Tic tac toe game strategy

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கான மூன்று முதலீட்டு உத்திகள்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கான மூன்று முதலீட்டு உத்திகள் 

Investing Strategies for the Equity Investors

பங்குச்சந்தையில் குறுகிய கால முதலீட்டாளர்களை விட நீண்ட கால முதலீட்டாளராக இருப்பது அப்படி ஒன்றும் கடினமான வேலையல்ல. அதனால் தான் திருவாளர் வாரன் பப்பெட் அவர்கள், ‘யாரும் மெதுவாக அல்லது பொறுமையாக பணக்காரராக விரும்புவதில்லை’ என்கிறார். நீண்ட காலத்தில் காத்திருந்து செல்வத்தை ஏற்படுத்த சந்தையில் காணப்படும் இரைச்சல்களை(Daily News noise) கண்டுகொள்ளாமல் இருப்பதும், சற்று பொறுமையும் இருந்தால் போதும். பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வை(Fundamentals) பூர்த்தி செய்யும் நல்ல நிறுவன பங்குகள் குறுகிய காலத்தில் ஏற்றம் பெறாவிட்டாலும், நீண்டகாலத்தில் ஒரு முதலீட்டாளர் எதிர்பார்ப்பதை காட்டிலும் நல்ல வருவாயை அளித்துள்ளது வரலாற்று சான்று.

உதாரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்துஸ்தான் யூனிலீவர், ஐ.டி.சி., விப்ரோ போன்ற பெரு நிறுவனங்கள் சில வருடங்கள் பக்கவாட்டு விலையில் மட்டுமே நகர்ந்ததை சொல்லலாம். அந்த சமயத்தில் மற்ற நிறுவன பங்குகள் பெரிய ஏற்ற-இறக்கத்திற்கு உட்பட்டாலும், நாம் சொன்ன பெரு நிறுவன பங்குகள் தொழிலில் வளர்ச்சி கண்டிருந்தும், பங்கு விலையில் அதிகம் ஏற்றம் பெறாமல் இருந்தன. இருப்பினும் அதற்கான சுழற்சி கால முறை வந்த சமயங்களில் அவை இன்று முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தை அளித்துள்ளன.

முதலீட்டுக்கான உத்தி(Investing Strategy) எனும் போது நீண்டகால முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் மூன்று…

  • இரைச்சல்களுக்கு செவி சாய்க்காதீர்கள் – சந்தையில் அவ்வப்போது நிகழும் சலசலப்புகளுக்கு இடம் கொடுக்காமல் நீண்டகால நோக்கில் முதலீடு செய்து வருவது நிதி இலக்கு சார்ந்த நன்மையை அளிக்கும். நிறுவனத்திற்கு ஒரு ஆர்டர் வந்துள்ளது என அவசரமாக ஒரு நிறுவன பங்கில் முதலீடு செய்து வருவது, பிரபலமான பெரு முதலீட்டாளர் ஒருவர் இந்த பங்கில் முதலீடு செய்கிறார் என நாமும் முந்தி கொள்வது, கடந்த சில வாரங்களாக ஒரு குறிப்பிட்ட பங்கின் விலை நாள்தோறும் விலையேற்றம் பெறுகிறது என முதலீடு செய்வது, அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யாத சிறு மற்றும் குறு நிறுவன பங்குகளில்(Penny Stocks) விலை குறைவாக இருக்கிறதே, வாங்கிய சில நாட்களில் இரட்டிப்பு லாபம் பார்த்து விடலாம் என சூதாடுவது போன்ற வேலைகளை நாம் செய்ய வேண்டாம்.
  •  உங்களது ரிஸ்க் தன்மையை புரிந்து கொள்ளுங்கள் – நம்மால் எந்தளவு ரிஸ்க் தன்மையை எடுக்க  முடியுமோ அந்தளவு தான் நமது முதலீட்டு போர்ட்போலியோ முறையும் இருக்க வேண்டும். இந்தியாவின் வாரன் பப்பெட் என்றழைக்கப்படும் திரு. ராகேஷ் ஜூன்ஜூன்வாலா என்னென்ன பங்குகளை தனது போர்ட்போலியோவில் வைத்திருக்கிறாரோ அதனையே நாமும் வாங்கி வைத்திருக்க நினைப்பது, பெருத்த இழப்பை தான் நமக்கு தரும். அவரது முதலீட்டு முடிவையும், ஒரு நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அவர் பங்கேற்கும் உத்தியையும் நாம் பின்பற்ற முடியாது. ஒரே நாளில் ரூ.5,000 கோடியை இழப்பதற்கு அவர் தயாராக இருப்பார். ஆனால், நாம் ?
  • அடிப்படை கற்றலை எப்போதும் மேற்கொள்ள வேண்டும் –  எந்த துறையை அல்லது பங்குகளை நம்மால் புரிந்து கொள்ள முடியுமோ அவற்றில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். புரிந்து கொள்ள முடியவில்லை எனில், கற்று கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். உங்களுக்கு பங்குகளை அலச நேரமில்லா விட்டால், பரஸ்பர நிதி திட்டங்களின் மூலம் பங்கு சார்ந்த முதலீடு செய்து வருவது போதுமானது. நீண்ட கால முதலீட்டில் நட்டம் அல்லது இழப்பு என்ற நிலை எப்போதும் இல்லை. (நீங்களாகவே தவறான பங்குகளை, தவறான விலையில் வாங்கி  பின்னர் விற்றால் மட்டுமே அது நட்டம் ). எனவே கற்றலுக்கு முக்கியத்துவம் தாருங்கள். உங்களுக்கு அருகில் ஏதேனும் நிதி அல்லது பங்குச்சந்தை சார்ந்த கூட்டம் நடைபெற்றால், அவற்றில் கலந்து கொண்டு அடிப்படை கல்வியை கற்று கொள்ளலாம். இணையம் வழியாக நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்று நமது பங்குச்சந்தை சார்ந்த அறிவை பெருக்கி கொள்ளலாம். (எச்சரிக்கை: அதற்காக சிறு முதலீட்டை கொண்டு லட்சங்களாகவும், கோடிகளாகவும் மாற்றி தருகிறேன் என்ற மோசடி பேர்வழிகளிடம் மாட்டி கொள்ளாதீர்கள்) 

நீண்ட கால முதலீட்டாளர் என சொல்லும் போது அது பங்குச்சந்தைக்கு மட்டுமே இல்லை. பொருளாதார மந்தநிலை காலங்களை சமாளிக்க மற்ற முதலீட்டு சாதனங்களை தேர்ந்தெடுக்கும் அஸெட் அலோகேஷன்(Asset Allocation) முறையை பின்பற்றுவதும் அவசியம். நிதி சார்ந்த பாதுகாப்பு முறையை(டேர்ம் இன்சூரன்ஸ், மருத்துவ காப்பீடு, அவசர கால நிதி, கடனில்லா தன்மை, உடல்நலம்), சந்தையில் முதலீடு செய்வதற்கு முன்பு உறுதி செய்திருந்தால் நல்லது. பங்குகள், கடன் பத்திரங்கள், வீட்டுமனை, தங்கம், ரொக்கம் மற்றும் பிற முதலீட்டு சாதனங்கள் என முதலீட்டு பரவலாக்கத்தை கொண்டிருப்பது நல்லது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.