பங்குகளை அடமானம் வைக்கும் நிறுவனர்கள் – ரிலையன்ஸ், வோடபோன்
Pledged shares by the Promoters – Reliance Infra, Vodafone
பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளிவருவது போன்று, நிறுவனங்களின் பங்குகளில் உரிமையாளர் வைத்திருக்கும் பங்கு சதவீதமும் ஒவ்வொரு காலாண்டிலும் பங்குச்சந்தை அமைப்புக்கு தெரிவிக்கப்படும். கடந்த ஜனவரி – மார்ச் 2019ம் காலாண்டில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பங்கு வைத்திருப்பவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டன.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பி.எஸ்.இ. 500(BSE 500) பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் சுமார் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் நிறுவனர்கள் தங்கள் பங்குகளை அடமானம் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. ஜனவரி-மார்ச் மாத காலத்தில் இவர்களின் பங்கு அடமான விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் இன்ப்ரா(Reliance Infra) மற்றும் ரிலையன்ஸ் கேப்பிடல்(Reliance Capital) முறையே 22 மற்றும் 15 சதவீத பங்குகள் மார்ச் காலாண்டில் அடமான விகிதத்தை அதிகரித்துள்ளது. இதுவரை ரிலையன்ஸ் இன்ப்ராவின் மொத்த அடமானம் 98 சதவீதம் மற்றும் ரிலையன்ஸ் கேப்பிடல் 97 சதவீதமாகும். ஏற்கனவே அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்(Rcom) நிறுவனம் தனது முழு பங்குகளையும் அடமானம் வைத்து விட்டு, கடனில் தத்தளித்து கொண்டு தற்போது திவால் நிலைக்கு வந்து விட்டது.
டிஷ் டிவி(Dish TV) நிறுவனர்களின் பங்குகள் 94.6 சதவீதம் வரை அடமானம் வைக்கப்பட்டுள்ளது. ஜீ டிவி(Zee) நிறுவனம் 66 சதவீதமும், எவெரெடி(Eveready) நிறுவனர்கள் 50 சதவீதமும், சன் பார்மா 11 சதவீதமும் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை நிறுவனம் 78 சதவீதம் என்ற அளவிலும் நிறுவனர் பங்குகளை அடமானம் வைத்துள்ளது.
இது போல வோடபோன் நிறுவனம் 44 சதவீத பங்குகளை வோடபோன் ஐடியா நிறுவனத்தில் அடமானம் செய்துள்ளது. தற்போது வோடபோன் ஐடியா(Vodafone Idea) நிறுவனத்தை 71 சதவீத பங்களிப்புடன் வோடபோன் மற்றும் ஆதித்யா பிர்லா நிறுவனங்கள் நிர்வாகம் செய்து வருகிறது.
கடந்த காலாண்டில் அசோக் லேலாண்ட் நிறுவனமும் 2.3 சதவீதம் என்ற அளவில் பங்குகளை அடமானம் வைத்துள்ளது. இதன் மொத்த நிறுவனர்களின் பங்கு அடமான விகிதம் 6.7 சதவீதமாகும். பியூச்சர் குழுமத்தின் (பிக் பஜார்) பியூச்சர் லைப் ஸ்டைல் நிறுவனம் 23 சதவீத பங்குகளையும், JSW நிறுவனம் 60 சதவீத பங்குகளையும் மற்றும் ஜே.கே. டயர் 28 சதவீதமும் உரிமையாளர்களின் பங்குகளை அடமானம் செய்துள்ளது.
பொதுவாக நிறுவனர்களின் நிறுவனர்கள் தங்கள் சொந்த தேவை அல்லது வணிக நோக்கங்களுக்காக, தாங்கள் வைத்திருக்கும் பங்குகளை மற்றொரு நிறுவனத்திடமோ அல்லது வங்கிகளிடமோ அடமானம் வைப்பதுண்டு. இது ஒரு நீண்ட கால முதலீட்டாளருக்கு ஆரோக்கியமான விஷயமல்ல. நல்ல முதலீட்டாளர்கள், நிறுவனர்கள் அடமானம் வைக்கப்பட்டுள்ள பங்குகளில் முதலீடு செய்வதில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை