வீட்டு வாடகை படி – வருமான வரி தாக்கல் – பாடம் 10
House Rent Allowance(HRA) – Income Tax Returns – Lesson 10
வருமான வரி வரம்பில் உள்ளவர்கள் அல்லது வருமான வரி செலுத்துபவர்கள் பெரும்பாலோருக்கு குழப்பம் ஏற்படுவதே இந்த வீட்டு வாடகை படி கணக்கில் தான். ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டு, அந்த நிறுவனத்திடம் வாடகை படியை மாதாமாதம் சம்பளத்தில் பெற்று வந்தாலும், வருமான வரி தாக்கலின் போது எவ்வளவு தொகைக்கு வீட்டு வாடகைப்படியில் வரி சலுகை பெற வேண்டும் என்பதில் தனிநபருக்கு ஐயம் ஏற்படுவது இயல்பு.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மாத சம்பளம் வாங்கும் தனிநபர் ஒருவர் வாடகை வீட்டில் தங்கியிருக்கும் பட்சத்தில், வருமான வரி தாக்கலின் போது, அதற்கான வரி சலுகையை பெறலாம். இதன் மூலம் ஒருவரின் வரி செலுத்தும் தொகையையும் குறைத்து(Save Tax) கொள்ளலாம். வருமான வரி சட்டப்படி, வீட்டு வாடகை படியை தனது வருமானத்தில் கழித்து கொள்ள பின்வரும் மூன்று நிபந்தனைகள் உதவுகின்றன.
- வேலை பார்க்கும் நிறுவனத்திடம் இருந்து பெற்ற வீட்டு வாடகைப்படி(HRA)
- அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து வரும் தொகையில் 50 சதவீதம். (50 % of Basic Salary + DA)
- வீட்டு வாடகையாக செலுத்திய தொகை(Actual Rent Paid) – அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து வரும் தொகையில் 10 சதவீதம் (10% of Basic Salary + DA).
மேலே சொன்னவற்றில் எவை குறைந்த தொகையாக வருகின்றனவோ அவற்றை தனிநபர் ஒருவர் தனது வருமானத்திலிருந்து கழித்து கொள்ளலாம். இதனை ஒரு உதாரணத்தின் மூலம் நாம் காண்போம்.
குமார் என்பவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் (அரசு நிறுவனமாக இருந்தாலும்) பணிபுரிகிறார். இவருடைய மாத அடிப்படை சம்பளம் – ரூ. 30,000/- மற்றும் மாத அகவிலைப்படி(Dearness Allowance) ரூ. 3,000/-. அவர் நிறுவனத்திடம் இருந்து மாதாமாதம் சம்பளத்தில் பெறும் வீட்டு வாடகைப்படி ரூ. 10,000/-. குமார் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில் மாதம் ரூ.12,000/- கொடுத்து வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இனி இவருக்கான வீட்டு வாடகைப்படி சலுகையை கணக்கிடுவோம்.
- நிறுவனத்திடம் இருந்து பெற்ற வீட்டு வாடகைப்படி(HRA) ஆண்டுக்கு – ரூ. 1,20,000/- ( 10,000 X 12 மாதங்கள்)
- அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து வரும் தொகையில் 50 % – ரூ. 1,98,000/- (33,000 X 12 மாதங்கள் – 50 சதவீதம்)
- வீட்டு வாடகையாக செலுத்திய தொகை(Rent Paid) ஆண்டுக்கு – [ ரூ. 1,44,000 ] – அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10% – [ ரூ. 39,600 ] = ரூ. 1,04400 /-
மேலே சொல்லப்பட்ட மூன்று நிபந்தனைகளில் (ரூ. 1,20,000 / 1,98,000 / 1,04400) குறைந்தபட்ச தொகையான 1,04400/- ரூபாய்க்கு அவர் தனது வீட்டு வாடகைப்படி சலுகையாக(HRA Exemption) கோரலாம்.
வேலை பார்க்கும் நிறுவனத்தில் வீட்டு வாடகைப்படியை பெறாதவர்கள் அல்லது சுயதொழில் செய்பவர்கள் 80GG பிரிவின் கீழ் வீட்டு வாடகைப்படி சலுகையை பெறலாம். அதே வேளையில் வேலை பார்க்கும் இடத்திலோ அல்லது வசிக்கும் பகுதியிலோ சொந்த வீட்டை கொண்டிருந்தால் 80GG பிரிவின் மூலம் வரி சலுகையை பெற முடியாது. வருமான வரிச்சட்டம் பிரிவு 80GGன் கீழ் சலுகை பெற நிபந்தனைகள்:
- மாதத்திற்கு ரூ. 5,000/-
- சரிகட்டப்பட்ட மொத்த வருமானத்தில் 25 சதவீதம்
- வீட்டு வாடகையாக செலுத்திய தொகை – சரிகட்டப்பட்ட மொத்த வருமானத்தில் 10 சதவீதம்
மேலே சொன்னவற்றில் குறைந்தபட்ச தொகைக்கு மட்டுமே ஒருவர் 80GGன் கீழ் சலுகை பெற முடியும். பொதுவாக சரிகட்டப்பட்ட மொத்த வருமானம்(Adjusted Total Income) என்பது தனிநபர் ஒருவர், ஒரு நிதியாண்டில் ஈட்டிய மொத்த வருமானத்திலிருந்து குறுகிய மற்றும் நீண்டகால ஆதாயம் மற்றும் 80C முதல் 80U வரையிலான தொகையை கழித்தது போக மீதம் வரும் தொகையாகும்.
தனிநபர் ஒருவர் தனது சொந்த வீட்டிற்கு வீட்டு கடனுக்கான வட்டி தொகையை வங்கியில் செலுத்தி வந்தாலும், வீட்டு வாடகைப்படியில் சலுகை கோரலாம். அது போல ஒருவர் தனது வீட்டு வாடகை தொகையாக ஆண்டுக்கு ரூ. 1 லட்சத்திற்கு மேல் செலுத்தி விட்டு, அதற்கான வரி சலுகை கோரினால் வீட்டு உரிமையாளரின் பாண் எண்ணை(PAN) சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.
வாடகை வீட்டில் வசிக்கும் ஒருவர், வீட்டு வாடகை தொகை செலுத்தியதற்கான ரசீதை பெற்று கொள்வது அவசியமாகும். இல்லையெனில் தான் செலுத்தும் வாடகையை ரொக்கமாக செலுத்தாமல் வங்கி கணக்கு, காசோலை அல்லது இணைய பரிமாற்றம்(Online Payment) மூலம் செலுத்தும் போது அவருக்கான விவரங்கள் பதிவு செய்யப்படும். இது பின்னாளில் வருமான வரி சிக்கலை ஏற்படுத்தாமல் இருக்க உதவும்.
இன்னும் திட்டமிடுவோம்…
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை