Tag Archives: Bonds

உலக சந்தைகளுக்கு செல்லும் அரசாங்க பத்திரங்கள் – பாரத ரிசர்வ் வங்கி

உலக சந்தைகளுக்கு செல்லும் அரசாங்க பத்திரங்கள் – பாரத ரிசர்வ் வங்கி 

Government Bonds (G-Secs) in Global Indices Soon – RBI

பொதுவாக அரசாங்க பத்திரங்கள் என்பது மத்திய அரசினால் நமது நாட்டின் நாணயத்தில்(ரூபாய் மதிப்பு) வழங்கப்படும். இந்த பத்திரங்களை வெளிநாட்டு நாணயத்தின் மதிப்பில் வெளியிட்டால், அது சவரின் பத்திரங்கள்(Sovereign Bonds) எனப்படும். மத்திய அரசு தனக்கு தேவையான நிதியை (கடன்) முதலீட்டாளர்களிடம் இது போன்ற பத்திரங்கள் வெளியீட்டின் மூலம் பெறும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பத்திரங்களை பெறும் முதலீட்டாளர்கள் அதற்கான வட்டி வருமானத்தை அரசாங்கத்திடம் இருந்து பெறுவர். அரசு பத்திரங்களை பெறுவதில் நாட்டில் உள்ள வங்கிகள் தான் முக்கியத்துவம் வாய்ந்தது. இது போக வெளிநாட்டு வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதி நிறுவனங்கள் மற்றும் நிதி சார்ந்த பெரு நிறுவனங்கள் அரசாங்க பத்திரங்களை வாங்கும். அரசாங்க பத்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை மற்றும் ரிஸ்க் தன்மை மிக குறைவாக உள்ளவை.

பாரத ரிசர்வ் வங்கியின் மூலம் தான் அரசாங்க பத்திரங்கள்(Government Bonds) வெளியிடப்படும். ஆரம்ப நிலையில், மத்திய அரசின் நிதி தேவைக்காக வெளியிடப்படும் பத்திரங்கள் முதன்மை சந்தைக்கு வரும். பின்னாளில் அதனை இரண்டாம் சந்தையிலும் நாம் வாங்கி கொள்ளலாம். பொதுவாக அரசு பத்திரங்கள் 5, 10,15, 20, 30 வருடங்கள் என முதிர்வு காலத்தை கொண்டிருக்கும். அரசு பத்திரங்களில் கிடைக்கப்பெறும் வட்டி வருவாய் ரிஸ்க் இல்லா விகிதமாக(Risk Free Rate – Bond yield) சொல்லப்படும். ஏனெனில், அரசாங்கம் கடன் வாங்கியிருந்தாலும் அந்த கடனை உறுதியாக அடைத்து விடும் என்ற நம்பிக்கை உலகளவில் உள்ளது. மேலும் கடனை திருப்பி செலுத்த முடியாத பட்சத்தில், அரசாங்கம் பணத்தை அச்சடிப்பதற்கு உரிமை உள்ளது.

அரசு பத்திரங்களுக்கும், வங்கி வட்டி விகிதங்களுக்கும் நேரெதிர் உறவு உண்டு. அதாவது எப்போதெல்லாம், வங்கியில் வட்டி விகிதம் குறைவாக உள்ளதோ, அப்போது பத்திரங்களுக்கான வட்டி விகிதம்(Bond Prices) அதிகரிக்கும். அதே போன்று வங்கி வட்டி விகிதம் அதிகமாக காணப்படும் போது, அரசு பத்திரங்களின் வட்டி விகிதம் குறைய கூடும். இது முதலீட்டாளர்களின் வருவாய் தேவையை சார்ந்து தான் மாறுபடுகிறது.

அதனால் தான் பாரத ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும் போது பரஸ்பர நிதிகளில் காணப்படும் கடன் பத்திரங்களின் வட்டி வருவாய் அதிகரிக்கும். இரண்டையும் சாதகமாக பயன்படுத்துவது தான் ஒரு முதலீட்டாளரின் சாமர்த்தியம். தற்போது பத்து வருட அரசு பத்திரங்களின் விலை 6.42 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் வர்த்தகமாகி வருகிறது. இதுவும் பங்குச்சந்தை போன்றது தான், வாங்கலாம் மற்றும் விற்கலாம்.

சில தகவல்கள்: GS2029 – 10 வருட பத்திரங்கள் – 6.45 %, GS2026 – 7.27 %, GS2024 – 7.32 %, GS2024 – 6.18 %, GS2021 – 6.17 %, 91 Day T-bills – 5.05 % (Data: RBI)

கடந்த பட்ஜெட் தாக்கலிலும் அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு சலுகை சம்மந்தமாக நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். மேலும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களுடன் இணைந்து அந்நிய முதலீட்டாளர்களும் நம் நாட்டின் அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய வசதி செய்யப்பட உள்ளதாக மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது. சிறு முதலீட்டாளர்களும் அரசு பத்திரங்களை வாங்கி வைக்கலாம். இதற்கு டீமேட் கணக்கு(Demat Account) துவங்குவது அவசியம். அரசு பத்திரங்களை விற்கும் போது வரி விகிதங்கள் உள்ளது என்பதை மறக்க கூடாது.

வங்கியில் உள்ள நிதி நிலைமையை சரி செய்யவும், அரசுக்கு தேவையான நிதி முதலீடுகளை பெறுவதற்கும் உலக சந்தையில் அரசு பத்திரங்களை வெளியிடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அமெரிக்க சந்தையில் அதன் பத்திரங்களின் வட்டி விகிதம் 2 சதவீதத்திற்கு குறைவாக உள்ளது. இங்கிலாந்தில் ஒரு சதவீதத்திற்கு குறைவாகவும், சீனாவில் 2.97 சதவீதம் என்ற வட்டி விகிதத்திலும் அரசு பத்திரங்கள் உள்ளது. ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் அரசு பத்திரங்களின் வட்டி விகிதம் பூஜ்யத்திற்கு குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற நிலையில், நம் நாட்டின் அரசு பத்திரங்களின் வருவாய் வளர்ந்த நாடுகளிடையே கவர்ச்சிகரமான முதலீட்டு வாய்ப்பாக அமைந்துள்ளது. அதே வேளையில் அரசு கடன் பெறுவதற்காக உலக சந்தைகளில் பத்திரங்களை விற்பது சரியான நடவடிக்கையாக இருக்காது எனவும் சில பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.எது எப்படியோ, வளர்ந்த நாடுகளை பொறுத்தவரை, இந்தியா ஒரு முதலீட்டு வாய்ப்பாக தெரிகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com