BHEL Logo

திருச்சி பெல் நிறுவனம் – நான்காம் காலாண்டில் ரூ.1,533 கோடி நஷ்டம்

திருச்சி பெல் நிறுவனம் – நான்காம் காலாண்டில் ரூ.1,533 கோடி நஷ்டம் 

BHEL’s Net loss of Rs.1533 Crore in Q4FY20 – Quarterly Results

1964ம் ஆண்டு புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்ட அரசு பொதுத்துறை நிறுவனம் பெல் (Bharat Heavy Electricals Ltd – BHEL). நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனமாக பெல் உள்ளது. உபகரணங்கள் வடிவமைப்பு, பொறியியல், கட்டுமானம், மின் பரிமாற்றம், போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், எரிவாயு மற்றும் பாதுகாப்பு சார்ந்த சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்நிறுவனத்தில் சுமார் 40,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். பெல் நிறுவனத்தின் முக்கிய பொருட்களாக கொதிகலன்கள்(Boilers), மின்னணு மோட்டார்கள், நீராவி விசையாழிகள்(Turbines), ஜெனரேட்டர்கள், சுவிட்ச் கியர் மற்றும் சென்சார்கள், கட்டுப்பாட்டு அமைப்புகள், வெப்ப பரிமாற்றிகள்(Heat Exchangers) என பலவகைகளில் உள்ளது.

கடந்த 1991ம் ஆண்டு பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாற்றப்பட்டது. இந்திய ரயில்வே ஆயிரத்துக்கும் மேலான எலக்ட்ரிக் இன்ஜின்களை பெல் நிறுவனத்திடமிருந்து வாங்கியுள்ளது கவனிக்கத்தக்கது. இந்திய ராணுவத்திற்கு தேவையான முக்கிய சேவைகளையும் இந்நிறுவனம் வழங்கி வந்துள்ளது.

நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.11,000 கோடி. புத்தக மதிப்பு 82 ரூபாயாகவும், கடன்-பங்கு விகிதம் 0.18 ஆகவும் உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம் எதிர்மறையாக உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 63 சதவீதமாகவும், நிகர சொத்து மதிப்பு ரூ.28,660 கோடியாக உள்ளது.

விற்பனை மற்றும் லாப வளர்ச்சி சொல்லிக்கொள்ளும்படி வளரவில்லை. கடந்த பத்து வருடங்களில் விற்பனை வளர்ச்சி ஒரு சதவீதமாகவும், லாப வளர்ச்சி (-11 %) எதுவுமில்லாமல் உள்ளது. இந்த பங்கின் விலை கடந்த 12 மாதங்களில் 55 சதவீத இறக்கத்தை சந்தித்துள்ளது. பங்கு மூலதனம் மீதான வருவாய்(Return on Equity) பத்து வருடங்களில் 11 சதவீதமாக உள்ளது.

2018-19ம் நிதியாண்டில் வருவாய் 30,368 கோடி ரூபாய் மற்றும் நிகர லாபம் ரூ. 1,012 கோடி. ஆனால் 2019-20ம் நிதியாண்டில் நிறுவனம் பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளது. கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.5,050 கோடியாகவும், செலவினம் ரூ.5,609 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது. எனவே இயக்க லாபமே(Operating Loss) நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

சொல்லப்பட்ட காலாண்டின் முடிவில் நிறுவனம் ரூ.1,533 கோடியை நஷ்டமாக கொண்டுள்ளது. இருப்புநிலை கையிருப்பு ரூ.27,964 கோடியாக உள்ளது. நிறுவனத்திற்கு தேவையான பணவரத்து சரிவர இல்லை. மின்சார வாகனங்கள் மற்றும் அதற்கு தேவையான பேட்டரி ஆய்வில் இந்த நிறுவனம் ஈடுபட போவதாக உள்ள செய்திகள் மட்டுமே சாதகமாக உள்ளது. எனினும் அதற்கான ஊக்குவிப்பு தற்போதைய நிலையில் தாமதமாகலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.