Bridge dawn

இனி வாரத்திற்கு நான்கு வேலை நாட்கள் சாத்தியமா, தொழில்முனைவு இனி அவசியமா ?

இனி வாரத்திற்கு நான்கு வேலை நாட்கள் சாத்தியமா, தொழில்முனைவு இனி அவசியமா ?

4 Day work Week – Necessity of Entrepreneurship in the New Normal

கடந்த 2020ம் வருட ஏப்ரல் மாதத்தின் 18ம் தேதியன்று எனது வாடிக்கையாளர்கள் மற்றும் வாசகர்களுக்கான இணைய வழி சந்திப்பு(Webinar) ஒன்றை ஏற்படுத்தியிருந்தேன். சரியாக அது கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு காலமாகும்.

அதற்கு சில வாரங்களுக்கு முன்பு, நானும் சில தொழிலதிபர்கள் மற்றும் பொருளாதார வல்லுனர்களின் உரையாடல் மூலம் சில சிந்தனைகளை பெற்றிருந்தேன். இதன் பின்பு, எனது வாடிக்கையாளர்களிடம் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலம் மனித வாழ்வில் புதிய நகர்வாக இருக்கக்கூடும் என சொல்லியிருந்தேன்.

நான் சந்திப்பை ஏற்படுத்திய நிகழ்விலும் அதனை தான் கூறியிருந்தேன். வாசகர்கள் சிலர், ‘அப்படியெல்லாம் நடந்து விடாது சார், கொரோனாவுக்கு பின்னர், நாம் முன்னர் இருந்த சாதாரண வாழ்க்கை திரும்ப வந்து விடும்’ என கூறினார்கள். ஆனால் நான் குறிப்பிடத்தக்க தொழிலதிபர்களிடம்(வல்லரசு நாடு உட்பட அயல்நாட்டில் தொழில்புரிந்தவர்களும்)  அவர்களின் சிந்தனையில் அறிந்த போது, கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலம் உறுதியாக புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பினேன். பலருடைய வாழ்வில் மிகப்பெரிய ஏற்ற-இறக்கத்தை இனிவரும் காலங்கள் ஏற்படுத்தும் என்ற புரிதலுக்குள் முனைந்தேன். முக்கியமாக, அமெரிக்காவில் வாரத்திற்கு 40 மணிநேரம் மட்டுமே(5 நாட்கள் X 8 மணிநேரம்) இருந்த பணியாளர் வேலை நேரம் இனி வாரத்திற்கு 30 மணிநேரத்திற்கு குறைவாகவோ அல்லது வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை இருக்கலாம் என அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் கூறியிருந்தார். இந்த நிலை இந்தியாவிலும் வரக்கூடும், ஆனால் அதற்கான காலம் தாமதமாகலாம் என கூறினார். இதற்கான காரணமாக தொழில்நுட்பங்களும், அதனை சார்ந்த செயற்கை நுண்ணறிவின் அடுத்தகட்ட வளர்ச்சியும் தான் சொல்லப்பட்டன.

இதன் வாயிலாக நானும் சில விவரங்களை தொகுத்த ஆரம்பித்தேன். அதனை  வாடிக்கையாளர் சந்திப்பின் தொகுப்பாகவும் இணைத்தேன். அவற்றின் சுருக்கம்…

2020ம் ஆண்டுக்கு பிறகான சவால்கள்:
  • சமூக இடைவெளி என்பது இனி புதிய வாழ்வியல் நிலையாக இருக்கும்.
  • பல துறைகளில் இடையூறு மற்றும் வெற்றிடம் – புதுமை புகுதல்
  • ஆட்டோமேஷன் – செயற்கை நுண்ணறிவு
  • வரி விதிப்புகள்
  • சுகாதாரம் மற்றும் மருத்துவத்திற்கான தேவை
  • சுற்றுச்சூழல் பிரச்சனைகள்
வாய்ப்புகள்: 
  • மினிமலிசம் – குறைவாக செலவழித்தல் மற்றும் நிறைவான வாழ்வு
  • பல்வேறு வேலைவாய்ப்புகள் (தற்சார்பு வாழ்வு, தொழில்முனைவு)
  • புதிய மற்றும் பல முதலீட்டு சாதனங்களும், வாய்ப்புகளும்
  • உணவுக்கான புரட்சி (விவசாயத்தின் தேவை)
  • நிலைத்தன்மை வாழ்க்கை(Sustainability Living)
புதிய உதயம்:
  • பெரும்பாலும் தொழில்நுட்பம் சார்ந்த வாழ்க்கை நகர்வு
  • போதுமான நேரம் இருத்தல் (உங்களுக்கு பிடித்த வேலைகளை செய்தல், குடும்பத்துடன் நேரம் செலவழித்தல்)
  • சிந்தனைக்கு உணவு
  • தொழில்முனைவோர் வாழ்க்கை – இனி வழக்கமான வேலை இல்லை.

மேலே சொன்னவற்றை கண்டு நாம் பயப்படவோ, நகைப்புக்குரியதாகவோ எடுத்து கொள்ள வேண்டாம். இவை கணிப்புகள் அல்ல… பெரும்பாலான உலக பொருளாதாரத்தின் நகர்வுகள் !

அடுத்தகட்ட நகர்வுக்கு செல்லும் முன்னர் பொருளாதாரம் சார்ந்த பாதுகாப்பை பெற போதுமான டேர்ம் காப்பீடு, குடும்பத்திற்கான மருத்துவ காப்பீடு, அவசரகால நிதி, ஓய்வு காலத்திற்கான கார்பஸ் தொகை மற்றும் ஏற்கனவே உள்ள கடன்களை பெரும்பாலும் குறைத்தல் அல்லது கடனில்லா நிலை – இவ்வைந்தையும் உங்கள் வாழ்வில் உறுதி செய்து கொள்ளுங்கள்.

வரும் நாட்களில் தொழில்முனைவுக்கான தேவை அதிகமாக இருக்கும். நீங்கள் காப்பீடு ஏஜெண்டாக இருந்தாலும் பரவாயில்லை, இணைய வழி பொருட்களை விற்கும் தொழிலை கொண்டிருந்தாலும் பரவாயில்லை. வரும் நாட்கள், புதிய மாற்றத்தை கொண்டிருக்கும்.

குறிப்பு:

வாரத்திற்கு 48 மணிநேரமாக இருந்த தொழிலாளர்களுக்கான வேலை நேர வரம்பு, இனி வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்தால் போதும். அதாவது வாரத்தில் ஊதியத்துடன் கூடிய மூன்று நாட்கள் கட்டாய விடுப்பு. நாளொன்றுக்கு 12 மணிநேர வேலை என்பது இனி ஊழியர்களின் விருப்பமாக இருக்கும். ஆனால் அனைத்து நாட்களிலும் இனி வேலை செய்ய முடியாது – மத்திய தொழிலாளர் அமைச்சகம் விரைவில் சட்டமாக்க உள்ள தகவல்

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.