குலை நடுங்க வைத்த நாட்டின் சில்லரை விலை பணவீக்கம்
India’s Retail Inflation to 7.35 Percent – Breached the RBI’s Target
நாட்டின் பொருளாதார வளர்ச்சி என சொல்லப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP Growth) ஒரு புறம் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கையில், அதற்கு நேரெதிராக சில்லரை விலை பணவீக்கம்(Retail Inflation) வீறு நடைபோட்டு கொண்டிருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டின் ஜனவரி மாத சில்லரை விலை பணவீக்கம் 1.97 சதவீதமாக இருந்த நிலையில், டிசம்பர் 2019 மாத முடிவின் பணவீக்கம் 7.35 சதவீதம் என்ற நிலையை அடைந்துள்ளது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சந்தை எதிர்பார்த்த 6.2 சதவீத சில்லரை விலை பணவீக்கம் என்ற நிலையை காட்டிலும், டிசம்பர் மாத விலைவாசி உயர்ந்துள்ளது. இதனை காட்டிலும் பெரிய அதிர்ச்சி என்னவெனில், பாரத ரிசர்வ் வங்கியின் 6 சதவீதம் என்ற இலக்கை மீறியுள்ளது, தற்போது சொல்லப்பட்டுள்ள பணவீக்க விகிதம்.
உணவுப்பொருட்களின் சமீபத்திய விலை உயர்வால் நுகர்வோர் விலை பணவீக்கம் உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக காய்கறிகளின் விலை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. இது போல பருப்பு(Pulses) வகைகள் 15.50 சதவீதமும், அத்தியாவசிய உணவுகளின்(Food & Beverages) விலை 12 சதவீதமும் கடந்த டிசம்பர் மாதத்தில் உயர்ந்து காணப்பட்டுள்ளது.
தானியங்கள் மற்றும் பால் பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது. காலணிகள், துணிமணிகள், வீட்டுமனை மற்றும் எரிபொருட்களின் விலையும் ஓரளவு அதிகரித்துள்ளது. கடந்த ஆறு வருடங்களில் காணப்படாத அளவு தற்போது உணவு பொருட்களின் பணவீக்கம் உள்ளது கவனிக்கத்தக்கது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஒருபுறம் இறக்கத்தில் செல்லும் நிலையில், பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருந்தால் அது சாதகமான அம்சமாக இருந்திருக்கும். ஆனால் தற்போது விலைவாசி உயர்ந்துள்ளது சாமானிய மக்களை குலைநடுங்க வைத்துள்ளது எனலாம்.
பணவீக்க உயர்வை தொடர்ந்து, வரவிருக்கும் மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டத்தில்(Monetary Policy Committee) பாரத ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்குமா, இல்லையெனில் வட்டி விகித அதிகரிப்பை ஏற்படுத்துமா என்பது தெரிய வரும். 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ஏற்படுத்தப்பட்ட வரி குறைப்பு நடவடிக்கையால் பெரும்பாலான நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்காமல், லாபத்தை பெற்றிருந்தன. இந்நிலையில் பணவீக்கம் உயர்ந்து காணப்படுவதால், வட்டி விகிதம் உயர்த்தப்படும் போது, அது நிறுவனங்களின் வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதே வேளையில், வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை அல்லது வட்டி விகிதம் குறைக்கப்பட்டாலும் அது வங்கி டெபாசிட்தாரர்களுக்கு சாதகமாக இருக்காது. பணவீக்கம் அதிகமாக காணப்படும் நிலையில், வங்கியில் பணவீக்கத்தை ஒட்டிய வருமானத்தை பெற முடியாமல், நஷ்டத்தை ஏற்படுத்தலாம். தற்போது ஒரு வருட வங்கி டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 7 சதவீதத்திற்கு குறைவாக இருப்பது கவனிக்கத்தக்கது.
நாட்டின் சில்லரை விலை பணவீக்கம்(CPI Inflation) கடந்த 2013ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 12.17 சதவீதம் இருந்தது. இதுவே நாட்டின் அதிகபட்ச விலை உயர்வாக சொல்லப்படுகிறது. குறைந்தபட்ச அளவாக கடந்த 2017ம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 1.54 சதவீதமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை