ஏசி, வாஷிங் மெஷின் மற்றும் காலணிகள் மீதான இறக்குமதி வரி உயர்வு
Import Duty hike on AC, Refrigerator and Footwear – 19 Items
ஏசி, வாஷிங் மெஷின், காலணிகள், வைரம் போன்ற 19 வகையான பொருட்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது மத்திய அரசு. நடப்பு கணக்கு பற்றாக்குறை இடைவெளியை குறைப்பதற்கான நடவடிக்கை என அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
19 பொருட்களின் மீதான இறக்குமதி வரி உயர்வு இன்று (27-09-18) முதல் அமலாகிறது. ஏசி மீதான அடிப்படை சுங்க வரி (Basic Customs Duty) 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 10 கிலோவுக்கு குறைவான வாஷிங் மெஷின்களுக்கு 10 % லிருந்து 20 சதவீதமாக இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
ராடிக்கல் டியர்களுக்கு (Radical Tyres) 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகவும், பிளாஸ்டிக்கிலான சமையலறை மற்றும் டேபிள் பொருட்களுக்கு 10 % லிருந்து 20 சதவீதமாகவும் சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது. காலணிகளுக்கான வரி 20 சதவீதத்திலிருந்து 25 % ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூட்கேஸ், ப்ரீப் கேஸ், மற்றும் பயண பைகளுக்கு (Suitcase, Brief Case, Trunks, Travel Bag) 15 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இது போன்ற பொருட்களுக்கு 10 % சுங்க வரி இருந்தது. விமானங்களில் பயன்படுத்தப்படும் விசை எரிபொருளுக்கு (Turbine Fuel) 5 சதவீத வரி விதித்துள்ளது. இதற்கு முன் வரி ஏதும் விதிக்கப்படவில்லை. இதன் மூலம் இனி ஒரு கிலோ லிட்டருக்கு ரூ. 2000 கூடுதல் தொகை செலவிடப்படும்.
குளியலறையில் உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு 10 % இலிருந்து 15 % ஆக வரியும், தொழில் சாராத வைரங்களுக்கு 5 லிருந்து 7.5 சதவீதமாகவும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. அணிகலன்களில் 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகவும் உள்ளது.
ஏசி மற்றும் குளிர்சாதன பெட்டிகளில் பயன்படுத்தப்படும் கம்ப்ரஸர்களுக்கும் 7.5 லிருந்து 10 % ஆகவும், ஸ்பீக்கர்களுக்கு 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக வரி விதிக்கிப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் (2017-18) மேலேயுள்ள 19 பொருட்களின் மொத்த இறக்குமதி மதிப்பு மட்டும் ரூ. 86,000 கோடியாகும். ரூபாய் மதிப்பு சரிவடைவதை தடுக்கவும் இந்த உயர்வு உதவும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை