Tag Archives: fintech app

அயல்நாட்டு பங்குகளில் நேரடியாக முதலீடு செய்ய உள்ளீர்களா ? – கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

அயல்நாட்டு பங்குகளில் நேரடியாக முதலீடு செய்ய உள்ளீர்களா ? – கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் 

Things to know before investing in Foreign Equities

இந்தியாவின் பங்குச்சந்தை மதிப்பு சுமார் 285 லட்சம் கோடி ரூபாய் (3.50 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்) மற்றும் முன்னணியில் உள்ள முதல் பத்து நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு மட்டும் 77.90 லட்சம் கோடி ரூபாய் (தரவு: BSE India). இந்திய பங்குச்சந்தையில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

2008ம் ஆண்டில் ஏற்பட்ட அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியால் இந்திய பங்குச்சந்தையும் ஆட்டம் கண்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்கு விற்பனையை பெருமளவில் மேற்கொண்டதும் இந்த வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. ஆனால் 2020ம் ஆண்டில் இந்திய பங்குச்சந்தை வீழ்ந்திருந்த போதும், அதற்கு பிறகான மீட்டெடுப்பில் உள்ளூர் முதலீட்டாளர்களின் பங்களிப்பு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. 

கடந்த சில காலாண்டுகளாக வெளிநாட்டு முதலீடுகள் இந்திய பங்குச்சந்தையிலிருந்து அதிகளவில் வெளியேறி இருந்தாலும், நமது சந்தை பெருமளவில் இறக்கம் காணவில்லை. இதற்கு முக்கிய காரணமாக உள்ளூர் முதலீடுகள் பெருகி வருவது தான். பின்டெக்(Fintech Apps) நிறுவனங்களின் பங்கு முதலீடு சார்ந்த விளம்பரங்கள், பரஸ்பர நிதிகளில் தொடர்ச்சியான முதலீடு, கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, குறிப்பிடத்தக்க பங்கு சார்ந்த விழிப்புணர்வு, அரசு சார்ந்த சேமிப்புகள் பங்குச்சந்தையை நோக்கி திரும்புதல் ஆகியவை நமது சந்தைக்கு பக்க பலமாக உள்ளது. 

பின்டெக் நிறுவனங்களின் பங்கு முதலீட்டு பரிந்துரைகள் மற்றும் விளம்பரங்கள் புதிய உள்ளூர் முதலீட்டாளர்களை இந்திய பங்குச்சந்தைக்கு அதிகளவில் கொண்டு வந்துள்ளன என்பதனை நாம் மறுப்பதற்கில்லை. இவற்றையும் கடந்து சமீப காலங்களில் வெளிநாட்டு பங்குச்சந்தைகளில் நேரடியாக முதலீடு செய்வதற்கான தளங்களை பெரும்பாலான பங்கு தரகர்கள்(Stock Brokers) வழங்கி வருகின்றனர். இதனையே பங்குச்சந்தையில் நேரடி செயல்பாடுகளை கொண்டிருக்காத மூன்றாம் தரப்பு பயன்பாடுகளும்(Third Party Apps – Fintech Companies) அயல்நாட்டு பங்குகளை வாங்குவதற்கான வசதிகளை செய்து தந்துள்ளது.

இதன் மூலம் இந்திய உள்ளூர் முதலீட்டாளர்களும் கூகுள், ஆப்பிள், சாம்சங், மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற பிரபலமான வெளிநாட்டு நிறுவன பங்குகளை வாங்க முடியும். உலகமயமாக்கலுக்கு பின்பு நமது நாட்டின் பொருளாதாரம் வெகுவாக உயர்ந்து வந்துள்ளது. தற்போது தொழில்நுட்ப மற்றும் இணைய புரட்சி மூலம் நிதி முதலீடுகளை மேற்கொள்வதும் எளிமையாக்கப்பட்டுள்ளது. ஏதோவொரு கிராமத்தில் அமர்ந்து கொண்டு, அமெரிக்காவில் வர்த்தகமாகும் ‘டெஸ்லா’ பங்கினை வாங்குவது இன்று அவ்வளவு சுலபம். 

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஐந்து சதவீத பங்களிப்பை கூட கொண்டிருக்காத நம் பங்குச்சந்தைக்கு, வெளிநாட்டு பங்குகளை வாங்குவது மிகவும் எளிமையாக இருந்தாலும், நாம் பங்குச்சந்தை சார்ந்த விழிப்புணர்வை ஓரளவு பெற்று விட்டோமா என்றால் அது தான் இல்லை. இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்து வரும் அத்தனை பேரும் லாபமீட்டுகிறார்களா என கவனித்தால், அந்த எண்ணிக்கை ஆயிரங்களில் மட்டுமே உள்ளது. இன்றும் சேமிப்புக்கும், முதலீட்டுக்குமான வேறுபாடுகளை புரிந்து கொள்ள முடியாத முதலீட்டாளர்கள் கோடிகளில் உண்டு. அப்படியிருக்கும் போது, வெறும் விளம்பர நோக்கில் பரிந்துரைக்கப்படும் அயல்நாட்டு பங்குகளை பற்றி நம்மால் புரிந்த கொள்ள முடியுமா, இல்லையெனில் பங்குச்சந்தையில் லாபமீட்டுவது அவ்வளவு எளிதான காரியமா என்ன ?

இந்திய பங்குச்சந்தையில் நேரடியாக பங்கு முதலீடு செய்பவர்களுக்கு பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை புரிந்து கொள்வது சற்று கடினமான விஷயமே. நிறுவனத்தின் தொழில் ஆதாரம், நிதி அறிக்கைகள், நிர்வாகம் ஆகியவற்றை புரிந்து கொள்ள நாம் பயிற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டும். 100 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமாகும் பங்குகள் இப்படியிருக்கும், 1000 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகும் பங்குகள் இவ்வாறு விலை நகரும் என யாராலும் சந்தையில் கணிக்க இயலாது. அடுத்த 50 வருடங்களுக்கு இந்த துறை தான் சிறப்பாக செயல்படும் என உறுதியாக சொல்ல முடியாது. பிரபலமான பிராண்டு நிறுவனங்களும் பங்குச்சந்தையில் சோடை போன வரலாறு உலகின் அனைத்து பங்குச்சந்தைகளுக்கும் உண்டு. இதனை களைய தான் பரஸ்பர நிதிகளின் மூலம் நீண்ட காலத்தில் முதலீடு செய்யுங்கள் என நிதி ஆலோசகர்களும், பொருளாதார வல்லுனர்களும் கூறி வருகின்றனர். பரஸ்பர நிதிகளில் பங்கு நிறுவனங்களை ஆராய்ந்து முதலீடுகளை மேற்கொள்ள பண்ட் மேலாளர்கள் உள்ளனர்.  

அப்படியிருக்கையில் அயல்நாட்டு பங்குகளில் ஏதோவொரு தளத்தின் வாயிலாக நேரடியாக பங்கு முதலீடு செய்வதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை நாம் பார்ப்போம்.

  • மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை(Third Party Apps) கொண்டு வெளிநாட்டு பங்குகளை வாங்குவதில் உள்ள நம்பகத்தன்மை என்ன, ஒழுங்குமுறை ஆணையத்தின்(Regulators) கீழ் அந்த நிறுவனம் செயல்படுகிறதா அல்லது வேறு ஏதேனும் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்த(Associates) அடிப்படையில் பரிந்துரைக்கிறார்களா ?
  • இன்று பெரும்பாலான தளங்கள்(Platforms) டீமேட் கணக்கு துவங்குவதற்கும், பங்குகளை வாங்குவதற்கும் கட்டணம் எதுவுமில்லை என சொன்னாலும், வெளிநாட்டு பங்குகளில் முதலீட்டை மேற்கொள்ள கணக்கு துவங்க தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணங்களை பற்றி அறிந்து வைத்திருப்பது அவசியம்.
  • வாங்கிய வெளிநாட்டு பங்குகளை பின்னர் விற்பனை செய்யும் போது ஏதேனும் கட்டணம் சொல்லப்பட்டுள்ளதா, அவற்றை நீண்ட காலம் நம்மால் வைத்திருக்க முடியுமா என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும்.
  • பங்கு போர்ட்போலியோ விவரங்களை(Portfolio Statement) மின்னஞ்சலில் பெற மாதாந்திர அல்லது ஆண்டு பராமரிப்பு கட்டணம் என்ன ?
  • பங்குகளை விற்பனை செய்த பின், பணத்தை நமது வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டுமெனில் அதற்கான கட்டணம்(Withdraw Charges) எவ்வளவு  ? 
  • நாம் முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவன பங்குகளில் ஏதேனும் சிக்கல்(நிறுவனத்திற்கு) ஏற்பட்டால், அதனை நமக்கு தெரிவிப்பார்களா, சந்தையிலிருந்து அந்த பங்கு ஏதேனும் ஒரு காரணத்தால் வெளியேற்றப்பட்டால் நாம் எவ்வாறு அதனை அறிந்து கொள்வது ?
  • வெளிநாட்டு பங்குகளை வாங்கும் நாம் அந்நாட்டின் வருமான வரிச்சட்டம்(Taxation) எப்படி உள்ளது, நமக்கு சாதகமான அம்சம் ஏதுமுள்ளதா என்பதனை தெரிந்து வைத்திருக்க வேண்டும். 
  • முதலீடு செய்த பங்குகளுக்கு ஈவுத்தொகை(Dividend) ஏதும் வழங்கப்பட்டால் எந்த வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் மற்றும் அதற்கான வரி விதிப்பு எப்படி உள்ளது ?
  • வெளிநாட்டு நிறுவன பங்குகளின் தொழில் மற்றும் நிதி அறிக்கைகளை எளிமையாக தெரிந்து கொள்ள இணையதளங்கள் உள்ளதா, அவற்றினை அறிய கட்டணம் ஏதும் செலுத்த வேண்டுமா(Research reports) ?

பொதுவாக அமெரிக்காவில் பங்கு முதலீட்டுக்கான வரி விதிப்பு, நம் நாட்டை காட்டிலும் அதிகமாக தான் காணப்படுகிறது. இங்கே நீண்டகால மூலதன ஆதாய வரிக்கான காலம் ஒரு வருடத்திற்கு மேல் என்றால், அமெரிக்காவில் அது இரண்டு வருடத்திற்கு மேலாக சொல்லப்படுகிறது. நீண்டகால மூலதன ஆதாயத்திற்காக வரி இங்கே 10% (ஒரு லட்சம் வரையிலான லாபத்திற்கு வரி விலக்கு போக) எனும் போது, அமெரிக்காவில் எந்த வரி விலக்கும் இல்லாமல் 20 சதவீத வரி செலுத்த நேரிடும். பங்கு முதலீட்டு விற்பனைக்கு பின், பணத்தை வங்கிக்கணக்கில் மாற்ற வெளியேற்று கட்டணமும் அங்கே உண்டு.

நேரடி பங்கு முதலீடு(Direct Equity) அதிக ரிஸ்க் தன்மை கொண்டது. எனினும் பங்கு நிறுவனங்களை முறையாக ஆராய்ந்து நீண்டகாலத்தில் முதலீடு செய்து வந்தால்,  நல்ல வருவாயை பெறலாம். அதே வேளையில் உலகளவில் பெயர் போன பிராண்டுகளும், அனைத்து பென்னி பங்குகளும்(Penny Stocks) நல்ல வருவாயை அளிக்கும் என எந்த உத்தரவாதமும் இல்லை. 

சமீப காலமாக, சில பின்டெக் தளங்களில் “அதிகமானோர் விரும்பும் பங்குகள், 10 ரூபாய்க்கு கீழான பங்கு நிறுவனங்கள், தங்கள் தளங்களில் அதிகம் விற்பனையான பரஸ்பர நிதி திட்டங்கள், ஒரே வாரத்தில் அதிக வருவாய் அளித்த திட்டங்கள்” என விளம்பரங்களை(Promotions) காண முடிகிறது. இந்த பரிந்துரைகளை தொடர்ந்து கொண்டு முதலீடு செய்வதில் உள்ள ரிஸ்க் தன்மையை நாம் எச்சரிக்கையாக புரிந்து கொள்ள வேண்டும். அதிகம் விற்பனையான அல்லது அதிகமானோர் விரும்பும் பங்குகள் மற்றும் திட்டங்கள் என்பது விழாக்கால சலுகை போல. கடினமாக உழைத்து சம்பாதித்த நம் பணத்தை இது போன்ற பரிந்துரைகள் மூலம் முதலீடு செய்வதால், எள்ளளவும் பயனில்லை என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை மட்டும் 55 சதவீதமாக உள்ளது. இதுவே ஐக்கிய ராச்சியத்தில்(United Kingdom) 33 சதவீதமாகவும் மற்றும் சீனாவில் 13 சதவீதமாகவும் உள்ளது. இந்திய நாட்டின் வருங்கால வளர்ச்சியை கணக்கில் கொண்டு தான் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே முதலீடு செய்து வருகின்றன. நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ஜப்பான், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் இங்கே அதிக முதலீடுகளை மேற்கொள்கின்றன. 

அப்படியிருக்கையில், நமக்கான பெரும்பாலான பங்கு முதலீட்டு வாய்ப்பு நமக்கு அருகிலேயே தான் உள்ளது. வளர்ந்த நாடுகள் இங்கே முதலீடு செய்து சம்பாதிக்க, நமக்கான இடத்தை நிரப்ப நம்மூர் நிறுவன பங்குகளில் முதலீடு செய்வதினால் தான் அது சாத்தியம். 

குறிப்பு: நான் உள்ளூரில் நிறைவாக முதலீடு செய்து லாபமீட்டி வருகிறேன். நாட்டின் பொருளாதாரத்தில் எனது முதலீட்டு பங்களிப்பு அளப்பரியது. எனவே வெளிநாட்டு பங்குகளை வாய்ப்பாக கருதுகிறேன் என்று நீங்கள் சொன்னால் அயல்நாட்டு பங்கு முதலீட்டை(கட்டணம் மற்றும் வரிகளை புரிந்து கொண்டு) தாராளமாக மேற்கொள்ளுங்கள்.  

பரஸ்பர நிதி நிறுவனங்களின் வாயிலாக இன்று பெரும்பாலான வெளிநாட்டு பங்கு முதலீட்டு திட்டங்கள்(Mutual Funds) நமக்கு கிடைக்கப்பெறுகின்றன.   

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com