தொல்லையில்லா வாழ்வுக்கு தொடர் முதலீடு !
SIP Investing for Hassle free Living
எஸ்.ஐ.பி.(Systematic Investment Plan) எனப்படும் தொடர் முதலீட்டு முறையில் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு, தங்கள் நிதி இலக்குகளை அடையும் வரை தொடர்ச்சியாக முதலீடு செய்வதில்லை. இதனால் நாம் நிர்ணயித்த இலக்கினை அடைய முடியாமல் போகலாம் அல்லது அடைவதில் தாமதம் ஏற்படலாம்.
இந்த நிதி தவறு, பின்னாளில் குடும்பத்தின் நிதி நிலைமையையும் பாதிக்கலாம். நாம் ஒரு இலக்கை(Goal) நிர்ணயித்து விட்டு, அதற்கான தொடர் வேலைகளை செய்யாமல் இருக்கும் போது அதனால் ஏற்படும் விளைவுகளை நாம் குறுகிய காலத்தில் உணர வாய்ப்பில்லை. அதனால் தான் இலக்குகள் இளமை காலத்தில் நிர்ணயிக்கப்படுகிறது. இளமை காலத்தில் நாம் சேமிக்கும் தொகை சிறிய அளவில் இருந்தாலும், நமது இலக்கை நோக்கி பயணிக்கையில் அந்த தொகை வளத்தை உருவாக்கும்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நாம் கடன் வாங்கும் போது, எவ்வாறு தவணை தொகையை சரியாக ஒவ்வொரு மாதமும் செலுத்துகிறோமோ, அதே போல முதலீட்டையும் தவறாது செய்வது, நமக்கு நாமே செய்யும் கடமை. தொடர் முதலீட்டால் பயன் பெறப்போவது நாமும், நமது குடும்பமும் மட்டுமே. நம்மை நாமே மகிழ்வித்து கொள்வது தான் தொடர் முதலீட்டின் ரகசியமே.
இதனை ஒரு உதாரணத்தின் மூலம் நாம் காண்போம். உங்களுக்கு 15 வருடங்களுக்கு பிறகு ஒரு கோடி ரூபாய் கார்பஸ்(Corpus) தொகை தேவைப்படுகிறது என வைத்து கொள்வோம். நீங்கள் செய்ய வேண்டிய மாதாந்திர முதலீடு (SIP) ரூ. 14,800 /- இதற்கு நீங்கள் 15 சதவீதம் வருவாய் தரக்கூடிய முதலீட்டை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படியெனில், அது பரஸ்பர நிதி முதலீட்டில் மட்டுமே தற்போதைய நிலையில் சாத்தியமாகும்.
11 சதவீத வட்டி வருவாய் எனில், நீங்கள் அடுத்த 15 வருடங்களுக்கு மாதாமாதம் 21,800 ரூபாயை முதலீடு செய்ய வேண்டும். இதுவே 7 சதவீதம் மட்டுமே தரக்கூடிய முதலீட்டு சாதனமாக இருக்கும் போது, உங்கள் மாதாந்திர எஸ்.ஐ.பி. தொகை 31, 400 ரூபாய். என்ன சற்று மலைப்பாக இருக்கிறதா ? மாதம் ரூ. 50,000 மற்றும் ஒரு லட்சம் என முதலீடு செய்பவர்களும் நம் ஊரில் உண்டு.
பொதுவாக எஸ்.ஐ.பி. முறையில் மாதாந்திர முதலீட்டை மேற்கொள்ளும் போது, நமக்கான முதலீட்டு காலத்தை நினைவில் கொண்டிருப்பது அவசியம். இலக்கிற்கான காலம் குறுகிய காலமாக இருக்கும் போது, செய்ய வேண்டிய மாத முதலீட்டு தொகை அதிகமாக இருக்கும். அதே வேளையில், இலக்கிற்கான காலம் நீண்ட காலமாக இருக்கும் நிலையில், நமது மாதாந்திர முதலீடும் குறைவாக அமையும். இது நமது இலக்கிற்கான தொகையை பொறுத்து மாறுபடும்.
உதாரணமாக எனக்கு 20 வருடங்களில் ஒரு கோடி ரூபாய் கார்பஸ் கிடைத்தால் பரவாயில்லை என்றால், உங்களது மாதாந்திர முதலீடு 6,600 ரூபாய் மட்டுமே. இதுவே 15 வருடங்கள் எனும் போது தான் அது 14,800 ரூபாயாக (15 சதவீத வருவாயில்) உள்ளது. அதனால் முதலீடு செய்யும் தொகையை காட்டிலும், இடைவிடாமல் தொடர்ச்சியாக முதலீடு செய்வதே அவசியம். இவை அனைத்தும் கூட்டு வட்டியின் மகிமையே !
எந்தவொரு முதலீட்டையும் மேற்கொள்ளும் போது நான்கு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இலக்கிற்கான காரணம் அல்லது பெயர்(Goal Name), இலக்கிற்கான தொகை(Goal Amount), இலக்கிற்கான காலம்(Period) மற்றும் எதிர்பார்க்கும் வருமான விகிதம்(Expected Returns). இங்கே வருமான விகிதம் என்பது நமக்கு கிடைக்கப்பெறும் வட்டி வருவாய். பெரும்பாலான நிதி இலக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்துவது இந்த வட்டி வருவாய் தான். எனவே சரியான முதலீட்டு சாதனத்தை தேர்ந்தெடுப்பது நல்லது.
உதாரணமாக நீங்கள் மாதாமாதம் 700 ரூபாயை, அடுத்த 20 வருடங்களுக்கு முதலீடு செய்கையில் உங்களுக்கு கிடைக்கும் தொகை ரூ. 10 லட்சம். இதுவே 30 வருடங்களாக இருப்பின், உங்களுக்கு கிடைக்கப்பெறும் தொகை ரூ. 49 லட்சம். கூடுதலாக பத்து வருடங்களுக்கு மட்டுமே தொடர்ச்சியாக முதலீடு செய்யும் போது, நமக்கு கிடைக்கும் தொகையும் அதிகமாக உள்ளது.
மற்றுமொரு உதாரணம் – நீங்கள் மாதாமாதம் ரூ. 10,000 /- ஐ எஸ்.ஐ.பி. முறையில் அடுத்த 20 வருடங்களுக்கு முதலீடு செய்ய முடிவு செய்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ச்சியாக 20 வருடங்களுக்கு முதலீடு செய்கையில், 15 சதவீத வருவாய் எனும் போது, முடிவில் உங்களுக்கு 1.51 கோடி ரூபாய் கிடைக்கும். ஆனால் தொடர் முதலீடு செய்வது முக்கியம்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
உங்கள் நண்பர் ஒருவருக்கும் இதே போன்று ஒரு இலக்கு உள்ளது. காலம் மற்றும் முதலீடு செய்யும் தொகையில் எந்த மாற்றமும் இல்லை. அவர் முதல் 5 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக மாதாமாதம் 10,000 ரூபாயை முதலீடு செய்து வருகிறார். சில காரணங்களால் 6வது வருடம் முழுவதும் அவர் முதலீடு செய்யவில்லை. அதாவது 12 மாதங்கள் அவர் முதலீட்டை தொடரவில்லை. பின்னர் 7வது வருடம் முதல் இலக்கு காலமான 20 வருடங்கள் வரை அவர் முதலீட்டை தொடர்கிறார். 20 ஆண்டுகளுக்கு பிறகு, உங்கள் நண்பருக்கு கிடைக்கும் முதிர்வு தொகை எவ்வளவு ?
ஆம், உங்களை விட குறைவே… எவ்வளவு தொகை குறைவு ?
உங்களுக்கும், நண்பருக்குமான இடைவெளி 10 லட்சம் ரூபாய் !!!
நண்பருக்கு, 20 வருட முடிவில் கிடைக்கப்பெறும் தொகை ரூ. 1.41 கோடி. அவர் உங்கள் தொகையை அடைய இன்னும் சிறிது காலம் முதலீடு செய்ய வேண்டும் அல்லது அவருக்கான இலக்கு நாட்கள் வந்திருக்கலாம். இப்போது இது ஒரு தொல்லையே.
நண்பர் முதலீடு செய்யாமல் விட்ட தொகை ரூ. 1.20 லட்சம் மட்டுமே (12 மாதங்கள் X 10,000/- மாத முதலீடு). ஆனால் அதற்கான இடைவெளி 10 லட்ச ரூபாய் மதிப்பில். இதனால் தான் நாம் தொடர் முதலீட்டின் அவசியத்தை வலியுறுத்துவது.
முதலீட்டில் நாம் காலத்தை தாமதப்படுத்த முடியாது. நமது குழந்தைகளின் மேற்படிப்பு(Child Education), திருமணம்(Marriage), நமக்கான ஓய்வு காலம்(Retirement) என்பவை குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற வேண்டியவை. அவற்றில் கால தாமதத்தை ஏற்படுத்தும் போது, அது நமக்கு தான் தொல்லை. எனவே இலக்கினை சரியாக திட்டமிடுங்கள். அதற்கான முதலீட்டை தொடர்ச்சியாக செய்யுங்கள். இலக்கிற்கான கார்பஸ் தொகையை, இடையில் எக்காரணத்திற்காகவும் எடுத்து விடாமல் இருப்பதும் அவசியம்.
தொல்லையில்லா வாழ்வுக்கு மட்டுமல்ல, தொடர் முதலீடு….
தொலைநோக்கு பார்வைக்கும் !
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை