பங்கு சந்தை வீழ்ச்சி – போர் பதற்றம் – முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது ?
Stock Market Crash – War Tensions – Tools for the Investors
அமெரிக்க – ஈரான் போர் பதற்ற சூழலை தொடர்ந்து, உலகின் அனைத்து பங்குச்சந்தைகளும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. நேற்றைய இந்திய பங்குச்சந்தையில் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி மற்றும் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ்(BSE Sensex) இரண்டும் 1.90 சதவீத இறக்கத்தை கண்டுள்ளன.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அதாவது மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 788 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை நிப்டி(Nifty50) 233 புள்ளிகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன. அதே வேளையில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. பொதுவாக போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை போன்ற சூழ்நிலைகளில் தங்கத்தின் விலை அதிகரிக்க செய்யும். பொருளாதாரம் மேம்பட்டிருக்கும் போது, தங்கத்தின் தேவை குறைவாக காணப்படும்.
இது போன்ற காலங்களில் சந்தை இறக்கம் காண்பது இயல்பு. இதனை யாராலும் தவிர்க்க இயலாது. முதலீட்டாளராக ஒருவர் செய்ய வேண்டியது, அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) பின்பற்றுவதே. இங்கே பங்குச்சந்தை வரைபடங்கள்(Technical Analysis) எல்லாம் வேலை செய்யாது. இன்றிரவு என்ன நடக்கும், நாளை என்ன நடக்கும் என்பது போர் பதற்ற சூழ்நிலைகளில் கண்டறிய முடியாது. பெரும்பாலும் சந்தையில் வதந்திகளும், பதற்றமும் தான் தொற்றி கொள்ளும்.
பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சந்தையின் போக்கை கணிப்பதை விட, குறிப்பிடத்தக்க துறையில் உள்ள பங்குகளின் நிதி நிலையை கண்டறிவது அவசியம். நாம் முதலீட்டு செய்ய உள்ள பங்கின் விலை, தற்போது மலிவாக கிடைக்கிறதா, நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் கொள்கைகள் எவ்வாறு காணப்படுகிறது என்பது தான் முதலீட்டிற்கு அவசியமானது.
உதாரணமாக சந்தையில் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 120 என வைத்து கொள்வோம். உங்களுக்கு தெரிந்த நபர் ஒருவர் இரண்டு கிலோ 80 ரூபாய்க்கு தருவதாக கூறுகிறார். நீங்கள் இப்போது என்ன செய்வீர்கள் ? சந்தையில் ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்கும் போது, இவர் எப்படி 80 ரூபாய்க்கு தருவார், அதுவும் இரண்டு கிலோ வெங்காயம் ? நமக்கு ஏற்படுவது சந்தேகம் தான், பிறகு அது தேடுதலை உருவாக்கும். வெங்காயத்தின் தரத்தை அறிய முற்படுவோம். அவரால் இவ்வாறான மலிவான விலையில் விற்பதற்கான காரணம் என்ன – இது போன்ற கேள்விகளுக்கான விடையை அடைந்த பின்னர், உண்மையில் அது மதிப்பானது தான் என அறிந்தால், நாம் வாங்க தயாராவோம்.
பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு(Fundamental Analysis) – இலவச வகுப்புகள் – 14 பாடங்கள்
இது தான் பங்குச்சந்தையிலும், முதலீட்டாளர்களுக்கு தேவை – தரமான நிறுவனங்களை கண்டறிவதே. உலக காரணிகளை நம்மால் தடுக்க முடியாது. நாம் செய்ய வேண்டியது, நம்மிடம் முதலீடு செய்ய பணமிருந்தால், நல்ல நிறுவன பங்குகளை கண்டறிந்து இது போன்ற காலங்களில் சிறுக சிறுக முதலீடு செய்வதே – அதுவும் மலிவான விலை என்றால் மட்டுமே. அதனால் தான் சொல்கிறேன், சந்தையின் மதிப்பை பார்க்காதீர்கள். தற்போது இந்திய பங்குச்சந்தை உச்சத்தில் உள்ளது. அமெரிக்க சந்தைகளும் தான். நமக்கு அது தேவையில்லை. நாம் முதலீடு செய்ய வேண்டும், பணம் பண்ண வேண்டும். அதுவும் நீண்ட கால வருவாயை பெருக்க வேண்டும்.
பங்குச்சந்தைகள் பல போர் காலங்களையும், பொருளாதார வீழ்ச்சிகளையும் பார்த்து விட்டது. அவை ஒன்றும் வீழ்ச்சியில் மட்டுமே செல்லவில்லை, மீண்டு எழுந்துள்ளன – மிகவும் பிரமாண்டமாய். முதலீட்டாளர்களுக்கு தேவை, பொறுமை(Patience) மட்டுமே. போரினை பார்த்து ஓடுவதற்கு அல்ல. பணத்தை கையிருப்பாக வைத்திருங்கள். சரியான பங்குகளை, சரியான விலையில் தேர்ந்தெடுங்கள். சிறுக சிறுக முதலீடு செய்யுங்கள். அடுத்து ஒரு பெரிய இறக்கத்தை எதிர்பாருங்கள். மறு முதலீடு செய்ய தயாராகுங்கள். கூட்டு வட்டி நீண்ட காலத்தில் வேலை செய்யும். தங்கத்தின் விலையையும் சற்று கவனியுங்கள்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை