வங்கி சேமிப்பு கணக்கை மூட வேண்டுமா ? – கவனிக்க வேண்டிய விஷயங்கள்
Things to note on Closure of Bank Savings Account
உலகளவில் ஏற்பட்டு கொண்டிருக்கும் பொருளாதார மந்த நிலை மற்றும் உள்நாட்டில் வங்கிகளின் வாராக்கடன் ஒவ்வொரு மக்களின் பார்வையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பெரியளவில் வணிகம் செய்பவர்களுக்கு வங்கிக்கடன் என்பது எளிமையாகவும், சிறு தொழில் செய்பவர்களுக்கு அது எட்டாக்கனியாகவும் இருப்பது மறுப்பதற்கில்லை. ஆனால், இன்று வங்கிகளின் நிலைமை மாறி கொண்டிருக்கிறது. அதாவது மோசமான நிலையிலிருந்து மீட்டெடுக்க சீர்திருத்தங்கள் வந்தவண்ணம் உள்ளன.
வங்கிகள் திவாலாக போகிறதா எனவும், அதற்கு முன் வங்கியிலிருக்கும் பணத்தை முழுவதும் எடுத்து விடலாமா எனவும் நண்பர்கள் சிலர் கேட்க தொடங்கியுள்ளனர். இன்னும் சிலரோ, வங்கி சேமிப்பு கணக்கை மூடினால் என்ன என்ற கேள்வியையும் ஆரம்பித்துள்ளனர். பயப்பட வேண்டாம், அந்த நிலைமை நம் நாட்டில் தற்போதைய நிலையில் இல்லை. உண்மை தான், நடப்பில் பொதுத்துறை வங்கிகள் நிதிச்சிக்கலில் தவித்து கொண்டிருக்கின்றன.
பொதுவாக, வங்கி சேமிப்பு கணக்கை ஒருவர் துவங்கும் போது, இரு முறைகளில் ஏதேனும் ஒரு முறை மூலம் கணக்கு ஆரம்பிக்கப்படலாம். தனியார் நிறுவனத்தில் வேலைக்கு செல்பவர்களுக்கு, நிறுவனத்தின் மூலம் பூஜ்ய இருப்பு சேமிப்பு கணக்கு துவங்கப்படும். இவர்கள் எந்தவொரு இருப்பையும்(Minimum Balance) தங்கள் சேமிப்பு கணக்கில் பராமரிக்க வேண்டிய அவசியமில்லை.
மற்றொரு முறை வாடிக்கையாளர்கள் தாங்களாகவே வங்கி கிளையில் புதிய சேமிப்பு கணக்கை துவங்குவதாகும். இவற்றுக்கு வங்கியில் சொல்லப்பட்ட குறைந்தபட்ச இருப்பை பராமரிப்பது அவசியமாகும். இவை வங்கிகள் வழங்கும் திட்டத்தினை பொறுத்து மாறுபடும்.
வங்கி சேமிப்பு கணக்கை மூடுவது என முடிவு செய்து விட்டால், அதற்கு முன்பு சில விஷயங்களை நாம் செய்தாக வேண்டும். இதன் மூலம் நமக்கு பின்னாளில் தேவையற்ற சிரமங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உங்கள் சேமிப்பு கணக்கிலிருந்து கடனுக்கான மாதாந்திர தவணை தொகை(EMI) பிடித்தம் செய்யப்பட்டு வருகிறதா, வைப்பு நிதி முதலீடு அல்லது பரஸ்பர நிதி(Deposits, Mutual Funds SIP Biller) மற்றும் காப்பீடுக்கான (Insurance Auto Debit) தொகை தானியங்கியாக பிடித்தம் செய்யப்பட உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
மேலே சொன்ன பிடித்தத்தை முதலில் நிறுத்தும் படி வங்கிக்கு அறிவுறுத்தல்களை மேற்கொண்ட பின்னர் தான் சேமிப்பு கணக்கை மூடுவதை பற்றி யோசிக்க வேண்டும். மாதாந்திர தவணைக்கு நீங்கள் வேறொரு சேமிப்பு கணக்கை சமர்ப்பிக்க நினைத்தால், அந்த அறிவுறுத்தல்களை முதலில் செய்து விடுவது சிறந்தது. இதன் மூலம் தேவையற்ற அபராத தொகையை தவிர்க்கலாம்.
உங்கள் சேமிப்பு கணக்கு செயலற்ற கணக்காக(Dormant Account) இருப்பின், அதற்கான படிவம் மற்றும் சான்றுகளை சமர்ப்பித்த பின்னரே கணக்கு மூடப்படும். செயலற்ற கணக்கினை மூட வங்கிகள் சார்பில் கட்டணம் வசூலிக்கப்படலாம். அதே போன்று துவங்கிய வங்கி கணக்கை குறுகிய காலத்தில் மூடும் போதும், வங்கிகளை பொறுத்து கட்டணம் வசூல் செய்யப்படலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
வங்கி கணக்கை மூடும் போது, அதற்கான படிவத்தை சரியாக நிரப்பி நாம் வங்கியிடம் பெற்ற சேவை சார்ந்த ஆவணங்களை திரும்ப கொடுக்க வேண்டும். உதாரணமாக கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு, காசோலை போன்றவை. அதே போல ஒருங்கிணைந்த கட்டண இடைமுக(UPI App) செயலியில் பதிவு செய்துள்ள உங்கள் பழைய சேமிப்பு கணக்கை அழித்து விடுவது நல்லது.
நடப்பு காலத்தில் குறைந்தபட்சம் ஒரு வங்கி சேமிப்பு கணக்கு இருப்பது அவசியமாகும். நாம் பெற வேண்டிய தொகை, மானியம், மற்றவர்களுக்கு அவசர காலத்தில் செய்ய வேண்டிய பண பரிவர்த்தனை, மாதாந்திர தவணைகள் மற்றும் கட்டணங்களை மறவாமல் செலுத்த தானியங்கி பரிவர்த்தனை(Auto Debit) போன்றவை வங்கி கணக்கு இல்லாமல் சாத்தியமில்லை. எதிர்காலத்தில் வங்கியே இல்லையெனினும், இது போன்ற பணப்பை கணக்கு(Wallet Account) அவசியம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை