நிலையில் மத்திய வங்கிகள் உள்ளன.
பொதுவாக பொருளாதாரத்தில் பணவீக்கம் அதிகரித்தால், அதனை கட்டுப்படுத்த வங்கி வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுவதும், இதுவே பணவீக்கம் குறையும் போது அல்லது பணவாட்டம்(Deflation) ஏற்படும் நிலையில் நுகர்வு தன்மையை ஊக்கப்படுத்துவதும் இயல்பான ஒன்று.
வங்கி வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுவது வங்கிக்கடன் பெறுவோருக்கு சாதகமானதல்ல. வட்டி விகித அதிகரிப்பு தனிநபருக்கு மட்டுமல்ல, தங்களது தொழிலுக்காக கடன் பெறும் நிறுவனங்களுக்கும் நல்ல செய்தியல்ல. இதன் காரணமாக நிறுவனங்களின் வருவாயில் கடனுக்கான வட்டியை செலுத்திய பிறகு, லாபங்கள் குறையலாம். அதிக கடனை கொண்டிருக்கும் பல நிறுவனங்கள் நட்டத்தையும் சந்திக்கலாம்.
இது பங்குச்சந்தைக்கும் பாதகமான நிலை தான். அதே வேளையில் வங்கிகளில் டெபாசிட் செய்பவர்களுக்கு சற்று ஆறுதலான விஷயமாக இது அமையும். பொதுவாக வங்கி வட்டி விகிதங்கள் அதிகரித்தால், நடுத்தர மற்றும் நீண்டகால கடன் பத்திரங்களுக்கான தேவை குறைந்து, அவற்றின் மீதான முதலீட்டு வருவாய் குறையும். இதற்கு மாறாக வங்கி வட்டி விகிதங்கள் குறையும் போது, கடன் பத்திரங்களுக்கான தேவை அதிகரித்து முதலீட்டு வருவாய் கூடும்.
அடுத்து வரும் சில காலாண்டுகளில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வங்கி வட்டி விகிதங்கள் உயர்த்தப்படும். இது பங்குச்சந்தைக்கும், நீண்டகால கடன் பத்திரங்களுக்கும் குறுகிய காலத்தில் பாதகத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் ஓரளவு வருமானம் தரக்கூடிய மற்றும் பாதுகாப்பான(அதிக ஏற்ற-இறக்கம் இல்லாத) முதலீடாக வங்கி டெபாசிட், அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்கள், பரஸ்பர நிதிகளில் கிடைக்கப்பெறும் லிக்விட் பண்டுகள் ஆகியவை உள்ளன.
மேலே சொன்ன திட்டங்கள் பணவீக்கத்தை தாண்டிய வருவாயை அளிக்காவிட்டாலும், குறுகிய மற்றும் நடுத்தர கால தேவைக்கு பயன்படும் ஒரு வாய்ப்பாக உள்ளது. இந்நிலையில் தான் தொடரப்போகும் வங்கி வட்டி விகித அதிகரிப்பை, ஒரு முதலீட்டாளராக சாதகமாக பயன்படுத்தும் திட்டம் உள்ளது.
இவை தற்போது முதலீட்டாளர்களை கவனம் ஈர்க்கும் ப்ளோட்டிங் ரேட்(Floating Rate) திட்டங்களாக அமைந்துள்ளது எனலாம். வட்டி விகித அதிகரிப்பை நாம் சாதகமாக பயன்படுத்த இந்த ப்ளோட்டிங் ரேட் திட்டங்கள் பயன்படுகிறது. எப்போதெல்லாம் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படுகிறதோ, அப்போது ப்ளோட்டிங் ரேட் திட்டங்களின் வருவாயிலும் மாற்றம் செய்யப்படும்.
உதாரணமாக வட்டி விகிதம் அதிகரித்தால், ப்ளோட்டிங் ரேட் திட்டங்களின் வருவாயும் அதிகரிக்கும். மாறாக வட்டி விகிதம் குறைந்தால், இத்திட்டத்தின் வருவாய் குறையும். மற்ற கடன் பத்திரங்களின் நிலையான வட்டி விகித ரிஸ்க் தன்மையை குறைக்க, ப்ளோட்டிங் ரேட் திட்டங்களின் வட்டி விகித வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
ப்ளோட்டிங் ரேட் திட்டங்கள் வங்கி டெபாசிட் மூலமும், பரஸ்பர நிதிகளில் பண்டு வாயிலாகவும் கிடைக்கப்பெறுகிறது.
RBI Floating Rate Savings Bond:
- அரசு பத்திரங்களாக கிடைக்கப்பெறுவதால், ரிஸ்க் என்பது பெரும்பாலும் இல்லை. அதே வேளையில், பணவீக்கத்தை தாண்டிய வருவாயை அளிக்காது.
- பணவீக்கம் அதிகரிக்கும் காலங்களில், வட்டி விகித அதிகரிப்பை ஒரு முதலீட்டு வாய்ப்பாக பயன்படுத்தி, நடுத்தர காலத்திற்கு உதவும் ஒரு திட்டமாகும்.
- குறைந்தபட்ச முதலீடு – ரூ.1000 & அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு எதுவுமில்லை.
- ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வட்டி விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும். தேசிய சேமிப்பு பத்திரங்களை(NSC) காட்டிலும் வட்டி வருவாய் சற்று கூடுதலாக இருக்கும்.
- ஏழு வருடங்களில் முதிர்வு அடைக்கக்கூடிய திட்டமாக இருப்பதால், முன்னரே முதலீட்டை திரும்ப பெற முடியாது (மூத்த குடிமக்கள் தவிர்த்து).
- கிடைக்கப்பெறும் வட்டி வருவாய்க்கு, வரி விதிப்பு உண்டு.
- பணப்புழக்கம்(Liquidity) குறைவு மற்றும் சந்தையில் பட்டியலிடப்படாதது இதன் பாதகமான அம்சம்.
- வருமான வரி வரம்பில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு இத்திட்டம் ஓரளவு பயன்படும்.
Floating Rate Fund (Mutual Fund):
- இது ஒரு திறந்தநிலை(Open-ended) கடன் சார்ந்த பண்டாகும். வட்டி விகித மாறுபாட்டை கொண்டிருக்கும் சொத்துக்களில் குறைந்தபட்சம் 65 சதவீத முதலீட்டை இந்த பண்டு கொண்டிருக்கும்.
- அஸெட் அலோகேஷன் முறையில், வட்டி விகித அதிகரிப்பை சாதகமாக பயன்படுத்த இந்த பண்டுகளை தேர்ந்தெடுக்கலாம். மற்ற நிரந்தர வருவாயை(Fixed income) அளிக்கும் திட்டங்களை காட்டிலும், சொல்லப்பட்ட வட்டி விகித காலங்களில் ப்ளோட்டிங் ரேட் பண்டுகள் சற்று கூடுதல் வருவாயை கொடுக்கும்.
- ப்ளோட்டிங் ரேட் பண்டுகளில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் மற்றும் வெளியேறலாம். பெரும்பாலும் வெளியேறும் கட்டணம் இது போன்ற திட்டங்களுக்கு பெறப்படுவதில்லை.
- குறைந்தபட்ச முதலீடு ரூ.500 (எஸ்.ஐ.பி. முறையில் 100 ரூபாய் முதல் துவக்கலாம்).
- பொதுவாக கடன் சார்ந்த பண்டு திட்டங்களில், வங்கி வட்டி விகிதம் அதிகரிக்கும் போது, என்.ஏ.வி.(NAV) குறைந்து வர்த்தகமாகும். ஆனால், ப்ளோட்டிங் ரேட் பண்டுகளில் வட்டி விகித வாய்ப்பை பயன்படுத்தி முதலீடு செய்யப்படும்.
- கடன் சார்ந்த பண்டுகளில் காணப்படும் வரி விகிதமே, இந்த திட்டத்திற்கும் பொருந்தும்.
கவனிக்க:
குறுகிய காலத்தில் ப்ளோட்டிங் ரேட் திட்டங்கள் பயன்பட்டாலும், நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை அளிக்க பங்கு சார்ந்த திட்டங்களை போல வேறு எதுவுமில்லை.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை