Tag Archives: Finolex Cables

பினோலக்ஸ் கேபிள்ஸ் – பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு அலசல்

பினோலக்ஸ் கேபிள்ஸ் – பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு அலசல் 

Finolex Cables – Fundamental Analysis – Stock Market

1958ம் ஆண்டு சாப்ரியா சகோதரர்களால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் பினோலக்ஸ். துவக்கத்தில் மின் கேபிள்களை விற்கும் சிறிய கடையை அமைத்த இவர்கள் பின்பு தொழிற்துறை மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த கேபிள்களை தயாரிக்க முடிவு செய்தனர். வாகன துறைக்கு தேவையான பி.வி.சி. காப்பிடப்பட்ட(PVC Insulated) கேபிள்களை தயாரித்து விற்பனை செய்து வந்தனர்.

நிறுவனத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் நிலையை வாய்ப்பாக பயன்படுத்தி பினோலக்ஸ் நல்ல வளர்ச்சியை கண்டது. 1980ம் ஆண்டுக்கு பிறகு நாட்டின் மிகப்பெரிய கேபிள் உற்பத்தியாளராக தன்னை வடிவமைத்து கொண்டது இந்த நிறுவனம். 1981ம் ஆண்டு பினோலக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்(FIL) நிறுவப்பட்டது. விவசாய துறைக்கு தேவையான பி.வி.சி. உயர்ரக குழாய்கள்(Pipes), பி.வி.சி. பிசின் உற்பத்தி(Resin) மையம், குறைந்த மின்னழுத்த கேபிள்கள் என தனது தயாரிப்பு நிலையை உயர்த்தி கொண்டது.

1983ம் வருடம் பினோலக்ஸ் கேபிள் நிறுவனம் பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாற்றப்பட்டு, பங்குச்சந்தைக்கு வந்தது. இந்த துறையில் காணப்பட்ட உலகின் பெரு நிறுவனங்களுடன் கூட்டாக இணைந்து ஜெல்லி நிரப்பப்பட்ட தொலைபேசி கேபிள்கள், ஒளியியல் இழை(Optical Fibre), செப்பு கம்பி(Copper Rod) ஆலை என தனது தொழிலை விரிவாக்கம் செய்து கொண்டது. 2000ம் ஆண்டுக்கு பிறகு ஒளியியல் இழை, கண்ணாடி இழை, விளக்குகள் மற்றும் மின் சுவிட்சுகள் தயாரிப்பில் தனக்கென முக்கிய இடத்தை பிடித்து கொண்டது பினோலக்ஸ்.

2011ம் ஆண்டில் ஜப்பானை சேர்ந்த சுமிட்டோமோ நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி ஆலைகள், 2014ம் ஆண்டில் 5.5 மெகாவாட் திறன் சோலார் ஆலை, 2016ம் ஆண்டு வாக்கில் மின்விசிறி, நீர் சூடாக்கிகள்(Water Heaters), சுவிட்ச் கியர் என தனது உற்பத்தி ஆலைகளை பரவலாக்க செய்தது. இதன் பொருட்கள் பிரபலமான பிராண்டுகளாகவும் மாறின. மின் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் தயாரிப்பில் நாட்டின் தவிர்க்க முடியாத நிறுவனமாக பினோலக்ஸ் இருக்கிறது.

முதலீட்டாளர்களுக்கு செல்வத்தை அள்ளிக்கொடுத்த பங்குகளில் பினோலக்ஸ் குழுமம் உள்ளது. உலகின் மறைக்கப்பட்ட சாம்பியன்(Hidden Champion) நிறுவனங்களில் முதல் 150 இடங்களுக்குள் பினோலக்ஸ் நிறுவனம் அங்கம் வகிக்கிறது. நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளராக இந்திய ரயில்வே, பாதுகாப்பு துறை மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனங்கள் உள்ளது.

பினோலக்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.4,200 கோடி. புத்தக மதிப்பு 178 ரூபாயாகவும், வட்டி பாதுகாப்பு விகிதம் 288 மடங்குகளிலும் உள்ளது. கடனில்லா நிறுவனமாக(Debt free) இருக்கும் பினோலக்ஸ் நிறுவனர்களின் பங்களிப்பு 36 சதவீதமாக உள்ளது. பொதுவெளியில்(Public Holding) பினோலக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடம் 15 சதவீத பங்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் வைக்கப்படவில்லை.

விற்பனை கடந்த ஐந்து வருடங்களில் 3 சதவீதம் மட்டுமே வளர்ந்துள்ளது. 10 வருட காலத்தில் காணும் போது இது 6 சதவீதமாக உள்ளது. லாபம், கடந்த ஐந்து வருடங்களில் 20 சதவீதமும், பத்து வருட காலத்தில் 14 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பாக ரூ.2,688 கோடி சொல்லப்பட்டுள்ளது. பணவரத்தும், சொத்துக்களில் முதலீடு செய்வதும் கணிசமாக இருந்துள்ளது.

2019-20ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் விற்பனை ரூ.2,877 கோடியாகவும், செலவினம் 2,507 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட நிதியாண்டின் முடிவில் ரூ.402 கோடி நிகர லாபமாக உள்ளது. பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(Return on Equity) கடந்த ஐந்து வருட காலத்தில் 16 சதவீதமாக இருக்கிறது.

பணப்பாய்வு முறைப்படி(DCF Valuation) இந்த பங்கின் விலை ரூ.220 – 275 (with Margin of Safety) என்ற பெறுமானத்தை அடைகிறது. நடப்பாண்டின் மார்ச் மாத சந்தை வீழ்ச்சியில் பினோலக்ஸ் நிறுவன பங்கின் விலை, பங்கு ஒன்றுக்கு 160 ரூபாய் வரை விலை இறக்கம் கண்டது. அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யும் இந்த நிறுவனத்தை சந்தை வீழ்ச்சியில் கண்டு முதலீடு செய்திருந்தால், தற்போதைய விலையில் 60 சதவீத ஏற்றமாக அமைந்திருக்கும்.

சமீப காலங்களில் நிர்வாகம் மற்றும் போட்டியாளர் சார்ந்த சவால்களை பினோலக்ஸ் நிறுவனம் சந்தித்து வருகிறது. இதனை களையும் நிலையில், பினோலக்ஸ் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பாக அமையும். சுமார் 30,000 டீலர்கள் மற்றும் 4000க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களை கொண்டிருக்கும் இந்நிறுவனம் இந்திய சந்தையில் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக பார்க்கப்படுகிறது.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

Advertisement