கல்யாணி குழுமம் – பங்குச்சந்தை அலசல்
Kalyani Group – Conglomerate – Fundamental Analysis
கல்யாணி குழுமம் கடந்த 1960ம் ஆண்டு துவங்கப்பட்டது. தொழிலதிபர் திரு. நீல்காந்த் ராவ் கல்யாணி அவர்களின் புதல்வன் பாபா கல்யாணி(Babasaheb Kalyani) இந்த குழுமத்தின் தலைவராக உள்ளார். இந்திய பன்னாட்டு நிறுவனமாக விளங்கும் கல்யாணி குழுமம் தனது தொழிலை பொறியியல், எஃகு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நகர்ப்புற உள்கட்டமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் சிறப்பு ரசாயனம் என பரவலாக்கியுள்ளது. வாகனத்துறை மற்றும் ராணுவத்திற்கு தேவையான கூறுகளை உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனமான பாரத் போர்ஜ்(Bharat Forge), கல்யாணி குழுமத்தின் ஒரு அங்கம் தான்.
பில்லியன் டாலர்களில் வருவாயினை கொண்டிருக்கும் இந்த குழுமம் 10,000க்கும் மேற்பட்ட பணியாளர்களையும், பல வளர்ந்த நாடுகளில் தனது கிளைகளையும் அமைத்துள்ளது. உலக தொழில் சந்தையில் தலைமை வகிக்கும் பல நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் கல்யாணி குழும நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
உலகின் மிகப்பெரிய போர்ஜிங்(Forging) நிறுவனம், போர்ஜிங் துறையில் நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனமாகவும், முன்னணி பொறியியல் எஃகு உற்பத்தியாளராகவும் இதன் குழும நிறுவனங்கள் உள்ளன. குழுமத்தின் முக்கிய நிறுவனங்களாக பாரத் போர்ஜ், கல்யாணி டெக்னோ போர்ஜ், கல்யாணி ஸ்டீல், கல்யாணி தெர்மல், கல்யாணி டெக்னாலஜிஸ், சி.டி.பி.(CDP) பாரத் போர்ஜ், கல்யாணி பிரேக்ஸ், கல்யாணி ஷார்ப் என இதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
பிரபல ஐ-லீக்(I-League) கால்பந்தாட்டத்தின் பாரத் எப்.சி.(Bharat FC) அணி, கல்யாணி குழுமத்தின் ஒரு அங்கமாகும். இந்திய பங்குச்சந்தையில் கல்யாணி குழுமத்தின் நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. பாரத் போர்ஜ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 25,000 கோடி ரூபாய். 50 வருடங்களுக்கு மேலான தொழில் அனுபவத்தை கொண்டிருக்கும் பாரத் போர்ஜ் வார்ப்புகள் மற்றும் போர்ஜிங்(Castings & Forging) பிரிவில் உள்ளது.
உயர்தர கார்பன் மற்றும் அலாய் ஸ்டீல் போர்ஜ், இயந்திர கூறுகளை உற்பத்தி செய்யும் பிரிவில் கல்யாணி டெக்னோபோர்ஜ் நிறுவனம் உள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை கொண்ட கல்யாணி ஸ்டீல்(Kalyani Steels) நிறுவனம் இரும்பு மற்றும் எஃகு தயாரிப்புகளின் உற்பத்தி மற்றும் விற்பனை வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. கடனில்லா நிறுவனமாக காணப்படும் இந்த நிறுவனத்தில் பாரத் போர்ஜ் முதலீட்டு நிறுவனம் 39 சதவீத பங்குகளை வைத்துள்ளது. பொதுவாக ஸ்டீல் துறை உலகளாவிய காரணிகளால் பெரிதும் பாதிக்கப்படும் துறையாக காணப்படுகிறது.
கல்யாணி ஸ்டீல் நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக டாட்டா, மஹிந்திரா, வால்வோ, மாருதி சுசூகி, நிசான், பெல்(BHEL), போர்ஸ் மோட்டார்ஸ், போர்டு, ஹூண்டாய், மெரிட்டார், ஐஷர் போன்ற நிறுவனங்கள் உள்ளன.
இருப்பினும், துறை சார்ந்த போட்டிகளை தன்னகத்தே கொண்டு கல்யாணி ஸ்டீல் நிறுவனம் இயங்கி வருகிறது. நிறுவனத்தின் கையிருப்பு 996 கோடி ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 605 கோடி ரூபாய் சந்தை மதிப்புடைய கல்யாணி இன்வெஸ்ட்மென்ட்(Kalyani Investment) நிறுவனம், குழும நிறுவனங்களுக்கு தேவையான முதலீட்டை அளிக்க தொழில் செய்து வருகிறது. கடனில்லா நிறுவனமாக உள்ள இந்த நிறுவனத்தின் விற்பனை மற்றும் லாப வளர்ச்சி கடந்த ஐந்து வருட காலத்தில் 20 சதவீதமாக உள்ளது. கல்யாணி குழுமத்தில் உள்ள நிறுவனங்களை பின்னொரு பதிவில் ஆழமாக அலசலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை